சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நண்பர் தியாகராஜன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுப்பட்டனர். தமிழக அரசின் சாலைப்பணி ஒப்பந்ததாரராக தியாகராஜன் செயல்பட்டு வருகிறார். அவருடைய வீடு மற்றும் குருமூர்த்தி என்ஜியரிங் எண்டர்பிரைசஸ், ஜிஜி இன்ஃபிரா ஸ்டர்க்சர்ஸ், தியாகராஜன் எண்டர்பிரைசஸ் ஆகிய நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

சென்னை அஷோக் நகர் பகுதியில் இந்த நிறுவனங்கள் அமைந்துள்ளன. இந்த 3 நிறுவனங்களும் தமிழக அரசின் பெரும்பாலான சாலை போடும் பணிகளையும், பராமரிப்பு பணிகளையும் மேற்கொண்டுள்ளன. இந்நிறுவனங்கள் ரூ.20 கோடி மதிப்புள்ள உடைமைகளை ரூ.10 கோடி என்று பதிவு செய்து, வரி ஏய்ப்பில் ஈடுபட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நெடுஞ்சாலைத் துறையில் தியாகராஜன் மிக முக்கிய ஒப்பந்ததாரர் ஆவார். நெடுஞ்சாலைத் துறை கடந்த 6 ஆண்டுகளாக எடப்பாடி பழனிசாமி வசம் உள்ளது குறிப்பிடத்தக்கது. நேற்று இரவு முதல் பலமணி நேரமாக வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டதில் 23 கிலோ தங்கம், 41 லட்ச ரூபாயும் பறிமுதல் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக சேகர் ரெட்டி, முன்னாள் தலைமைச் செயலாளர் ராம்மோகனராவ், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோரின் வீடுகளில் சோதனைகள் நடத்தப்பட்டது. வருமான வரித்துறையை மத்திய அரசு தனக்கு சாதமாகப் பயன்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்தது. பன்னீருக்கு நெருக்கமான – மணல் காண்ராக்டர்கள் சேகர் ரெட்டி, நாமக்கல் சுப்பிரமணியன் ஆகியோரைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியின் நண்பரான நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் தியாகராஜனும் வருமான வரித்துறையின் வலையில் சிக்கியுள்ளது மோடி அரசின் மீது சந்தேகத்தைக் வலுவாக்குகிறது.

இது குறித்து கப்சா நிருபர் உங்கள் நியூஸ் அலுவலகத்தில் அங்கலாய்த்துக் கொண்டதாவது: உன் நண்பனை காட்டு நீ யார் என்று சொல்கிறேன் என்ற பழமொழிக்கு ஏற்ப, உன் காண்ட்ராக்டர் யார் என்று காட்டு, கமிஷன் எவ்வளவு வாங்கினாய் என்று சொல்கிறேன் என்பது போல் சும்மா, மாநில அரசை மிரட்ட, வழிக்கு கொண்டு வர (இவர்கள் ஒன்றும் யோக்கியர்கள் இல்லை) மத்திய அரசு, வருமான வரித்துறையை பயன்படுத்துகிறது. எப்போ எலெக்ஷன் கமிஷன் கேசுல, தினகரன் பேரு இல்லையோ, அப்பவே தெரிஞ்சு போச்சு, எல்லாம் நாடகம் என்று. ஒரு மண்ணும் வெளிய வராது. இதுவரை நடந்த சோதனைகள் என்னவாயிற்று? அட போங்கய்யா” என்று நமுட்டு சிரிப்புடன் முடித்தார்.

பகிர்

There are no comments yet