சென்னை: ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது தமிழர்களை ‘பொர்க்கி’கள் என்று ட்விட்டரில் சாடி பல தரப்பினரிடமிருந்தௌ சூடு பட்டுக்கொண்ட சுப்பிரமணியம் சாமி தற்போது, மீண்டும் அரசியலுக்கு தயாராகி வரும் சூப்பர் ஸ்டார் ரஜினியை சீண்டியுள்ளார். பாஜக தலைவர் அமித் ஷா ரஜினியை இழுக்க தூண்டில் போட்டு வரும் இந்த நேரத்தில், அதே பாஜகவை சேர்ந்த சு.சாமி ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பரபரப்பு பேட்டி: “என்னிடம் ரஜினி செய்த பண மோசடிகள் குறித்த ‘ஆதாரங்கள்’ உள்ளன, அதை வெளியிட்டால் ரஜினியின் மாஸ், தூசு ஆகிவிடும். ரஜினியின் அரசியல் ஆசையும் அஸ்தமனமாகிவிடும். அரசியலுக்கு வரும் முடிவை ரஜினி கைவிடவேண்டும்.” என்று ‘மெர்சல்’ காட்டும் தொனியில் கூறியுள்ளார்.

கடந்த மே19 ரஜினி ரசிகர்கள் புகைப்பட சந்திப்பு நடைபெற்ற போது ரசிகர்களிடையே அவ்வப்போது பேசிய ரஜினி, “இன்று நான் நடிகன், நாளை கடவுள் சித்தப்படி நாளை என்ன என்று தெரியவில்லை. தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை, ரசிகர்கள் தயாராக இருங்கள், போர் (தேர்தல்) வரும் போது பார்த்துக் கொள்வோம்” என்று கூறிவிட்டு காலா மற்றும் ஷங்கரின் 2.0 பட வேலைகளில் பிசியாகி விட்டார். “20 ஆண்டுகளாக சொன்ன சொல் மாறாமல் ரசிகர்களை ஏமாற்றி வருகிறார் ரஜினி. தமிழக சிஸ்டம் பற்றி ரஜினி கவலைப்படத் தேவை இல்லை என சீமான், தீபா, தமிழிசை, நடிகை கஸ்தூரி போன்றவர்கள் ரஜினிக்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டு பப்ளிசிட்டி தேடிக்கொண்டார்கள்.

இந்த நிலையில் ரஜினிகாந்த் திடீரென திருமா, கங்கை அமரன், நடிகை கஸ்தூரி, அம்மண ஐய்யாக்கண்ணு போன்ற சில ‘முக்கியமான’ அரசியல் பிரமுகர்களை அவ்வப்போது சந்தித்து அரசியல் ஆலோசனை செய்து வருகிறார். கடைசியாக அளித்த பேட்டியில் ‘அரசியலுக்கு வருவது குறித்து ஆலோசனையில் இருக்கிறோம், முடிவை விரைவில் வெளியிடுவோம்” என்று பிடி கொடுக்காமல் பேசியுள்ளார்.. இந்நிலையில் நடிகர் விஜய், பிறந்தநாளன்று வெளியான ‘மெர்சல்’ பட போஸ்டரில், இளையதளபதி என்ற பட்டத்தை வெறும் ‘தளபதி’ என்று மாற்றி சர்ச்சையை கிளப்பினார். சினிமாவில் தளபதி என்றால் ரஜினி, அரசியலில் ஸ்டாலின்தான். இது உலகறிந்த விஷயம். இதற்கு சமூக வலைதளங்களில் எழுந்த எதிர்ப்பை கண்டு, விஜய்யின் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகரன் “எழுபது வயதில் ரஜினிக்கு அரசியல் ஆசை தேவை இல்லை” என்று சீண்டினார். நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் “வருங்கால முதல்வர் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்” என்று எரிகிற நெருப்பில் எண்ணையை ஊற்றிவிட்டார். இதனால் ரஜினி தரப்பு செம கடுப்பில் இருப்பதாக தெரிகிறது.

இந்த நிலையில் சு.சாமியின் பேட்டி முக்கியத்துவம் பெறுகிறது. இந்தியாவின் செல்வாக்குமிக்க அரசியல் தலைவர்களை நீதிமன்ற வாசலுக்கு வர வைத்து வழக்குகளில் சிக்க வைத்து வேடிக்கை பார்ப்பது சு. சாமியின் வழக்கம். ரஜினியின் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து சு. சாமி நமது கப்சா நிருபரிடம் தெரிவித்த ரகசிய தகவல்கள் பின்வருமாறு: “ரஜினிக்கு அரசியல் எதிர்காலம் இல்லை, முதல்வர் பதவிக்கும் லாயக்கில்லை, படித்த மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக ரசிகர்களை ஏமாற்றி கர்நாடகாவில் சொத்து சேர்த்துவிட்டு, முழங்கால் மூட்டு கழன்ற வயதில் முதல்வர் நாற்காலியில் நேரடியாக உட்காரும் ஆசை ரஜினிக்கு, அது ஒருபோதும் நிறைவேறாத ஆசை. என்னிடம் உள்ள ஆதாரங்களை வெளியிட்டால் கபாலி மலேசிய சிறையில் வாடியது போல சின்னம்மாவுடன் ரஜினி, பரப்பன அக்ரஹார சிறையில் மெழுகுவர்த்தி தயாரிக்க போய்விட வேண்டியதுதான். நான் ஒருதடவ சொன்னா நூறுதடவை சொன்னா மாதிரி, ஒருத்தனுக்கு எந்திரிச்சு நிக்கவே வக்கில்லையாம், ஒன்பது மனைவி கேட்டானாம்” என ரஜினியின் பாட்ஷா, சந்திரமுகி படங்களில் வரும் ‘பிட்’டை ரஜினிக்கே போட்டு பட்டையை கிளப்பினார்.

There are no comments yet