சென்னை: “இன்று தமிழகத்தில் இருக்கும் தலைவர்களுக்கு சாதி, மதம் என்று ஏதாவது ஒரு முத்திரை இருக்கிறது. ‘நான் பொதுவானவன்; தமிழர்களுக்காகப் போராடுகிறேன்’ என்று நான் சொல்லிக் கொள்ளலாம். ஆனால், கலைஞரை, ஜெயலலிதாவை அங்கீகரித்ததுபோல பொது நிலையில் இருந்து மக்கள் என்னை ஏற்கக்கூடிய நிலை உண்மையில் இல்லை. யதார்த்தமும் அதுதான்!’’ பொறுமையாகப் பேசுகிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன். வெற்றிடங்களை நிரப்பும் அவசரம் அவரிடம் இல்லை. ரஜினியின் அரசியல் என்ட்ரி, அ.தி.மு.க அரசின் திரிசங்கு நிலை, கருணாநிதி வைரவிழா புறக்கணிப்புகள், மோடி அரசின் மாட்டுக்கறித் தடை என அரசியல் பரபரப்புகளுக்கிடையே பேசுகிறார் திருமாவளவன்.
‘`தி.மு.க தலைவர் கருணாநிதி வைரவிழாவில் பங்கேற்க, உங்களுக்கு அழைப்பு விடுக்காததை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’
‘`விழாவைப் பார்க்க அழைத்தார்கள். விருந்தினராக அழைக்கவில்லை. ஆசிரியர் வீரமணி, திருமாவளவன் போன்றவர்களைத் தவிர்க்க வேண்டும் என்பது அவர்களது நோக்கமாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. கலைஞருக்குப் பிறகு கட்சியின் தலைமையை ஸ்டாலின் எடுத்துள்ளார். அவர் ஒரு தேர்தலைச் சந்தித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் என்ற நிலைக்கு உயர்ந்துள்ளார். இன்றைக்குக் கலைஞருக்குப் பிறகு ஸ்டாலின் தி.மு.க-வின் வலுவான தலைமை என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அந்தக் கோணத்தில் இருந்து அவர்கள் சிந்தித்திருக்கலாம். தேசியத் தலைவர்களை அழைத்து இப்படி ஒரு விழாவை நடத்துவதன் மூலமாக ஸ்டாலின் தலைமை என்பது தேசியத் தலைவர்களால் அங்கீகரிக்கப்பட்டது என்பதைப் பதிவு செய்வது நோக்கமாக இருந்திருக்கலாம். அது வரவேற்கத்தக்கது. விழாவும் நாம் எதிர்பார்த்த மாதிரி மதவாத சக்திகளுக்கு எதிராக, எல்லோரும் பேசக்கூடியதாக அமைந்திருந்தது. ஆனால், தமிழகத்தைச் சார்ந்த தலைவர்களையும் அழைத்திருக்கலாம்.’’
‘`பா.ஜ.க-வின் மூன்று ஆண்டுக் கால ஆட்சி குறித்து உங்கள் விமர்சனம் என்ன?’’
‘`ஓர் ஆட்சியின் மூன்றாவது ஆண்டு என்பது முக்கியமான காலகட்டம். அந்தக் கால கட்டத்தில்கூட மக்கள் நலனை முன்வைத்து நல்ல காரியங்களைச் செய்ய மோடி அரசுக்கு அக்கறை இல்லாமல் போய்விட்டது என்பதை நினைக்கும்போது ஏமாற்றமாக இருக்கிறது. நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைத்துவிட்டார்கள். இனி, தேர்தல் ஜுரம் தொடங்கிவிடும். அதற்கான அணி சேர்ப்பில்தான் இறங்குவார்கள். இதுவரை சுதந்திரமாகச் செயல் பட்டவர்களால், இனி அப்படிச் செயல்பட முடியாது.
உள்ளாட்சி முதல் நாடாளுமன்றம் வரை ஒற்றைக் கட்சி ஆட்சிமுறையை நோக்கி பா.ஜ.க பயணிக்கிறது. அவர்களுடைய முனைப்பைத் தவறு என்று சொல்ல முடியாது. அவர்களுடைய கொள்கைகளைச் சொல்லியோ, சேவைகளைச் சொல்லியோ ஓட்டு கேட்கலாம். ஆனால், மத உணர்வுகளையும், சாதிய உணர்வுகளையும் தூண்டிவிட்டு வெறுப்பு அரசியலை விதைத்து, மக்களிடையே மோதலை உருவாக்கி, அதில் குளிர்காய நினைக்கிறார்கள். அதைத்தான் தவறு என்று கண்டிக்கிறோம்.
