Reproduced from Dinamani

சென்னை: அமளிதுமளி எதுவுமில்லாமல், உப்புச் சப்பில்லாத விவாதங்களுடன், தங்களுக்குத் தாங்களே சம்பள உயர்வை அறிவித்துக்கொண்டு, தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. கூவத்தூர் விடுதியில் வலுக்கட்டாயமாக அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள், வெளியில் விட்டால் அரசு கவிழ்ந்துவிடும் என்பதில் தொடங்கி, இன்று அல்லது நாளை கவிழ இருக்கும் அரசு என்கிற விமர்சனங்களும் அடங்கி, நித்திய கண்டம் பூரண ஆயுசு என்கிற எதிர்பார்ப்பும் பொய்த்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சி சட்டப்பேரவைக் கூட்டத்தையும் வெற்றிகரமாகக் கடந்து விட்டிருக்கிறது.

சட்டப்பேரவையில் புயலடிக்கும் விவாதமும் விமர்சனங்களும் அனல் பறக்கும் என்று நினைத்தால் எல்லாம் புஸ்வாணமாகிப்போன நிலையில், திடீரென்று சட்டப்பேரவைக்கு வெளியில் எழுந்திருக்கிறது கமல்ஹாசன் தனது சுட்டுரையில் கடந்த மூன்று நாட்களாகத் தொடர்ந்து தொடுத்து வரும் சரவெடிக் கருத்துகள். இந்த ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் மலிந்து இருக்கிறது என்று கமல்ஹாசன் முன்வைத்த விமர்சனம் இப்போது அவரைச் சுற்றி மிகப்பெரிய விவாதத்தை எழுப்பி இருக்கிறது.

இதுபோன்ற ஒரு விமர்சனம் கமலிடமிருந்து வரவேண்டும் என்று தமிழக அமைச்சர்கள் காத்திருந்தனர் போலும். ஒருவர் பின் ஒருவராகக் கமலை, ‘துணிவிருந்தால் அரசியல் களமிறங்கிப் பார்க்கட்டும்’ என்று சவால்விட, தூங்கி வழிந்து கொண்டிருந்த அரசியல் களம் சுறுசுறுப்பானது. கமல்ஹாசனுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் களமிறங்கின.

‘தமிழக அரசு குறித்த கமல்ஹாசன் கருத்து மக்கள் குரலாகும். கமல் மீது வன்மம் கொண்டு கருத்துத் தெரிவிப்பதும் அவரை மிரட்டுவதும் ஜனநாயக விரோதமாகும்’ என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கமலுக்கு ஆதரவாகக் குரலெழுப்பினார். ‘அனைவருக்கும் உள்ள உரிமை கமல்ஹாசனுக்கு இல்லையா? அமைச்சர்கள் தங்களது போக்கைக் கைவிடவேண்டும்’ என்று காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கண்டனம் தெரிவித்தார்.

