சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை ஆதரிப்பதாக அதிமுக (அம்மா) கட்சி நிர்வாகிகள் கூட்டத்தின் முடிவில் முதல்வர் கே.பழனிசாமி அறிவித்தார். பாஜக வேட்பாளர் அறிவிக்கப் பட்டதும், பிரதமர் நரேந்திர மோடி தமிழக முதல்வர் கே.பழனி சாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆதரவு கேட்டார். இதையடுத்து, மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை நேற்று முன்தினம் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்துப் பேசினார்.

இந்நிலையில், அதிமுக அம்மா கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், முதல்வர் கே.பழனி சாமி தலைமையில் நேற்றிரவு சென்னையில் நடந்தது. இதில் அமைச்சர்கள், தம்பிதுரை உள்ளிட்ட எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், தலைமைக்கழக நிர்வாகிகள் என 100-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். கூட்டத்தின் முடிவில் நிருபர் களிடம் முதல்வர் கே.பழனிசாமி கூறும்போது, ‘‘பிரதமர் நரேந்திர மோடியின் கோரிக்கையை ஏற்று குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ள ராம்நாத் கோவிந்தை ஆதரிப்பது என்று ஒருமனதாக தீர் மானிக்கப்பட்டுள்ளது’’ என்றார். குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு அதிமுக அம்மா அணி சார்பில் ஆதரவு அளிக்கப்படும் என்று அறிவித்ததைத் தொடர்ந்து, அவரை நேரடியாகச் சந்தித்து கட்சியின் ஆதரவை முதல்வர் தெரிவிக்க உள்ளார்.

பிரதமர் மோடியையும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சந்திக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. முதல்வராக பொறுப்பேற்றப் பிறகு எடப்பாடி பழனிசாமி தில்லி செல்வது இது மூன்றாவது முறையாகும். இந்நிலையில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் பாஜகவேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு தெரிவித்து வேட்புமனு விழாவில் கலந்து கொள்ள இன்று சென்னை விமான நிலையத்தில் இருந்து டில்லிக்கு புறப்பட்டு சென்றார்.

இது குறித்து கருத்து சொன்ன ஒரு அதிமுக உறுப்பினர், அம்மா இருந்த போது எல்லோருக்கும் சிம்ம சொப்பனமா இருந்தார். ஆனால் இந்த அடிமைகள் தங்களது பதவியை காப்பாற்றவும், வருமான வரி சோதனையில் இருந்து சொத்துக்களை காப்பாற்றவும் இப்போது மோடிக்கு காவடி எடுக்கின்றனர். பாஜகவினர் தலித்துகளை பார்ப்பதற்கு முன்னர் சோப்பும், ஷாம்பும் கொடுத்து குளித்து வரச்சொல்கின்றனர். அப்படிப்பட்ட பாஜகவுடன் கூட்டணி வைத்து, சமூக நீதியின் ஆணிவேரையே அசைத்து விட்டனர் என்று வருத்தப்பட்டார்.

There are no comments yet