தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரத்தில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி பெயரில் 18 சென்ட்டில் மூன்று ராட்சதக் கிணறுகள் உள்ளன. அதேபோல 18 ஏக்கரில் நிலமும் உள்ளது. இந்நிலையில், ஊரில் உள்ள பொதுக் கிணற்றில் தண்ணீர் இல்லாததால், அங்கு தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஊர் கிணற்றில் தண்ணீர் வற்றிப்போகக் காரணம், பொதுக் கிணற்றுக்கு அருகே ஓ.பன்னீர்செல்வத்தின் தோட்டத்தில் மூன்று ராட்சதக் கிணறுகளில் இருந்து, அதிகளவு தண்ணீர் எடுக்கப்படுவதுதான். மேலும், ஓ.பன்னீர்செல்வத்தின் தோட்டத்தில் நான்கு போர்வெல்லும் போடப்பட்டிருக்கிறது. இதனால் கிராம மக்கள் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்திவருகிறார்கள்.
இதனிடையே, கிணற்றை கிராம மக்களுக்கே வழங்குவதாக பன்னீர்செல்வம் கூறியிருந்தார்.இந்நிலையில், அந்த கிணறு மற்றும் அருகில் இருந்து நிலத்தை, தனது நண்பர் சுப்புராஜ் என்பவருக்கு ஓ. பன்னீர்செல்வம் விற்றுள்ளார். பன்னீர்செல்வம், கிணற்றை இலவசமாக தருவார் என்று கிராம மக்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், இந்த சம்பவம் கிராம மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதையடுத்து, அந்த கிராம மக்கள் கூட்டிய கூட்டத்தில், நிலத்தை வாங்கியுள்ள சுப்புராஜூம் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “கிணற்றின் அருகில் இருக்கும் 2 ஏக்கர் நிலத்தைத் தருகிறோம். ஆனால், கிணற்றை தரமுடியாது” என்று கூறியுள்ளார்.
இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பன்னீர்செல்வம் மீது மக்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். இதைத்தொடர்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விரைவில் கூட்டம் கூட்டி முடிவு எடுக்கப்படும் என்று கிராம மக்கள் கூறியுள்ளனர். இதனால், லட்சுமிபுரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
There are no comments yet
Or use one of these social networks