சென்னை:மாஞ்சா கயிறுக்கு நாடு முழுவதும் தடை விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. வடசென்னை பகுதியில் மாஞ்சா தடவப்பட்ட நூல் மூலம் காற்றாடி பறக்க விடுவது வாடிக்கையாக இருக்கிறது. மாஞ்சா நூல் என்பது மைதா மாவு, கடுக்காய், கண்ணாடி துகள்கள், வஜ்ஜிரம் ஆகியவற்றை கலந்து கொதிக்க வைத்து, அதனை சாறு போல எடுத்து சாதாரண நூல் மீது தோய்த்து எடுப்பார்கள். இதனால் அந்த நூல் மிகுந்த பலமாகவும் ஷார்ப்பாகவும் மாறி விடும். காற்றாடி விடும் போட்டியில் மற்ற காற்றாடிகளின் நூலை அறுப்பதற்காக இது போன்று செய்கிறார்கள். பட்டம் விடுவதற்காகத் தயாரிக்கப்படும் இந்த மாஞ்சா நூல் அடிக்கடி உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி வந்தது. அதனால், மாஞ்சா நூலைத் தடை செய்ய வேண்டும் என்று பீட்டா பிராணிகள் நல அமைப்பு சார்பில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் கடந்த டிசம்பர் மாதம் நாடு முழுவதும் மாஞ்சா நூல் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிடப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த பசுமைத் தீர்ப்பாயம், மாஞ்சா நூலுக்கு நாடு முழுவதும் விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை நிரந்தரத் தடையாக்கி உத்தரவிட்டது.

இருவேறு சம்பவங்களில் மாஞ்சா கயிறு உயிரைக் குடித்துள்ளது. தாம்பரம்-மதுரவாயல் நெடுஞ்சாலையில், மென்பொறியாளர் சிவபிரகாஷ், அவரின் தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, மாஞ்சா நூல் அறுத்து சிவபிரகாஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த அவரின் தந்தை, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை பெரம்பூர் பகுதியில் பெற்றோருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த 5 வயது சிறுவன் அஜயின் கழுத்து பகுதியை எங்கிருந்தோ வந்த மாஞ்சா கயிறு அறுத்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட சிறுவனின் உயிரை காப்பாற்ற முடியவில்லை. கடந்த 2011ஆம் ஆண்டு மட்டும் மாஞ்சா நூலால் 3 பேர் உயிரிழந்தனர். எழும்பூரில் செரினா பானு என்ற 4 வயது சிறுமியும் வண்ணாரப்பேட்டையில் ஒரு முதியவரும் அடுத்து ஒரு 2 வயது சிறுவனும் மாஞ்சாவுக்கு பலியாகினர். இதனைத் தொடர்ந்து மாஞ்சா பயன்படுத்தி காற்றாடி விட சென்னை காவல்துறை தடை விதித்துள்ளது. ஆனால் அதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் மாஞ்சா பயன்படுத்தி காற்றாடி விட்டு கொண்டுதான் இருக்கின்றனர். மாஞ்சா நூல் விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், சீனாவில் இருந்து இறக்குமதியாகும் மாஞ்சா நூலுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் அறிக்கை தாக்கல் செய்ய, மாஞ்சா சங்கத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த செய்தியை எடப்பாடி பழனிசாமி வாட்சப்பில் மோடிக்கு அனுப்பியிருந்தார். அதை பார்த்த மோடிக்கு ஒரு புதிய யோசனை உதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மோடியின் அரசாட்சியில், மாஞ்சா கயிறு பலிகளை போலவே, வட இந்தியாவில் பசு பாதுகாப்பு என்ற பெயரில் நாள்தோறும் பல உயிர்கள் பறிக்கப்படுகின்றன. ஜார்கண்ட் மாநிலம் ராம்கார் மாவட்டத்தில் மனுவா என்ற பகுதியில் அலிமுத்தீன் இல்யாஸ் அஸ்கர் அலி என்பவர் சங்பரிவார அமைப்புகளில் ஒன்றான பசு பாதுகாப்பு பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

பிரதமர் மோடி பசு பாதுகாப்பு என்ற பெயரில் மனிதர்கள் கொல்லப்படுவதை ஏற்க இயலாது என்று எதிர்ப்பு தெரிவித்து கருத்து தெரிவித்திருந்த அடுத்த சில மணி நேரங்களில் மோடியின் கண்டனத்தையும் மீறி இந்த கொலை நடைபெற்றது. கொலைகாரர்களுக்கு பாராட்டு தெரிவித்து நமது டில்லி சிறப்பு கப்சா நிருபரிடம் பேட்டியளித்த மோடி கூறியதாவது: “மாஞ்சா கயிறு தடையை தொடர்ந்து மாடுகளை துன்புறுத்தி மூக்கில் பழுக்க காய்ச்சிய கம்பியால் துளையிட்டு கட்டப்படும் மூக்கணாங்கயிறுக்கும் தடை விதிக்கப்படும். ஊர் விட்டு ஊர் மாடுகளை மாமிசத்திற்காக ஓட்டிச் செல்ல மூக்கணாங்கயிறை பிடித்துதான் செல்கின்றனர். அதை தடை செய்யப் போகிறேன். இதன் மூலம் கட்டுப்பாடின்றி சுதந்திரப் பறவையாக பசுக்கள் குஷியாக இருக்கும். மாஞ்சா நூலை தடைசெய்ததில் முக்கிய பங்கு வகித்த பீட்டா மற்றும் பசுமைத்தீர்ப்பாயத்தை வைத்தே முன்னதாக ஜல்லிக்கட்டை தடை செய்தோம். கூட்டிக் கழித்துப்பாருங்கள் கணக்கு சரியாக வரும். அடுத்து மூக்கணாங்கயிறு தான். மாஞ்சா கயிறை தொடர்ந்து பெண்கள் தாலி அணியும் மஞ்சக் கயிறையும் தடை செய்யலாம் என்று பார்த்தேன், ஆனால் பிப்ரவரி 14 காதலர் தின வன்முறைகளில், பொது இடங்களில் கூடும் காதலர்களுக்கு கட்டாயத் திருமணம் செய்ய மஞ்சக் கயிறு தேவை இருப்பதாக ஒரு பக்தாள் கூறியதால் விட்டு விட்டேன்.” என்றார்.

பகிர்

There are no comments yet