அவர்களுக்கு மக்களவையில் மெஜாரிட்டி இருந்தாலும், மாநிலங்களவையில் மெஜாரிட்டி இல்லை. அதனால்தான் ஒவ்வொரு மாநிலத்திலும் தங்கள் செல்வாக்கை நிலை நாட்டத் துடிக்கிறார்கள். மாநிலங்களவையிலும் பெரும்பான்மையைப் பெற்றுவிட்டால், பி.ஜே.பி-க்கு எதேச்சதிகாரம் வந்துவிடும். கொடுங்கோல் ஆட்சி வரும். இந்திய அரசமைப்புச் சட்டப்படி ஆட்சி நடைபெறாது. மனு சட்டம்தான் நாட்டை ஆளும்.’’
‘`மாட்டிறைச்சித் தடை குறித்த உங்கள் பார்வை என்ன?’’
‘`மோடி அரசு, மாட்டிறைச்சிக்குத் தடை விதித்திருப்பது ஜீவகாருண்ய கொள்கை அடிப்படையில் அல்ல. இந்த அறிவிப்பின் மூலம், இந்து சமயத்தினரைத் தன் வயப்படுத்துவதும், தக்கவைத்துக்கொள்வதும் பி.ஜே.பி-யின் வெளிப்படையான செயல்திட்டம். பாகிஸ் தானுக்கு எதிரான வெறுப்பு, இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு என்பதுபோல, இதுவும் அரசியல் ஆதாயத்துக்குப் பயன்படுத்தப்படும் வெளிப்படையான ஒன்று. ஒட்டுமொத்த இந்தியாவையும் கார்ப்பரேட் மயமாக்கப்பட்ட தேசமாக மாற்ற வேண்டும் என்பதுதான் பி.ஜே.பி-யின் மறைமுகமான செயல்திட்டம். பொருளாதாரம் பரவலாக்கப்படுவதும், அதன் மூலம் அந்தந்தப் பகுதிகளில் உள்ள உழைக்கும் மக்கள் அதிகார வலிமை பெறுவதையும் பி.ஜே.பி நலனுக்கு எதிரானதாகவே அவர்கள் நினைக்கிறார்கள். நரேந்திரமோடியை ஆர்.எஸ்.எஸ் உருவாக்கியது என்று சொன்னாலும், அவரைப் பிரதமராக நாற்காலியில் உட்கார வைத்ததில், கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்கு பெரியது.’’
‘`இப்போதுள்ள இளைஞர்களுக்கு வகுப்புவாதம், மனுதர்மம் பற்றி புரிந்துகொள்ளும் சக்தி இருக்கிறதா?அதுபற்றிப் பேசுகிறார்களா?’’
‘`சாதாரண மக்களிடமும் இளைஞர்களிடமும் அதை எப்படி எதிர்பார்க்க முடியும்? கல்வி, வேலைவாய்ப்பு என்கிற மனோநிலையில்தான் இன்றைய இளைஞர்கள் வளர்க்கப்படுகிறார்கள். அவர்களிடம் கோட்பாட்டுப் புரிதல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கலாம்; தவறு இல்லை. ஆனால், அது நடைமுறையில் சாத்தியம் இல்லை. ஏனென்றால், அதைப் பேசக்கூடிய கட்சிகள், இயக்கங்கள் அல்லது தலைவர்கள் எண்ணிக்கை மிகவும் அரிதாகிவிட்டன. பெரிய அறிவு ஜீவிகள் என்று நினைத்துக்கொண்டிருக்கும் கட்சித் தலைவர்களுக்குக்கூட மதவெறி, சாதிவெறி, மதுக் கொடுமை ஆகியன பற்றிய கவலை இல்லை. அது எவ்வளவு ஆபத்தானது என்பது அவர்களுக்குப் புரியவே இல்லை.
பி.ஜே.பி இல்லை என்றால், காங்கிரஸ் என்ற மனநிலையில்தான் இருக்கிறார்கள். தி.மு.க பிடிக்காவிட்டால் அ.தி.மு.க; அ.தி.மு.க பிடிக்காவிட்டால், தி.மு.க! இப்படித்தான் அவர்களின் அரசியல் அணுகுமுறை உள்ளது.
