சென்னை: தமிழ் சினிமாக்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் நடிகர் ‘பவர்ஸ்டார்’ சீனிவாசன். இவர் தில்லியிலுள்ள ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு குறைந்த வட்டியில் வங்கியில் ரூ. 500 கோடி கடன் வாங்கித்தருவதாக கூறி, ரூ.10 கோடி கமிஷன் பெற்றதாக தில்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்தனர். இதனைத்தொடர்ந்து, அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு தில்லி நீதிமன்றத்தில் ஆஜராகாததால், கடந்த மார்ச் மாதம் மீண்டும் ‘பவர்ஸ்டார்’ சீனிவாசன் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

இந்த நிலையில், பெங்களூரு தொழில்அதிபர் மன்சூர் அலாம், அவருடைய தம்பி சாஜத் வாகப் ஆகியோருக்கு வங்கியில் ரூ.30 கோடி கடன் பெற்று தருவதாக கூறி ரூ.1 கோடியை ‘பவர்ஸ்டார்’ சீனிவாசன் மோசடி செய்ததாக பெங்களூரு ஹைகிரவுண்டு போலீஸ் நிலையத்தில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக பெங்களூரு ஹைகிரவுண்டு போலீசார் தில்லி கோர்ட்டில் அனுமதி பெற்று அவரை கைது செய்து பெங்களூரு நகருக்கு அழைத்து வந்தனர். இதன் பின்னர், அவரை பெங்களூரு நான்காவது கூடுதல் முதன்மை மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து அவர் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடந்து பவர்ஸ்டார் சீனிவாசனை போலீசார் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைத்தனர்.

இது குறித்து சிறையில் கப்ஸா நிருபரிடம் பவர் ஸ்டார் சீனிவாசன் கூறியதாவது. “சென்ற முறை திகார் சிறையில் தினகரனை சந்திக்க எவ்வளவோ முயற்சி செய்தேன் முடியவில்லை. ஜாமீனில் வெளியே வந்தபோது நடிப்பு கற்றுக்கொள்ள விஜய் டிவி யில் கமல் நடத்தும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியை பார்த்தேன், விஜய் டிவி ஸ்க்ரிப்ட் படி அனைவரும் அருமையாக நடிக்கிறார்கள், காதல், சோகம், அரைகுறை ஆடை கவர்ச்சி, துரோகம் என்று வழக்கமான தமிழ் சீரியல் போல் அருமையாக போய்க்கொண்டு இருக்கிறது. வாழ்க்கை பாடம் பாடம் சொல்லித் தரும் அந்த நிகழ்ச்சி போல் சின்னம்மாவிடம் ஊழல் பாடம் படிக்க பிளான் பண்ணி நானே பெங்களூரு ஹைகிரவுண்டு போலீசாரிடம் புகார் கொடுக்க வைத்து பார்ப்பன அக்ராஹார சிறைக்கு ஷிபிட் ஆகி வந்தேன். வெளியில் வந்ததும் கொடநாடு எஸ்டேட் போல ஏதாவது எஸ்டேட் ஒன்றை கபளீகரம் பண்ணி வாழ்க்கையில் செட்டில் ஆகப் போகிறேன் என்றார்.

பகிர்

There are no comments yet