அதிமுகவில் குடுமி பிடி ஆரம்பம் – தினகரன் vs எடப்பாடி & பன்னீர் – ஆகஸ்ட் 5 அதிர்வுகள்

147

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் இன்னொரு அணி என இரு அணிகளாக செயல்பட்டு வருகிறது.

எடப்பாடி பவனிசாமி அணியில் இருந்து கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் சசிகலாவும், தினகரனும் திடீரென ஒதுக்கி வைக்கப்பட்டனர். இதற்கான அறிவிப்பை அமைச்சர்கள் வெளியிட்டனர்.

இதனை ஏற்றுக்கொண்ட தினகரன் 60 நாட்கள் வரை பொறுமை காக்கப் போவதாக அறிவித்தார். தினகரனின் இந்த அறிவிப்பை தொடர்ந்து அதிமுக இரு அணிகளும் இணையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கான சாத்தியமே இதுவரை இல்லாமல் இருந்து வருகிறது.

தினகரன் விதித்த கெடு வரும் 4 ஆம் தேதியுடன் முடிகிறது. அதன் பின்னர் தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ள அவர் அதற்கான முயற்சிகளில் வேகம் காட்டி வருகிறார். வருகிற 5 ஆம் தேதி அன்று தினகரன் அதிமுக தலைமை கழகத்துக்கு செல்வார் என்றும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக அதிமுக அம்மா அணி மாவட்ட நிர்வாகிகளுக்கு தினகரன் அழைப்பு விடுத்துள்ளார். இதற்கு போட்டியாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அதிமுக தலைமை கழகத்தில் அமைச்சர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் தினகரன் ஆஜராகி விட்டு வெளியில் வந்த டிடிவி. தினகரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ’நீதியின்மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. நான் குற்றமற்றவன்; நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்.

நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெறுவதற்காக, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். பொதுமக்களைச் சந்தித்துப் பேச உள்ளேன். கட்சியின் வளர்ச்சிக்காக அயராது உழைப்பேன்’ என்றார்.

மேலும், கட்சியின் பொதுச்செயலாளர் செயல்பட முடியாமல் இருக்கும் நிலையில், துணை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட எனக்கே கட்சியை வழி நடத்தி செல்லும் முழு அதிகாரமும் எனக்கே உள்ளது என்றார்.

அதிமுக இரு அணிகள் இணைப்பு தொடர்பாக தினகரன் 60 நாள் கெடு விதித்திருந்த நிலையில் அந்த கெடு, வரும் 4 ஆம் தேதியுடன் முடிகிறது.

இதுகுறித்து தினகரனிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு தினகரன் பதிலளிக்கையில், இரண்டு அணிகளும் சுமுகமான முடிவு எடுக்கவில்லை. நான் என்ன செய்யப்போகிறேன் என்பதை வரும் 4 ஆம் தேதி வரை பொறுந்திருந்து பாருங்கள். நான் எதற்காக கால அவகாசம் கொடுத்தேனோ, அதில் எள்ளளவும் முன்னேற்றம் இல்லை. அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளராக என் கடமையைச் செய்யவேண்டி உள்ளது.

இதற்கு மேல் கட்சியை சிறப்பாக வழி நடத்திச் செல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன். கட்சியின் நலனுக்காகவே செயல்பட உள்ளேன். யாரையும் நான் எதிரியாக பார்க்கவில்லை.

2019 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை குறி வைத்தே கட்சி பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன். எனது நடவடிக்கைகள் அனைத்தும் இனி கட்சி நலன் சார்ந்தே இருக்கும்.

ஆட்சியையும், கட்சியையும் எடப்பாடி பழனிசாமியே வழி நடத்துகிறார் என்று அமைச்சர் ஜெயக்குமார் இன்று காலையில் கூறி இருக்கிறாரே என்ற கேள்விக்கு,  ஜெயக்குமார் எனக்கு நல்ல நண்பர். ஏதோ ஒரு பயத்தில் அவர் இதுபோன்று தொடர்ந்து பேசி வருகிறார். எல்லாம் சரியாகிவிடும்.

பிரிந்து சென்ற அனைவரையும் ஒருங்கிணைத்து கட்சியை வழிநடத்துவதே எனது முதல் பணி.

நடிகர் கமல்ஹாசன் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில், நடிகர் கமல் மக்களால் பெரிதும் மதிக்கப்படுபவர். அவர் ஆதாரத்துடன் குற்றச்சாட்டுகளை முன்வைக்க வேண்டும். அமைச்சர்கள், கமல் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர்கள் ஒருமையில் விமர்சிப்பதை விட்டு விட்டு  அரசியல்ரீதியாக அணுகி உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.

மத்திய அமைச்சரவையில் அதிமுக சேரப்போவதாக வெளியான தகவல் குறித்த கேள்விக்கு, யூகத்தின் அடிப்படையில் செய்திகள் வெளியானது. இதற்கு பதில் அளிக்க விரும்பவில்லை என்றார்.

மேலும், நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து அதில் வெற்றி பெற வேண்டும். கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு, மானியம் ரத்து, ரேஷன் பொருட்கள் நிறுத்தம் போன்ற நடவடிக்கைகளால் மக்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே, மத்திய அரசு அதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும்  என்றார். டிடிவி. தினகரன்.

பகிர்

There are no comments yet