சென்னை: மதுரை எம்.எல்.ஏ சரவணனின் ரகசிய வீடியோ ஒரு தொலைக்காட்சியில் வெளியான பிறகு அ.தி.மு.க அணிகளுக்கிடையே சலசலப்பு அதிகரித்துள்ளது. திகார் சிறையிலிருந்து வெளிவந்த பின்பு டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவளித்து வரும் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே போகிறது. இதனால் கடும் பாதிப்புக்குள்ளானவர் ஓ. பன்னீர்செல்வம் தான். தர்மயுத்தம் ‘செல்லாகாசாகி’ கடைசியில் இருக்குமிடமே தெரியாமல் போய்கொண்டிருக்கிறார் பன்னீர்செல்வம். உண்மையில் பன்னீர் மதிப்புமிக்க தலைவராகவோ அல்லது மக்கள் விரும்புகிறவராகவோ.. அல்லது சாதீய பின்புலத்தில் அறியபடுகிறவராகவோ நிச்சயமாக இல்லை. பின்பு ஏன் இந்த தர்மயுத்தம்? அதிமுக சிதிலமடைய வேண்டுமென்ற பாஜகவின் கோட்பாட்டின் ஒரு பகுதியாக பன்னீரை தூக்கி நின்றன ஊடகங்கள். கூவத்தூரில் அடைத்துவைக்கப்பட்ட எம்.எல்.ஏக்களுக்கு தகுந்த விலை தருவதாக பன்னீரும் பேரம் பேசியதாக செய்திகள் வருகின்றன.. மன்னார்க்குடி வகையறாக்களுக்கு கொஞ்சமும் குறைவில்லாமல் இவர்களும் பேரம் பேசியிருக்கிறார்கள். கூவத்தூரின் மர்மங்கள் இனியும் வரும். அப்போது பன்னீர்கள் மட்டுமல்ல எடப்பாடிகளும் விரட்டப்படுவார்கள். கொள்ளையர்களுக்கும் கூட்டுக் களவாணிகளுக்கும் ஜெயலலிதா மரணம் பற்றி எந்த கவலையுமில்லை இருக்கிற காலம் வரை எவ்வளவு சேர்க்கமுடியுமென்ற ஒரே சிந்தனை மட்டுமே உள்ளதாக தெரிகிறது.

இரட்டை இலைக்கு லஞ்சம் தர முயன்றதாக தினகரன் 34 நாட்கள் சிறைவாசத்துக்கு பின்னர் கடந்த 3-ந்தேதி திகார் சிறையில் இருந்த விடுதலையானார் என்பது அனைவரும் அறிந்ததே.. ஜெயிலில் இருந்து வெளிவந்ததும் நிருபர்களுக்கு பேட்டி அளித்த தினகரன், என்னை கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம் பொதுச் செயலாளரான சசிகலாவுக்கு மட்டுமே உள்ளது. என்னை யாரும் ஒதுக்கி வைக்க முடியாது என்று கூறினார். கட்சிப்பணிகளில் தீவிரம் காட்டப் போவதாகவும் கூறினார். கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட தினகரன் மீண்டும் கட்சி பணிகளில் ஈடுபடப் போவதாக அறிவித்ததை அமைச்சர்கள் சிலர் ஏற்கவில்லை. அமைச்சர் ஜெயக்குமார், தினகரனை கட்சியினர் சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்தார். ஆனால் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களோ அணி திரண்டு சென்று தினகரனுக்கு ஆதரவு தெரிவித்தனர். அவர்கள் அமைச்சர்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இதனால் தினகரனுக்கு எதிராக பேசிய அமைச்சர்கள் அடங்கிப் போனார்கள்.

இந்நிலையில், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, டி.டி.வி.தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சந்தித்து அவசர ஆலோசனை நடத்தினர். தலைமைச் செயலகத்திலுள்ள முதல்வரின் அறையில் இந்தச் சந்திப்பு நடந்துள்ளது. தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் வெற்றிவேல், தங்கத்தமிழ்செல்வன், செந்தில் பாலாஜி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பின்போது, ‘ஆட்சியை நீங்கள் வழிநடத்துங்கள். கட்சியை தினகரன் வழிநடத்துவார்’ என முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தினகரனை முன்னிலைப்படுத்தினால் மட்டுமே குடியரசு தலைவர் தேர்தலில் ஆதரவு எனவும், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா தினகரன் தலைமையில்தான் நடக்க வேண்டும் என தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் முதல்வரை நெருக்கடிக்கு ஆளாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த சந்திப்பு குறித்து கப்சா நிருபரிடம் கூட்டாக பேட்டியளித்த எம்.எல்.ஏக்கள், “தினகரனை அடுத்த எம்.ஜி.ஆர் ஆக்காமல் விடமாட்டோம். அதிமுகவின் அதிகார சக்தியாகவும், சர்வாதிகார சக்கரவர்த்தியாகவும் உருவெடுக்க காலில் விழுந்து காலம் பூரவும் பாத பூஜை செய்வோம், அம்மாவின் சொத்துக்கள் காலியாகும் வரை தினகரன் எங்களுக்கு ஏடிஎம் மிஷின் போல பணம் வழங்கும் பணி தொய்வின் நடைபெறும் என்று உறுதியளித்துள்ளார். எனவே வடிவேலின் வீரபாகு பேக்கரி டீலிங் போல ஆட்சியை நீங்க வச்சிக்குங்க, கட்சியையும் சின்னத்தையும் நாங்க வச்சிக்கிறோம் என்று அண்ணன் தினகரன் தரப்பில் சொல்லி விட்டு வந்துவிட்டோம்” என்றனர்.

பகிர்

There are no comments yet