சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் மருத்துவ செலவான ரூ.6 கோடியை அப்பல்லோ மருத்துவமனைக்கு அதிமுக அம்மா அணி சார்பில் அளிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி உடல்நலக்குறைவினால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் அவர் சிகிச்சை பெற்றார். சிகிச்சை பலனின்றி கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மரணமடைந்தார். 75 நாட்களுக்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்காக மருத்துவ செலவு ரூ.6 கோடி. இந்த மருத்துவ செலவு தற்போது அதிமுக (அம்மா) அணி கட்சி சார்பிலேயே வழங்கப்பட உள்ளது.

சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். அவசர ஆலோசனை கூட்டத்தில் ரூ.6 கோடிக்கான காசோலை, சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கரிடம் வழங்கப்பட்டது. அதனை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்திடம் வழங்கினார்.

பின்னர் நமது கப்ஸா நிருபரிடம் பேசிய அமைச்சர் கூறியதாவது: அம்மாவின் மருத்துவச் செலவு ஆறு கோடி ரூபாயை கட்சி சார்பிலே அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படியே கூட்டம் முடிந்ததும் நான் அப்போலோ மருத்துவமனைக்குச் சென்று ஆறு கோடி ரூபாய்க்கான காசோலையைக் கொடுத்து விட்டு, மிச்சம் இருந்த சிசி டிவி ஆதரங்களையம் வாங்கி வந்து விட்டேன்.

இந்த ஆறு கோடி என்பது ஒரு எம்.எல்.ஏவுக்கான கூவத்தூர் செலவுதான். அங்கும் ஆறு கோடிதான் பேரம் நடந்தது, அப்பல்லோவுக்கும் ஆறு கோடி, அம்மா இறந்தும் ஆறு மாதம் ஆகி விட்டது எனவே ஆறு எங்களுக்கு ராசியான நம்பர் என்றார்.

There are no comments yet