‘சோஷியல் இன்ஜினீயரிங்’ என்ற பெயரில், ஒவ்வொரு சாதியையும் தனித்தனியாக அணி திரட்டும் வேலைகளை பி.ஜே.பி செய்கிறது. கடந்த 20 வருடங்களில், ‘ஒரு சாதிச் சங்கத்தை ஆரம்பித்தால், அரசியல் கட்சியைத் தொடங்கிவிடலாம்; அதில் அரசியல் ஆதாயம் தேடலாம்’ என்பதில் முன்மாதிரியாக இருக்கிறது பா.ம.க! அதற்குப் பிறகுதான் நூற்றுக்கணக்கான சாதிச் சங்கங்கள் தமிழகத்தில் உருவாயின. அதற்கு முன்னர் எத்தனையோ சாதிச் சங்கங்கள் இருந்தாலும், வெளிப்படையாக வெளியே வர மாட்டார்கள். சாதியை யாரும் பெருமையாகப் பேசியது கிடையாது. இந்த மாதிரி அரசியல் கட்சிகள் இருக்கும்போது ‘சோஷியல் இன்ஜினீயரிங்’ என்கிற பெயரில் இந்தச் சமூகத்தைப் பிளவுபடுத்தி ஒவ்வொரு சாதிக்கு இடையிலும் முட்டலையும் மோதலையும் உருவாக்கக்கூடிய பி.ஜே.பி-யின் சதியை எவ்வாறு புரிந்துகொள்வார்கள்?
தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் வெறுப்பு அரசியலை பி.ஜே.பி-யால் வெற்றிகரமாக செய்ய முடியாது; தலித் வெறுப்பைத்தான் முன்னிறுத்த முடியும். ராமதாஸ் அதை வெற்றிகரமாக தருமபுரித் தேர்தலில் செய்து, தனது மகனை வெற்றி பெற வைத்தார். அதை பி.ஜே.பி ஊக்கப்படுத்துகிறது. ‘சாதி ஓட்டுகளைத் திரட்டி வைத்துக்கொள்; என்னோடு கூட்டணி சேர். உனக்கு அதிகாரத்தில் பங்கு கொடுத்து விடுகிறேன்’ என்பதைத்தான் ‘சோஷியல் இன்ஜினீயரிங்’ என்று அவர்கள் சொல்கிறார்கள். இது மிகவும் ஆபத்தானது.”
‘`இனிமேல் சாதியை முன்னிறுத்த மாட்டோம் என்று பா.ம.க-வினர் சொல்லியிருக்கிறார்களே?’’
‘`ராமதாஸ் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு யுக்தியை எடுப்பார். போன தடவை தலித் வெறுப்பை எடுத்தார். இன்றைக்கு இருக்கும் சூழ்நிலைக்கு ஏற்ப பி.ஜே.பி-யோடு இணைந்து போவது என்று முடிவு எடுத்தால், அதற்கு ஏற்றாற்போல நிலைப்பாடுகள் மாறும். அவரிடம் உண்மையான சாதிப் பாசமும் இல்லை; மொழி உணர்வும் இல்லை; இன உணர்வும் இல்லை. முழுக்க முழுக்க அரசியல் ஆதாயம்தான்.’’
‘`ரஜினியின் அரசியல் என்ட்ரி பி.ஜே.பி-க்கு சாதகமாக இருக்கும் என்கிறார்களே?’’
‘`திரைப்படம் ஒன்றில் `என் வழி தனி வழி’ என்று ரஜினி வசனம் பேசுவார். அந்த மாதிரி அவரது அரசியல் பயணம் அமையுமேயானால், அது அவருக்குச் சாதகமாக இருக்கும். அவர் தன்னை வேறு யாரோடும் அடையாளப்படுத்திக் கொண்டால், அந்த அரசியல் கட்சி மீது என்ன பிம்பம் படிந்திருக்கிறதோ, அது இவர் மீதும் படியும். பி.ஜே.பி என்றால், அது மதவாதக் கட்சி. காங்கிரஸ் என்றால், ஊழல் இமேஜ் இருக்கிறது. பி.ஜே.பி-யோடு அவர் சேர்ந்தால், தொடக் கத்திலேயே தலித் மற்றும் சிறுபான்மை மக்களின் எதிர்ப்பை அவர் சம்பாதிக்க வேண்டியது வரும். எனவே, எந்த அரசியல் கட்சியோடும் அவர் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள மாட்டார் என்றுதான் நினைக்கிறேன். சாதிய மதவாத சக்திகளுடன் அவர் ஐக்கியப்படுத்திக் கொள்ள வேண்டாம் என்பதே எங்கள் விருப்பம்.’’
‘`இப்போதைய தமிழக அரசியல் சூழ்நிலையில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என்று நினைக்கிறீர்களா?’’
‘`ஆமாம். எனவேதான், ரஜினி அரசியலுக்கு வரமுடியும் என்று அழுத்தமாகச் சொல்ல முடிகிறது. அவர் நிச்சயம் வருவார். கருணாநிதி, ஜெயலலிதா போன்றவர்களின் இடத்தை நிரப்பக்கூடிய அளவுக்கு வசீகரத் தலைமை தமிழகத்தில் இல்லை. ரஜினி அந்த இடத்தை நிரப்பக்கூடும்.
