பெங்களூரு: பெங்களூரு சிறையில், சசிகலாவுக்கு அளிக்கப்பட்ட சலுகைகளை அம்பலப்படுத்திய, டி.ஐ.ஜி., ரூபாவுக்கு, டி.ஜி.பி., சத்ய நாராயணராவ், ‘மூன்று நாட்களில் மன்னிப்பு கேட்காவிட்டால், 50 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடருவேன்’ என, வக்கீல் மூலமாக நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள, அ.தி.மு.க., சசிகலாவுக்கு சலுகைகள் செய்து கொடுப்பதற்காக, கர்நாடக சிறைத்துறை, டி.ஜி.பி.,யாக இருந்த சத்ய நாராயண ராவ், இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக, சிறைத்துறை டி.ஐ.ஜி.,யாக இருந்த ரூபா, குற்றம் சாட்டினார். இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்த, மாநில அரசு உத்தரவிட்டது.இந்நிலையில், டி.ஐ.ஜி., சத்யநாராயண ராவ், தன் வக்கீல் மூலம், ரூபாவுக்கு, நேற்று, நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதில், கூறப்பட்டுள்ளதாவது:எனக்குள்ள நற்பெயரை கெடுக்கும் நோக்கத்தில், ஆதாரமின்றி, ரூபா குற்றம் சாட்டியுள்ளார். சிறையில், சசிகலாவுக்கு சிறப்பு சமையல் அறை ஏற்பாடு செய்து கொடுத்ததாக, கூறியுள்ள அவர், அதற்கான ஆதாரத்தை வெளியிடவில்லை. எனவே, எந்தவித நிபந்தனையுமின்றி, மூன்று நாட்களில் அவர், மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில், 50 கோடி ரூபாய் கேட்டு, மான நஷ்ட வழக்கு தொடருவேன். இவ்வாறு நோட்டீசில் கூறப்பட்டுள்ளது. டி.ஜி.பி., சத்யநாராயண ராவ், ஓய்வு பெறுவதற்கு, இன்னும் நான்கு நாட்களே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இதற்கிடையே, சிறையில் நடந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்திய குழு, தன் முதல்கட்ட அறிக்கையை, நேற்று தாக்கல் செய்தது.

There are no comments yet