சென்னை: அதிமுக ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மதுரை எம்எல்ஏ சரவணன், தனியார் தொலைக்காட்சி ஒன்றில், சசிகலா அணி தரப்பில் தங்களிடம் பேரம் பேசப்பட்டதாக கூறிய விடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக ஏம்எல்ஏக்கள், சசிகலா அணி, பன்னீர்செல்வம் அணி என இரண்டாக பிரிந்த போது, கூவத்தூர் விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த அதிமுக எம்எல்ஏக்களில், மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன், அங்கிருந்து தப்பி வந்து பன்னீர்செல்வம் அணியில் சேர்ந்தார்.
தோற்றத்தை மாற்றிக் கொண்டு கூவத்தூர் சொகுசு விடுதியில் இருந்து தப்பி வந்ததாக அவர் அப்போது பரபரப்பான பேட்டியை அளித்திருந்தார்.
இந்த நிலையில், தனியார் தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் அவர் பேசிய விடியோ நேற்று வெளியானது. ஆங்கில தனியார் தொலைக்காட்சியில் வெளியான இந்த விடியோவால் தமிழக அரசியலில் மீண்டும் ஒரு பரபரப்பு தொற்றிக் கொண்டது.
அந்த விடியோவில் பதிவாகியுள்ள முழு விவரம் வருமாறு,
கேள்வி : கூவத்தூர் எப்படி இருந்தது?
கூவத்தூரில் எந்த தப்பும் நடக்கவில்லை, அங்கு ஊடகங்களில் சொன்னது போல பெண்கள் எல்லாம் இல்லை, மிரட்டல் விடுக்கப்படவில்லை. தண்ணி மட்டுமே இருந்தது.
கேள்வி: பேரம் கமிட் பண்ணினார்களா
கமிட் எல்லாம் பண்ணவில்லை. சொல்லப் போனால் நேரடியாக எதுவுமே பேசவில்லை. பேருந்தில் ஏறும் போது 2 சொன்னார்கள். கூவத்தூர் போனதுமே 4 என்று சொன்னார்கள். அதாவது ஏர்போர்ட் போகும் போது 2 ஆக இருந்தது பிறகு கவர்னரை பார்க்கப் போகும் போது 4 ஆக ஆனது. அப்புறம் 6 என்று சொன்னார்கள். இப்படி ஏற்றிக் கொண்டே போகிறார்களே கொடுப்பார்களா என்று தோன்றியது.
அடுத்த நாள் வந்து எங்குமே பணம் இல்லையாம், எனவே, பணத்துக்குப் பதிலாக தங்கம் தருகிறோம் என்று சொன்னார்கள். அடடா பணம் கொடுத்தாலும் அதை எடுத்துக் கொண்டு போய் தங்கம் தான் வாங்க வேண்டும். அங்கும் ஏமாற்றி விடுவார்கள். எப்படி வாங்குவது என்று தெரியாது. எனவே எல்லா பிரச்னையும் முடிந்துவிட்டது.
இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வென்ற பிற கட்சி எம்எல்ஏக்களுக்கு ரூ.10 கோடி பேரம் பேசப்பட்டது. ஓபிஎஸ் முதல்வரானால் நாங்கள் 11 பேரும் (ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள்) அமைச்சர்களாகி விடுவோம். ரூ.500 கோடிதான் எங்கள் இலக்கு” என சரவணன் பேசியிருந்ததாக காட்சிகள் இருந்தன.
அதை விட்டுவிட்டு கூவத்தூரில் போட்டு அடைத்துவைத்துவிட்டு, மீடியாக்கள் மூலமாக மக்களுக்குத் தெரிந்து எல்லாமே போச்சு என்று முடித்திருக்கிறார்.
There are no comments yet
Or use one of these social networks