தமிழ்நாட்டின் இளைய தலைமுறை இன்னும் சினிமாக் கவர்ச்சியிலிருந்து விடுபட்டதாகத் தெரியவில்லை. சமூக வலைதளங்களில் இளைஞர்கள் எழுதுவதைப் படிக்கும்போது, அவர்களின் அரசியல் அறிவு, புரிந்துகொள்ளும் தன்மை மிகக் குறைவாகவே இருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. சினிமாத்தனமான விஷயங்களில் மிக ஆர்வமாக இருக்கிறார்கள்.ரஜினிபோல யாராவது திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்கள் வந்துவிட்டால், தி.மு.க-வுக்குச் சவால் விடும் ஒரு கட்சியாக இருப்பார்கள். ஆனால், ரஜினி ஒரு பெரிய சக்தியாக நிற்பார். முன்னர் இருந்த கவர்ச்சி அவருக்கு இப்போது இல்லை என்று சிலர் சொல்வார்கள். போட்டிக்குள் போன பிறகுதான் அதுபற்றித் தெரியும்.’’
‘`தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வசீகரமான தலைவர் இல்லையா?’’
‘`தி.மு.க-வில் கலைஞருக்கு அடுத்து ஸ்டாலின் தலைவராக வந்துள்ளார். அவரை சாதி, மத அடிப்படையில் பார்க்க மாட்டார்கள். ஆனால், தி.மு.க வாக்கு வங்கியைத் தாண்டி பொதுவான மக்களின் நம்பிக்கையை, வரவேற்பைப் பெறக்கூடிய அளவுக்கு அவருக்கு இன்னும் ஓர் அங்கீகாரம் கிடைத்தது மாதிரி தெரியவில்லை. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா மீதான வெறுப்பு, தி.மு.க-வுக்கு அருமையான வாய்ப்பாக இருந்தது. ஆனாலும், ஜெயலலிதா அவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றார். ஜெயலலிதாவை வீழ்த்தும் அளவுக்கான வலிமையைத் தி.மு.க பெறவில்லை; அல்லது ஸ்டாலின் தலைமை பெறவில்லை என்பதுதானே உண்மை.’’
‘`ரஜினிக்கு தலித் ஆதரவாளர் என்று விமர்சனங்கள் வருகிறதே?’’
‘`சிலர் சாதிய உணர்வு அடிப்படையில் இந்த விமர்சனங்களை முன்வைக்கிறார்கள். இயக்குநர் ரஞ்சித் தலித் என்பதால், அப்படிச் சொல்கிறார்கள். மற்ற இயக்குநர்களைப் போல் அல்லாமல், இயக்குநர் ரஞ்சித் தன்னை ஒரு தலித் என்று அடையாளப்படுத்திக் கொண்டதுதான் சர்ச்சை. இதில், ரஜினியையும் போட்டுக் குழப்புகிறார்கள். அவருக்கு அப்படி முத்திரை குத்துவது சரியல்ல. அப்படி அவருக்கு எந்த நோக்கமும் இல்லை. ரஞ்சித் எடுக்கும் படத்தில் பல கலைஞர்களுக்கிடையே ரஜினி ஒரு நடிகர். ரஜினி ரசிகர்கள் எல்லாச் சமூகத்திலும் சாதியிலும் இருக்கிறார்கள். அனைவருக்கும் அவர் பொதுவானவர்.’’
‘`விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எதிர்காலத் திட்டம் என்ன?’’
‘`நாங்கள் ஆட்சியைப் பிடிக்கப்போகிறோம் என்று பூச்சாண்டி காட்ட விரும்பவில்லை. அதுபற்றிய கவலையும் எங்களுக்கு இல்லை. அரசியலில் எங்கள் களம் எது என்பது தெளிவாகவே இருக்கிறது. நாங்கள் வலுவாகக் காலூன்றி இந்தக் களத்தில் இருக்கிறோம். எங்களுடைய பயணம் என்பது சட்டமன்றத்துக்கும் நாடாளுமன்றத்துக்கும் ஆட்களை அனுப்புவது மட்டும் இல்லை. எங்கள் சமூகத்துக்குள் ஒரு தீய அரசியல் திட்டமிட்டு விதைக்கப்படுகிறது. அதைத் தடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறோம்.’’
‘`வைகோ, விஜயகாந்த் ஆகியோருடன் தொடர்பில் இருக்கிறீர்களா?’’
