சென்னை: ஸ்டண்ட் கலைஞராக இருந்து, வில்லன் நடிகராக வளர்ந்து ‘அம்மையப்பா’ என்ற ஒரே படத்தில் கதாநாயகனாக நடித்து மார்க்கெட் போய், சினிமாவை விட்டு ஓய்ந்தவர் நடிகர் பொன்னம்பலம். இவர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பில்லாமல் இருந்த பொன்னம்பலம், அதிமுகவில் சேர்ந்தார்.

அக்கட்சியின் பேச்சாளராக பொன்னம்பலம் சுற்றித் திரிந்து பேசி வந்தார். இந்நிலையில், திடீரென ஜெயலலிதா மரணம் அடைந்தார். அதன் பிறகு எந்த அணியில் இணைவது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தார் பொன்னம்பலம். இதனால் சத்தமில்லாமல் அமைதியாக இருந்த அவர் இன்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார். பொன்னம்பலம் கப்சா நிருபரிடம் கூறியதாவது: “தற்போதைய நிலவரப்படி தமிழகம் கலவர பூமியாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சினிமாவில் சண்டை காட்சி வந்தால் தானே எங்களைப் போன்ற அடியாட்களுக்கு மதிப்பு. எம்.ஜி.ஆர். ஜெயலலிதா காலத்தில், அதிமுகவில் அடக்குமுறை, சர்வாதிகாரம், அடிமைத்தனம், காலில் விழும் கலாசாரம், போன்றவற்றால் ‘அம்மையும் அப்பனும்’ (எம்.ஜி.ஆர். ஜெயலலிதா) கட்சியை கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். அதிமுகவில்இப்பொழுது தலைக்கு தலை நாட்டாமை நடக்கிறது. ‘நாட்டாமை’ படத்தில் சமக தலைவர் சரத்குமாருக்கே வில்லனாக நடித்த என் கிட்டயே வாலாட்டுகிறார்கள். நான் ‘முத்து’ படத்தில் ரஜினிகாந்தையை சாட்டைய வைத்து மொத்தியவன்.

இந்தியன் படத்தில் நான் ஒரு ஒற்றைமாட்டு வண்டியில் நிறைய மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வருவேன். அந்த மாடு முடியாமல் படுத்துவிடும். அந்த மாட்டை அடித்து துன்புறுத்துவேன். அப்போது ப்லூக்ராஸ் உறுப்பினர் மனிஷா கொய்ராலா வந்து ஏன் இந்த மாட்டை இப்படி துன்புத்துறே என்று கேட்பார். அதற்கு நான் “மாடு என் மாடு, குச்சி என் குச்சி. நீ எதுக்கு கூவறே என்பேன்” மனிஷா “நான் ப்லூக்ராஸ் மெம்பர்” என்று சொல்ல, இவர் “புளுவோ பூச்சியோ, …” என்று வசனம் பேசுவேன். மாடு, துன்புறுத்தல் என்று ப்லூக்ராஸ்சுக்கே ரெட் க்ராஸ் கொடுத்தவன் நான்.

தமிழகத்தில் பாஜக வை பலமிக்க சக்தியாக வளர்க்க போகிறோம் என்று தமிழிசை அக்கா கூறிவருகிறார்கள், முதல் கட்டமாக பொன்னம்’பலம்’ ஆகிய நான் இணைந்துள்ளேன். மேலும் ஆறடி, ஏழடி உயரமுள்ள அடியாட்கள் படையை விரைவில் இணைப்பேன். பெயரில் ‘பொன்’ இருப்பதால் ரைமிங்காக இருக்கட்டுமே என்று அய்யா பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் கட்சியில் இணைந்தேன். கதைநாயகர்களாக இருந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்றவர்கள் இல்லாததால், தெலுங்குப்பட வில்லன் போல் இருக்கும் அமித் ஷா, மோடி போன்றவர்களால் தான் மாட்டையும், நாட்டையும் காப்பாற்ற முடியும் என்று பாஜகவில் என்னை இணைத்துக் கொண்டேன்.” என்றார்.

பகிர்

There are no comments yet