சென்னை: தமிழக முதல்- அமைச்சராக இருந்த ஜெயலலிதா மரணம் அடைந்ததை தொடர்ந்து, அ.தி.மு.க. இரண்டாக உடைந்தது. சசிகலா தலைமையில் அ.தி.மு.க. (அம்மா) என்ற பெயரில் ஓர் அணியும், முன்னாள் முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அ.தி.மு.க. (புரட்சித் தலைவி அம்மா) என்ற பெயரில் மற்றொரு அணியும் செயல்பட்டு வருகிறது. அ.தி.மு.க. (அம்மா) அணியில்தான் பெரும்பாலான எம்.எல்.ஏ.க் களும், எம்.பி.க்களும் உள்ளனர். அந்த அணியைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமி முதல்- அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.

அ.தி.மு.க. (அம்மா) அணி-அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) ஆகிய இரு அணிகளையும் இணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இதில் கருத்து ஒற்றுமை ஏற்படாததால் இணைப்பு முயற்சி தோல்வியில் முடிந்தது. அ.தி.மு.க. (அம்மா) அணியில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க் களில் கணிசமான பேர் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள். இதனால் இந்த அணியின் நிர்வாகிகள் சிலரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அவ்வப்போது சர்ச்சைகள் உருவாகின்றன.

வருகிற 17-ந்தேதி நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கூட்டணி வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை ஆதரிப்பதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியாக அறிவித்தனர். இதேபோல் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு அளிப்பதாக, டி.டி.வி.தினகரன் சார்பிலும் தனியாக அறிக்கை வெளியிடப்பட்டது. அ.தி.மு.க. (அம்மா) அணியினர் தாங்கள் ஒற்றுமையாக இருப்பதாக பகிரங்கமாக அறிவித்தாலும், அவர்களுக் குள் நடக்கும் மோதல் உள்ளுக்குள் புகைந்து கொண்டு இருப்பதையே காட்டுவதாக அமைந்து உள்ளது.

இதை ஓ.பன்னீர்செல்வம் அணியும், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கின்றன. இந்த ஆட்சி தானாகவே கவிழ்ந்து விடும் என்றும், தி.மு.க. கவிழ்க்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே கூறி உள்ளார். ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்ததும், அ.தி.மு.க. ஆட்சி கலைக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக ஒரு பேச்சு பரவலாக அடிபடுகிறது.இந்த நிலையில் சென்னை வந்த மத்திய மந்திரி வெங்கையா நாயுடு நேற்று டெல்லி திரும்புவதற்காக விமானநிலையம் வந்த போது, இதுபற்றி அவரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். “ஜனாதிபதி தேர்தல் முடிந்ததும், தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியை மத்திய அரசு கலைத்துவிடும் என்று வதந்தி நிலவுகிறதே?” என்று நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு வெங்கையா நாயுடு பதில் அளிக்கையில், இது முழுக்க முழுக்க வதந்தி தான் என்றும், இதில் சிறிதளவு கூட உண்மை கிடையாது என்றும் கூறினார். அத்துடன், மத்திய பாரதீய ஜனதா அரசு தமிழகத்தில் உள்ள ஆட்சியை ஒருபோதும் கலைக்காது என்றும், மாநில அரசுகளை கலைக்க வகை செய்யும் அரசியல் சட்டத்தின் 356-வது பிரிவை மத்திய அரசு ஒருபோதும் தவறாக பயன்படுத்தாது என்றும், இதில் எந்த சந்தேகமும் வேண்டாம் என்றும் அவர் திட்டவட்டமாக கூறினார். அ.தி.மு.க. ஆட்சி இன்னும் 4 ஆண்டுகள் நீடிப்பது பற்றி அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்களே முடிவு செய்வார்கள் என்றும் அப்போது வெங்கையா நாயுடு தெரிவித்தார்.

பின்னர் நமது கப்ஸா நிருபருக்கு அளித்த பேட்டியில் வெங்காய நாயுடு கூறியதாவது: நான் தினகரன் அணி எம்எல்ஏக்களை தான் அதிமுக எம்எல்ஏக்கள் என்று சூசகமாக சொன்னேன். பன்னீர் அணியில் இப்போது இருக்கும் எம்எல்ஏக்கள் எப்போது அணி மாறுவார்கள் என்று சொல்ல முடியாது. எனவே தினகரன் கையில் தான் ஆட்சி உள்ளது என்றார்.

There are no comments yet