‘`வைகோ, புழல் சிறைக்குள்ளே இருக்கும்போது நானும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் முத்தரசனும் சென்று பார்த்தோம். ஜெயிலுக்குள் அவர் சுறுசுறுப்பாக உற்சாக மாகத்தான் இருந்தார். ‘ஜாமீன் போடுங்கள்’ என்று சொன்னோம். அப்போதைய சூழ்நிலையில், ‘ஜாமீன் போடும் மனநிலை இல்லை’ என்று சொன்னார். அதன்பின்னர் 15, 20 நாள்களில் ஜாமீன் போட்டு வெளியே வந்துவிட்டார். சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு விஜயகாந்தைப் பார்க்க முயன்றோம்; முடியவில்லை.
எல்.கே.சுதீஷிடம், ‘அவரைச் சந்திக்க வேண்டும்’ என்ற விருப்பத்தைச் சொல்லியிருக்கிறேன். நல்ல உடல்நிலையோடு இருந்திருந்தால், இப்போதைய அரசியல் சூழ்நிலையில் விஜயகாந்த் மாபெரும் சக்தியாக இருந்திருப்பார்.’’
“எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் செயல்பாடு எப்படி இருக்கிறது?’’
‘`மத்திய அரசின் தலையீட்டால், தமிழக அரசு முடங்கிக்கிடக்கிறது. ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளவே போராடிக் கொண்டிருக்கிறார்கள். அதனால், அவர்களால் சுதந்திரமாக முடிவெடுக்க முடியவில்லை. ஆளும் கட்சிகளை அச்சுறுத்த வருமான வரித்துறையையும் சி.பி.ஐ-யையும் பயன்படுத்துகிறது மத்திய அரசு. அதை வைத்து மிரட்டி, அ.தி.மு.க என்கிற ஆளும் கட்சியை கிட்டத்தட்ட பலவீனப்படுத்திவிட்டார்கள்.’’
“அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில், எடப்பாடி பழனிசாமி அரசு ஐந்தாண்டு ஆட்சியை முழுமையாகத் தருமா?’’
‘`அவர்களுக்குள்ளேயே பிரிந்து மோதலை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்களே? அவர்களுக்கிடையே சமரசம் ஆகிக் கட்சியையும் ஆட்சியையும் காப்பாற்றினால் நல்லது. அதுதான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அவர்கள் கொடுக்கும் மரியாதை. ஆட்சி போனாலும் பரவாயில்லை, கட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்று போட்டி போட்டார்கள் என்றால், ஆட்சி தொடர வாய்ப்பு இல்லை.’’
‘` `தமிழகத்துக்கு நிறைய செய்துகொண்டிருக்கிறோம்; வஞ்சிக்கவில்லை’ என்று தமிழிசை உள்ளிட்ட பி.ஜே.பி தலைவர்கள் சொல்லிவருகிறார்களே?’’
‘`ஆட்சிக்கு வந்தபோது எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை தமிழகத் துக்குச் செய்யவிருப்பதாக அறிவித்தார்கள். அவையெல்லாம் மூன்று ஆண்டுகளாகியும் அறிவிப்பாகவே இருக்கின்றன. நாம் கேட்ட வறட்சி நிவாரண நிதியை இன்னும் தரவில்லை. வர்தா புயல் நிவாரண உதவி இன்னும் முழுமையாக வந்தடையவில்லை. அணு உலைத் திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம் என்று மக்கள் விரும்பாத, நமக்கு எதிரான பல திட்டங்களைத் திணிக்கிறார்கள். மாநில அரசு விடுத்துள்ள எந்தக் கோரிக்கைக்கும் அவர்கள் செவிசாய்க்கவில்லை. அதற்கு மாறாக, ஆளும் கட்சியான அ.தி.மு.க-வை மறைமுகமாக அச்சுறுத்தி ஒரு செயல்படாத அரசாக முடக்கி வைத்திருப்பதுதான் பி.ஜே.பி தமிழகத்துக்கு செய்திருக்கிற சேவை.”
தொடர்ந்து நம் கப்ஸா நிருபரிடம் பேசும் போது ‘ரஜினி கபாலி படத்தில் தலித் காவலராக நடித்து பணம் பார்த்தார், நானும் அது போல் தான் தலித் தலைவர் என்று சொல்லி ஊரை ஏமாற்றி, என இன மக்களையும் ஏமாற்றி கட்சி நடத்தி காசு பார்க்கிறேன். எனவே நானும் ரஜினியும் ஒண்ணு தலித் வாயில் மண்ணு என்று ரைமிங் பாடினார்.
There are no comments yet
Or use one of these social networks