சென்னை: ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க பல்வேறு அணிகளாகச் சிதறிக் கிடக்கின்றன. குறிப்பாக, கடந்த பிப்ரவரி மாதம் ஓ.பன்னீர் செல்வம் போர்க்கொடி எழுப்பியப் பிறகு நடந்த அரசியல் திருப்பங்கள் அனைவரும் பார்த்ததுதான். எம்.எல்.ஏ-க்கள் அணி மாறியது, கூவத்தூர் ரிசார்ட், நம்பிக்கை வாக்கெடுப்பு, எடப்பாடி ஆட்சி என்று கடந்த சில மாதங்களில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், எம்.எல்.ஏ-க்கள் கூவத்தூர் ரிசார்ட்டில் இருந்தபோது, அவர்களுக்குப் பன்னீர்செல்வம் அணி மற்றும் சசிகலா அணி கோடிகளில் பேரம் பேசியதாக, ‘டைம்ஸ் நவ்’ ஆங்கில தொலைக்காட்சி ஆதாரங்களை வெளியிட்டுள்ளது. அதில், சசிகலா அணியிலிருந்து தப்பித்து வந்து பன்னீர்செல்வம் அணியில் இணைந்த மதுரையைச் சேர்ந்த எம்.எல்.ஏ சரவணன் பேசும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
அதில் பேசும் சரவணன், அம்மாவின் மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை மர்மமும் இல்லை அதை எங்களின் அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்தி கொண்டோம், ‘சசிகலா அணியில் இணைவதற்காக 6 கோடி ரூபாய் வரை தருவதாகக் கூறினர். குறிப்பாக, தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி போன்ற கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ-க்களுக்குதான் அதிகளவு பணம் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்குத் தலா 10 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார். மேலும், எம்.எல்.ஏ-க்கள் இணைவதற்காக ஓ.பி.எஸ் அணி சார்பில் ஒரு கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாகவும், சசிகலா அணி தரப்பில் ரூ. 2 கோடி மற்றும் தங்கம் ஆகியவை வழங்குவதாக பேரம் பேசப்பட்டதாகவும் டைம்ஸ் நவ் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோவில் பேசும் மதுரை தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ. சரவணன், புறப்படும்போது 2 கோடி தருவதாக சொன்னார்கள். பிறகு அது 4 கோடி ஆகி இறுதியில் கூவத்தூர் விடுதியை அடைந்த போது 6 கோடி ஆகிவிட்டதாக கூறினார். “என்னடா இது கூடிக்கொண்டே போகிறது என்று நினைத்தேன்.. பின்னர் பணமாக கொடுக்க முடியாது. அதனால் தங்கக்கட்டிகளாக வாங்கிக் கொள்ளுங்கள் என்றார்கள். பணமாகக் கொடுத்தாலும் தங்கம்தான் வாங்கப் போகிறோம்; தங்கமாகவே கிடைத்துவிட்டால் நல்லதுதானே என்று வீட்டுக்கு ஃபோன் போட்டு சொல்லிவிட்டேன்” என்றும் அதிர்ச்சி தகவல்களை அடுக்கிக் கொண்டே போனார் சரவணன். தமிமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு ஆகியோருக்கு ஆளுக்கு பத்து கோடி கொடுக்கப்பட்டதாகவும் மற்றவர்களுக்கு அந்த அளவுக்குப் பணம் வரவில்லை என்றும் சரவணன் அந்த வீடியாவில் வருத்தப்பட்டார்.
There are no comments yet
Or use one of these social networks