சென்னை: என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு விரைவில் அறிவிப்புவரும் நடிகர் கமல்ஹாசன் கூறினார்.மேலும் கவிதை மூலம் தனது ரசிகர்களை உசுப்பிவிட்டுள்ளார்

தமிழகத்தில் ஊழல் அதிகரித்துவிட்டதாக கடந்த வாரம் நடிகர் கமல் பேட்டி ஒன்றில் கூறினார். இதற்கு அமைச்சர்கள் சிலர் நடிகர் கமலை கடுமையாக விமர்சித்து வந்த வண்ணம் உள்ளனர். ஜெயலலிதா இருந்த போது வாய் திறக்காத கமல் இப்போது வாய் திறக்கிறார் என்றனர். இது தொடர்பாக நடிகர் கமல் டுவீட்டரில் கூறியது, நேற்று முளைத்த காளான்கள் போல் என் மீதான விமர்சனங்கள், குற்றச்சாட்டுகள் விரைவில் உண்மை என்ற வெயிலில் காய்ந்து போகும். இது போன்ற. குற்றச்சாட்டுகளை அமைதிப்படுத்தும் வகையில் விரைவில் அறிவிப்பு வெளிவரும் என்றார். விமர்சனங்களுக்கு கவிதை மூலம் பதிலடி கொடுத்துள்ளார். அது இங்கே..

இடித்துரைப்போம் யாருமினி மன்னரில்லை
துடித்தொழுவோம் மனதளவில் உம்போல் யாம்
மன்னரில்லை.
தோற்றிறந்தால் போராளி
முடிவெடுத்தால் யாம் முதல்வர்
அடி பணிவோர் அடிமையரோ?
முடி துறந்தோர் தோற்றவரோ?
போடா மூடா எனலாம் அது தவறு
தேடாப் பாதைகள் தென்படா
வாடா தோழா என்னுடன்
மூடமை தவிர்க்க முனைவரே தலைவர்

அன்புடன்
நான்….

இந்நிலையில் கமல்ஹாசன் டிவிட்டரில் சில கருத்துக்களை பதிவிட்டுள்ளார். கவிதை வடிவில் உள்ளது அந்த டிவிட்கள். ஆனால் சரிவர அர்த்தம் புரிந்து கொள்வதுதான் சிரமமாக உள்ளது. கமல்ஹாசனே இதை விளக்கினால்தான் உண்டு.

இந்த கவிதையை கவிஞர் மகுடேஸ்வரன் தனது முகநூல் பக்கத்தில் மொழிபெயர்த்துள்ளார். அது இங்கே..

இடித்துரைப்போம் = இடித்துரைத்தல் என்றால் “கழறிக் கூறுதல்”. கழறுதல் என்றால் சினந்து ஒன்றைச் சொல்லுதல். இடித்துரைத்தல் என்றால் ஆட்சிச் செருக்கில் உள்ளவர் செய்யும் தவறுகளை அறிவில் பெரியவர்கள் சான்றோர்கள் கடிந்து கூறுதல்.

யாருமினி மன்னரில்லை = யாருமிங்கே இனிமேல் மன்னரில்லை. மன்னர் என்ற மாமதம் ஒருவர்க்குத் தேவையுமில்லை. எல்லாரும் ஓர் நிறை. குடியும் கோனும் என்ற நிலை வேறுபாடு இனியில்லை.

துடித்தெழுவோம் = பரபரத்து எழுந்து நிற்போம். துள்ளிக் குதித்து எம் தாழ்ச்சிகளிலிருந்து எழுவோம்.

மனதளவில் = மனத்தளவிலேனும். மனத்திலாவது நாம் பணிந்து நில்லாமல் எழுந்து நிற்போம்.

உம்போல் யாம் மன்னரில்லை = உங்களைப்போல் நாங்கள் அரசர் இல்லை. மக்களில் ஒருவர்.

தோற்றிறந்தால் போராளி = ஒருவேளை இப்போரில் தோற்றுப்போய் இறந்துவிட்டால் என்ன… போராளி என்று போற்றப்படுவோம்.

முடிவெடுத்தால் யாம் முதல்வர் = இதுதான் போர் இதுதான் போர்க்களம் என்று அந்த முடிவை எடுத்துவிட்டால் அவ்விடத்தில் நாங்களே முதலாவதாக இருப்போம்.

அடிபணிவோர் அடிமையரோ? = வணங்கி நிற்கின்றவர்கள் என்பதால் அவர்களை அடிமைகள் என்று கருதுவதா?

முடிதுறந்தோர் தோற்றவரோ? = இந்த ஆட்சியும் வேண்டா, அரசர் பதவியும் வேண்டா என்று மணிமுடியைக் கழற்றி வைத்திருப்பவர் தோற்றவராகிவிடுவாரா?

போடா மூடா எனலாம் = அடப்போடா அறிவற்றவனே என்று சொல்லலாம்.

அது தவறு = அவ்வாறு கூறுவது தவறு.

தேடாப் பாதைகள் தென்படா = தேடும்போதுதான் ஒன்று கண்ணுக்குத் தெரியும். பாதைகளைத் தேடினால்தான் புலப்படும். தேடாமலே இருந்தால் எந்தப் பாதையும் தென்படாது. அதே இடத்தில் நிற்க வேண்டியதுதான்.

வாடா தோழா என்னுடன் = தோழனே என்னோடு வா… பாதைகளைத் தேடுவோம்.

மூடமை தவிர்க்க முனைவரே தலைவர் = மூடத்தனங்கள் அனைத்தையும் களைந்தெறிய முன்வந்து பணியாற்றுவோர் யாரோ அவரே தலைமை ஏற்கத் தகுந்தவர்.

இதன் மூலம் ஸ்டாலின் தலைமை ஏற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அப்படி திமுகவின் சேர்ந்தால் அவர் இன்னொரு வைகோ ஆகி சீக்கிரமே வெளியே வருவார் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

There are no comments yet