சென்னை: அமைச்சர்கள் மீது ஊழல் புகார் கூறிய கமலஹாசனை தாக்கி அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது எம்.ஜி.ஆரில் கவிதை வடிவில் செய்தி வெளியாகி உள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

வில்லன்
வழி சொல்லத்
தெரியாதவனுக்கு
பழி சொல்ல மட்டுமே
தெரியும் என்பார்கள்!
இதற்கு மெத்தப்
பொருத்தமாகிறார்
‘மொத்தமும் வில்லன்!’

ஏழைக்குப் பயன்படாத
இந்த குரோட்டன்ஸ் செடி
எளியோருக்குப்பயன்படும்
கீரையைப் பார்த்து
பழிக்கிறது!

‘உன்னால் முடியும் தம்பி’
என்று இவர் உதட்டளவில்
வாயசைத்துப்பாடியதை,
இளையோர் கரத்தில்
மடிக்கணினி கொடுத்து
உலகை உள்ளங்கைக்குள்
உட்கார வைத்த
ஒப்பில்லா கழகத்தை
முப்பொழுதும்
தப்பென்று பழிக்கிறார்.

மஞ்சள் துண்டு தயவு
கூடவே,
ஒன்றே முக்கால்
லட்சம் கோடி
கொள்ளையர்க்கு
ஒத்தடமும் கொடுக்கிறார்.
மஞ்சள் துண்டின் தயவில்
மக்கள் திலகத்தின்
இயக்கத்தை
வன்மத்து வார்த்தைகளால்
வசைபாடி திரிகிறார்.

புரட்சித்தலைவர்-
புரட்சித்தலைவியின்
புகழ்மனத்து இயக்கத்தை
புண்படுத்தி
மு.க.வை மகிழ்விக்க
முன்னோட்டம்
பார்க்கிறார்.
ஓடுவேன் என்றார்
ஒரு படம் ஓடாவிட்டாலே
ஓடுவேன் நாட்டைவிட்டு
என்ற
இந்த ஒப்பாரித் திலகம்
குகையில் சிம்மம் இல்லை
என்றதும் ஒத்தைக்கு ஒத்தை
வர்றியா என்பதாக
ஊளையெல்லாம்
இடுகிறார்.
காவி மீது பாசம்
கருப்புச் சட்டை
போட்டுக்கிட்டு
சாதிக்கு ஆலவட்டம்
வீசுகிற சாடிஸ்ட் கோஷம்
தூய்மை இந்தியா
திட்டத்தை
தொடங்கிவைத்து
காவி மீதும் பாசம்.

காவேரி,
முல்லைப் பெரியாறு,
மீத்தேன், கெயில்,
நெடுவாசல், ‘நீட்…’
என்றெனும்
தமிழர்தம்
உரிமை என்றால் மட்டும்
மன்மத வம்பன்
போடுவதோ
மவுன விரத வேஷம்.
உலக்கை நாயகன்
இந்த உலக்கை நாயகனின்
விமர்சன எல்லையெல்லாம்
கழகத்தைப் பழிக்கிற
ஓரம்ச திட்டம் மட்டும்
என்றால்
அதனை உலகம் சுற்றும்
வாலிபனின் இயக்கம்
ஓட ஓட விரட்டும்.

நமது எம்ஜிஆர் இப்போது சசிகலா கண்ட்ரோலில் இருப்பதால், இது கமல் ஹாசனுக்கு சசிகலாவின் எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

There are no comments yet