சென்னை: ஒரே இந்தியா ஒரே வரி விதிப்பு என்று கூறி மத்திய அரசால் ‘ஜிஎஸ்டி’ எனப்படும் ‘Goods and Services Tax’ (சரக்கு மற்றும் சேவை வரி) ஜூலை ஒன்றாம் தேதி முதல் அமுல்படுத்தப்பட்டது. இதனால் அன்றாடம் சாமனியர்கள் உபயோகிக்கும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது, ஆடம்பர பொருட்களான கார் போன்றவற்றின் விலை குறைந்துள்ளது. பீட்சாவுக்கு 5 சதவிகிதம் வரி, கடலைமிட்டாய்க்கு 18 சதவிகிதம் வரி என கிண்டலடித்து நெட்டிசன்கள் ‘மீம்’ போட்டு கலாய்த்து வருகின்றனர்.
ஜவுளித்துறை, திரைப்படத்துறை போன்று, பல்வேறு தரப்பினரும் ஜிஎஸ்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டதால், பட்டாசு ஆலைகளைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்டத் தில் உள்ள தீப்பெட்டி ஆலைகளும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை நேற்று தொடங்கின. விருதுநகர் மாவட்டத்தில் 566 தீப்பெட்டி ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இத்தொழிலில் நேரடியாக சுமார் 2 லட்சம் பேரும், மறைமுகமாக சுமார் 2 லட்சம் பேரும் பணிபுரிகின்றனர். தற்போது மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஜிஎஸ்டி வரியால் முழுவதுமாக கைகளால் உற்பத்தி மேற்கொள்ளும் தீப்பெட்டி ஆலைகளுக்கு 6 சதவீத வரியும், பகுதியாக மற்றும் முழுவதுமாக உற்பத்தி மேற்கொள்ளும் தீப்பெட்டி ஆலைகளுக்கு ஒரே மாதிரியாக 18 சதவீதமும் வரி விதிக்கப்பட்டுள்ளது.
இதைக் கண்டித்து, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சுமார் 400-க்கும் மேற்பட்ட தீப்பெட்டி ஆலைகள் நேற்று முதல் காலவரையற்ற முழு அடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கத் தலைவர் ஆர்.அலெக்ஸாண்டர் கூறும்போது, ‘விருதுநகர் மாவட்டத்தில் பகுதியாக இயந்திரத்தைப் பயன்படுத்தி தீப்பெட்டி தயாரிப்பில் ஈடுபடும் ஆலைகளே 80 சதவீதம் உள்ளன. 6 சதவீத வரி செலுத்தி வந்த இந்த ஆலைகளுக்கும் முழுவதுமாக இயந்திரங்களை பயன்படுத்தி உற்பத்தி மேற்கொள்ளும் தீப்பெட்டி ஆலைகளைப் போன்று 18 சதவீதம் வரி விதித்துள்ளது ஏற்புடையது அல்ல. இதனால், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பகுதியாக இயந்திரத்தை பயன்படுத்தி உற்பத்தி மேற்கொள்ளும் ஆலைகளுக்கு 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக வரி விதிப்பைக் குறைக்க வேண்டும். இதை வலியுறுத்தியே காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்’ என்றார்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் பேட்டி அளித்த கேப்டன் விஜயகாந்த், “கும்பகோணம் அருகே கதிராமங்கலத்தில் போராடிய மக்களை தாக்கிய போலீசுக்கு போலீஸ் கேரக்டர்களில் அதிகம் நடித்தவன் என்ற முறையில் கண்டனம் தெரிவிக்கிறேன். ஓ.என்.ஜி.சி. நிறுவனம் விவசாய நிலத்தில் கச்சா எண்ணெய் எடுப்பதை எதிர்த்து பொதுமக்கள் போராட்டம் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இப்போது தீப்பெட்டி ஆலைகளும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை ஆரம்பித்துள்ளனர். தமிழகத்தின் வளர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது. உட்கட்சி குடுமிபிடி மட்டுமே அதிமுகவின் கவனமாக இருக்கிறது. நெடுஞ்சாலைகளில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை திறந்து ‘சரக்கு’ வரிச் சுமையை என் போன்ற சாதாரண குடிமகன்கள் மீது சுமத்துகின்றனர். மாநிலம் முழுவதும் ‘தண்ணீர்’ தட்டுப்பாடு அதிகம் உள்ள நிலையில் அரசு ‘சரக்கு’ மற்றும் ‘சேவை’ வரையை நீக்கவேண்டும். மூடப்பட்ட தீப்பெட்டி தொழிற்சாலைகளை உடனே திறக்க வேண்டும். இல்லாவிட்டால் சரக்கு அடிக்கும் போது ‘சிகரெட்’ பிடிக்க ‘தீப்பெட்டி’ கிடைக்காமல், திண்டாட வேண்டி வரும்.” என்றார்.
There are no comments yet
Or use one of these social networks