அதிமுக அரசை விமர்சித்த கமல் மீது பாஜக ஏன் கோபப்படுகிறது என்று தெரியவில்லை. பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜனும், தேசியத் தலைவர் ஹெச். ராஜாவும் கமலுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டதுதான் ஆச்சரியமாக இருக்கிறது. ‘கடந்த ஆண்டு துணிச்சலாக எந்தக் கருத்தையும் தெரிவிக்காத கமல், தற்போது ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பேசுகிறார். ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக செயல்படுவதை விட்டுவிட்டுத் தேவையற்றதில் தலையிடுகிறார்’ என்று தமிழிசை கூறியதற்கும், ‘தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் ஊழல் கறை படிந்துள்ளது’ என்கிற கமல்ஹாசனின் குற்றச்சாட்டிற்கும் என்ன தொடர்பு என்று தெரியவில்லை. ‘ஜெயலலிதா காலத்தில் இருந்த ஊழல் தானே தொடர்கிறது. அப்போது ஏன் தைரியமாகக் கேட்கவில்லை’ என்கிறாரோ என்னவோ?
இன்னொருபுறம், அமைச்சர்கள் வரிசைகட்டி நின்று கமல் மீது வசைபாடி, அவரை வம்புக்கு இழுத்தவண்ணம் இருக்கிறார்கள். கமலும், திடீரென்று தன்மீது பாய்ச்சப்படும் அரசியல் வெளிச்சத்தால் கவரப்பட்டோ அல்லது கலவரப்பட்டோ ‘வாடா தோழா என்னுடன்… முடிவெடுத்தால் யாம் முதல்வர்’ என்று ஆவேசப்பட்டிருக்கிறார்.
கமல்ஹாசனின் திடீர் ஆவேசத்துப் பின்னாலும், அதிமுக அமைச்சர்களின் கமல்ஹாசனுக்கு எதிரான திட்டமிட்ட எதிர்வினைக்குப் பின்னாலும், ஒரு மிகப்பெரிய அரசியல் சாணக்கியத்தனம் இருக்கிறது என்பது வெளியில் தெரியாத உண்மை. கமலை எப்படியும் அரசியலுக்குள் இழுத்து வருவதில் பல்வேறு அரசியல் கட்சிகளுக்கும் ஆதாயம் இருக்கிறது என்பதுதான் நிஜம்.

இன்றைய நிலையற்ற அரசியல் சூழலில், மக்கள் மிகப்பெரிய மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். ஆனால், அந்த மாற்றத்தின் நாயகனாக ஒட்டுமொத்தத் தமிழகமும் எதிர்பார்த்திருந்ததும், எதிர்பார்த்திருப்பதும் ரஜினிகாந்தைத்தானே தவிர, கமல்ஹாசனை அல்ல. இதுவரை, தனது அரசியல் ஈடுபாட்டை வெளிப்படுத்தாத கமலின் திடீர் ஆவேசம் யாரும் எதிர்பாராதது.

ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து, தமிழகத்தில் எல்லா கட்சிகளுக்குமே அச்சம் இருக்கிறது. அதிமுகவின் தொண்டர்களில் பலரும் நிச்சயமாகக் கூடாரம் மாறிவிடுவார்கள் என்பதை உறுதியாகவே கூறமுடியும். அதிமுக மட்டுமல்ல, திமுகவையும் ரஜினியின் அரசியல் பிரவேசம் பாதிக்கக்கூடும். கருணாநிதி இல்லாத திமுகவில் தொண்டர்கள் மனம் மாôட்டார்கள் என்றாலும், திமுக வாக்குவங்கியில் புதிய மாற்றத்திற்கு ஆதரவாக சரிவு ஏற்படத்தான் செய்யும்.

ஏனைய கட்சிகள் அனைத்துமே ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்தால் நிச்சயமாகக் கடுமையான பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும். பல காணாமல் போய்விடும். ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்கி, பாஜகவுடன் கூட்டணி அமைத்தால், அந்தக் கூட்டணி சக்திவாய்ந்த கூட்டணியாகத் திகழும் என்பதில் சந்தேகமே வேண்டாம். திமுகவும், அதிமுகவும் பாஜகவுடன் ஏற்கெனவே கூட்டணி அமைத்திருக்கும் நிலையில், மத்திய அரசுடன் இணக்கமான சூழலை ஏற்படுத்தும் ரஜினி – நரேந்திர மோடி கூட்டணியை மக்கள் நிச்சயமாக ஏற்றுக்கொள்ளத்தான் செய்வார்கள்.
இந்தப் பின்னணியில் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்தைத் தடுக்க கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம் உதவக்கூடும்.

