சென்னை: கடந்த 27.06.2017 அன்று டைம்ஸ் நௌவ் தொலைக்காட்சி, தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ள பான், குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் சுதந்திரமாக உலவுவதன் காரணத்தை அம்பலப்படுத்தியது. இப்பொருட்களை சட்டவிரோதமாக தயாரிக்கவும், கடைகளின் மூலம் தடையின்றி விற்கவும் குட்கா தயாரிப்பாளர்கள், தமிழகத்தின் அதிகாரவர்க்கத்திற்கு சுமார் 40 கோடி ரூபாய் வரை இலஞ்சமாகக் கொடுத்தது குறித்த இலஞ்ச ஒழிப்புத்துறையின் ஆவணங்களை வெளியிட்டது.

சென்னை மாதவரத்தில் உள்ள தனியார் குட்கா விற்பனை நிலையம், கடந்த 2011 -ம் ஆண்டு, தமிழக அரசால் தடைசெய்யப்பட்டது. ஆனால் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு பணம் கொடுத்து குட்கா வஸ்துகளைத் தொடர்ந்து விற்பனை செய்தது இந்நிறுவனம். இது குறித்து வருமானவரித்துறை, அந்நிறுவனத்தின் அலுவலகத்திலும், அங்கு பணிபுரிபவர்கள் வீட்டிலும், கடந்த 2016 -ம் ஆண்டு ஜூலை 8 -ம் தேதி அன்று திடீர் ‘சோதனை’ நடத்தியது.

அந்நிறுவனத்தில் பணிபுரிந்த பெண் கணக்காளர் ஒருவரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் வருமானவரித்துறை வசம் பல முக்கிய ஆவணங்கள் சிக்கின. அதில் அந்நிறுவனம் தடையை மீறி சுதந்திரமாகச் செயல்படுவதற்காக தமிழக அமைச்சர், போலீசு உயரதிகாரிகள், மாநகராட்சி, உணவுத்துறை, மத்திய கலால்துறை ஆகியவற்றின் உயரதிகாரிகள் என அனைவருக்கும் கொடுத்த இலஞ்சம் குறித்த முக்கிய ஆவணங்கள் சிக்கின. இந்த ஆவணங்களின் படி நவம்பர் 2014 முதல் ஜூலை 2016 வரையிலான கால இடைவெளியில் மட்டும் இவர்களுக்கு சுமார் 40 கோடி ரூபாய் இலஞ்சமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவரான ஏ.வி.மாதவராவ் என்பவரிடம் வருமான வரித்துறை நடத்திய விசாரணையில், ஆவணங்களில் சங்கேதக் குறியீடுகளாக குறிப்பிடப்பட்டிருக்கும் இலஞ்சம் பெற்ற நபர்களின் பெயர்கள் தெரியவந்தன.

இதன் படி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு மாதம் ரூ.14 இலட்சமும், மத்திய கலால்துறை அதிகாரிகளுக்கு மாதம் ரூ. 2 இலட்சமும், மத்திய குற்றப்பிரிவு போலீசு அதிகாரிகளுக்கு மாதம் ரூ. 3.5 இலட்சமும், வட சென்னை இணைக் கமிஷனருக்கு மாதம் ரூ.5 இலட்சமும், செங்குன்றம் உதவி கமிஷனருக்கு மாதம் ரூ.10 இலட்சமும் குடோன் இருந்த பகுதியில் உள்ள கவுன்சிலர்களுக்கு மாதம் ரூ.14 இலட்சமும், உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு மாதம் ரூ. 7 இலட்சமும், போலீசு கமிஷனருக்கு மாதம் ரூ.20 இலட்சமும் கொடுக்கப்பட்டிருக்கிறது. சென்னை முன்னாள் போலீசு கமிஷனர் ஜார்ஜ் இதுவரை ரூ.75 இலட்சமும், தற்போதைய சென்னை கமிஷனர் டி.கே ராஜேந்திரன் 1.4 கோடியும் இலஞ்சமாக பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது.இது போதாதென்று, தீபாவளி, கிறுஸ்துமஸுக்குச் சிறப்புப் போனசும் இலஞ்சமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்த விவரங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு அறிக்கையில் வருமான வரித்துறை இயக்குனர் கண்ணன் நாராயணன் கையெழுத்திட்டு, அதன் மீது நடவடிக்கை எடுக்கக் கூறி தமிழகத் தலைமைச் செயலாளருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அன்றிலிருந்து இன்று வரை அக்கடித்த்தின் மீதும் இக்குற்றச்சாட்டின் மீதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காத்திருக்கிறார் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன்.

தற்போது இந்த ஆவணத்தை வெளியிட்டிருக்கிறது டைம்ஸ் நௌவ் தொலைக்காட்சி.தமிழக அதிமுக அணிகளை மிரட்டி வைப்பதற்காக கூட இந்த ஆவணத்தை மோடி அரசு வெளிக் கொணர்ந்திருக்கலாம். ஏனெனில் பான்பராக் உள்ளிட்ட பொருட்களை பல்வேறு நிறுவனங்கள் தயாரிக்கின்றன. தமிழகத்தின் அனைத்துப் பெட்டிக் கடைகளிலும் இவை சாதரணமாகக் கிடைக்கின்றன.

இது குறித்து கல்வியமைச்சர் செங்கோட்டையனும், சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கரும் கூட்டாக அளித்த பேட்டி: குட்கா நமது கலாச்சாரத்தின் அடையாளம். அதை தடை செய்யாமல் அனைவருக்கும் கிடைக்க ஏற்பாடு செய்வது தவறா? நமது முன்னோர்கள் எப்படி வெற்றிலை போட்டு புளிச் புளிச் என்று துப்பினார்களோ, அதே மாதிரி வடஇந்தியாவில் இந்த குட்காவை மென்று அங்கெங்கிணாதபடி எங்கும் துப்பி வைப்பார்கள். அந்த புனித குட்காவை தமிழ் நாட்டில் தாராளமாக கிடைக்க ஏற்பாடு செய்தது தவறில்லை. அடுத்த கல்வியாண்டு முதல் பள்ளிகளில் சத்துணவுடன் குட்காவையும் இலவசமாக வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றனர்.

There are no comments yet