ரஜினி, கமல் இருவருக்குமே நெருக்கமான அரசியல் பிரமுகர் ஒருவரின் கருத்து இது-
‘கமல்ஹாசன் மீது மிகப்பெரிய மரியாதை வைத்திருப்பவர் ரஜினி. ‘பாபநாசம்’ திரைப்படத்தில் ரஜினியை நடிக்கவைக்கத் தயாரிப்பாளர் அணுகியபோது, அந்த வேடத்துக்குக் கமல்தான் தன்னைவிடச் சிறப்பாக இருப்பார் என்று கூறி அவரிடம் அனுப்பியவரே ரஜினி என்று சொன்னால், அவருக்கு கமலிடம் இருக்கும் மதிப்பையும், அவரது திறமைமீதான நம்பிக்கையையும் புரிந்து கொள்ளலாம். எப்படி ஜெயலலிதா இருக்கும்போதோ, கருணாநிதி தீவிர அரசியல் இருந்தபோதோ ரஜினி அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கினாரோ, அதுபோல கமல் அரசியலில் இறங்கினால் ரஜினி பின்வாங்கி விடுவார்.’

ரஜினியின் அரசியல் பிரவேசம் தடுத்து நிறுத்தப்படும் என்பது கமலை ஆதரிக்க முற்பட்டிருக்கும் சில அரசியல் கட்சிகளின் எண்ணம். அதிமுகவுக்கு கமலின் அரசியல் பிரவேசத்தால் அதைவிட லாபம். அமைச்சர்கள், ஒருவர் மாறி ஒருவர் கமலை அரசியல் களம் காணக் கொம்பு சீவி விடுவதற்குப் பின்னாலும் ஓர் அரசியல் ராஜதந்திரம் இருக்கிறது.

‘கமல் அரசியலுக்கு வந்தால் ரஜினிகாந்த், தனிக்கட்சி தொடங்கமாட்டார். எங்கள் வாக்கு வங்கியில் சரிவு ஏற்படாது. கமல் தனிக்கட்சி தொடங்கித் தனியாகப் போட்டியிட்டால், அதனால் அதிகம் பாதிக்கப்படப்போவது திமுகவின் வாக்குவங்கிதான். அதிமுக எதிர்ப்பு வாக்குகள் பிளவுபடுவது எங்களுக்கு லாபம். இரட்டை இலை சின்னமும் கிடைத்துவிட்டால், திமுகவை எதிர்ப்பதில் பிரச்னை இருக்காது. ஒருவேளை, கமல் கட்சி தொடங்கித் திமுகவுடன் கூட்டணி அமைத்தால், அவர் இன்னொரு சிவாஜி கணேசனாக, விஜயகாந்தாக, சரத்குமாராக இருப்பாரே தவிர, பலமான அரசியல் சக்தியாக வளர முடியாது. கமல் அரசியலுக்கு வருவது என்பது, ரஜினியின் அரசியல் பிரவேசத்தையும் தடுத்ததாக இருக்கும். திமுகவையும் பலவீனப்படுத்தியதாக இருக்கும். கமல் அரசியலுக்கு வர வேண்டும். தனிக்கட்சி தொடங்க வேண்டும். எங்களுக்கு அதுதான் வேண்டும்’ என்று அதிமுக அமைச்சர்களில் ஒருவர் ரகசியமாகச் சொல்லி சிரித்தார்.

20 லட்சம் உறுப்பினர்களுடன் கிளை, ஒன்றியங்கள், மாநில அமைப்பு என்று செயல்படும் கமல்ஹாசன் நற்பணி மன்றத்தின் உறுப்பினர்கள் அவர் தனிக்கட்சி தொடங்கித் தனித்துப்போட்டியிடுவதைத்தான் விரும்புவார்கள். அவரும் சரி, திமுகவுடன் கூட்டணி அல்லது ஒரு சில இடங்களில் மட்டும் போட்டியிடும் திட்டத்தில் ஆசை கொண்டவரல்ல. இதைத்தான் அதிமுகவினர் எதிர்பார்க்கிறார்கள்.
கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம் என்பது திமுகவின் வாக்கு வங்கியில் ஏற்பட இருக்கும் சரிவு! ‘இரட்டை இலை’ சின்னத்துக்காகக் காத்திருக்கும் அதிமுகவின் எதிர்பார்ப்பு! ரஜினிக்கு வைக்கப்படும் ஆப்பு!!

மற்ற ஆதாரங்கள்Dinamani
பகிர்

There are no comments yet