சசிகலாவுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க-விலிருந்து பிரிந்து சென்றார். சசிகலாவின் தலைமையை ஏற்க விரும்பாத அ.தி.மு.க-வினர் ஓ.பன்னீர்செல்வம் பின்னால் சென்றனர். சசிகலாவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் செயல்பட்டனர். முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட சசிகலாவின் வாழ்க்கையில் விதி விளையாடியது. ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்த சமயத்தில் சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு வெளியாகி, சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. இதனால், சசிகலாவின் வழிகாட்டுதலின்பேரில் முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்றுக்கொண்டார்.

இதையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தினகரன் ஆகியோருக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் களமிறங்கினர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன், வேட்பாளராகப் போட்டியிட்டார். அவரை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மதுசூதனன் களமிறக்கப்பட்டார். இரட்டை இலைச் சின்னத்துக்கு தினகரனும் மதுசூதனனும் உரிமைக் கோரியதால் தேர்தல் ஆணையம் சின்னத்தை முடக்கியது. தினகரனுக்குத் தொப்பி சின்னத்தையும் மதுசூதனனுக்கு மின்கம்பத்தையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. அதோடு, ஓ.பன்னீர்செல்வம் அணிக்குப் புரட்சித் தலைவி அம்மா அணி என்றும் தினகரனுக்கு அம்மா அ.தி.மு.க அணி என்றும் பெயரிடப்பட்டது. இதற்கிடையில் அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழுவால் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலாவின் பதவி செல்லாது என்றும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை தேர்தல் ஆணையத்தில் நடந்துவருகிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகித்த புகாரில் தேர்தலை ரத்து செய்தது தேர்தல் ஆணையம்.
இதன்பிறகு, கட்சியில் தினகரனின் செல்வாக்கு குறையத் தொடங்கியது. முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் கட்சியிலிருக்கக் கூடாது என்று வலியுறுத்தி தர்மயுத்தத்தை நடத்தினர். சசிகலா குடும்பத்தினரை கட்சியிலிருந்து ஓரங்கட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் குறிப்பிட்ட அமைச்சர்களும் சம்மதம் தெரிவித்தனர். அதன்பிறகு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியும் ஓ.பன்னீர்செல்வம் அணியும் ஒன்றிணைய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதற்காக குழுவும் அமைக்கப்பட்டது. ஆனால், இரண்டு அணிகளும் இணையவில்லை.

இதற்கிடையில் இரட்டை இலைச் சின்னம் விவகாரம் தொடர்பாக சசிகலாவால் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட தினகரனை டெல்லி போலீஸார் கைது செய்தனர். ஜாமீனில் வெளியில் வந்த தினகரன், ஓ.பன்னீர்செல்வம் அணியும் முதல்வர் எடப்பாடி அணியும் இணைய 60 நாள்கள் காலக்கெடு விதித்தார். அந்த காலக்கெடு ஆகஸ்ட் 4ம் தேதியுடன் முடிவடைகிறது.
காலக்கெடு முடிவடையும் நிலையில், இரண்டு அணிகளும் இணையவில்லை என்றால் ஆகஸ்ட் 5ம் தேதிக்குப்பிறகு கட்சிப்பணிகளில் ஈடுபடுவேன். மேலும், கட்சித் தலைமை அலுவலகத்துக்கும் வருவதாகத் தெரிவித்தார். இது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் தரப்பினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கட்சித் தலைமை அலுவலகத்தில் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் தினகரன் விவகாரம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன.

கூட்டத்தில், தினகரன் தெரிவித்தபடி ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்த இரண்டு அமைச்சர்கள் சந்தித்துப் பேசியதாகச் சொல்லப்படுகிறது. அதில், சில வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டுள்ளதாம். பொதுச் செயலாளர் பதவியும் துணை முதல்வர் பதவியும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கொடுப்பதாகவும், முன்னாள் அமைச்சர் மாஃபா.பாண்டியராஜனுக்கு அமைச்சர் பதவியை வழங்குவதாகவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது. இதனால், ஓ.பன்னீர்செல்வம் அணியினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

ராயப்பேட்டை கட்சித் தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்த நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் வீட்டிலும் ஆலோசனை நடந்துள்ளது. கூட்டத்தில் பங்கேற்ற ஓ.பன்னீர்செல்வம் அணியினர் முகம் பளீச் எனக் காணப்பட்டது. அப்போது கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், நமக்கு கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்துள்ளார். இந்த இரண்டு கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்படுகிறது என்பதை தினகரன் ஆதரவாளர்கள் அறிய ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணியுடன் ஒன்றிணைவது, தினகரன் விவகாரம் ஆகியவை தொடர்பாகத் தீவிர ஆலோசனை நடத்தப்பட்டதாகக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.

கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர்கள் சிலரிடம் பேசினோம். “முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்குக் கொடுக்கப்பட்ட உறுதிமொழிகளை நிறைவேற்றுவது, தினகரன் விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. தினகரன் விவகாரத்தில் எதிர்ப்புகள் கிளம்பியதால் அதைப் பிறகு, பேசிக் கொள்ளலாம் என்று தெரிவித்தனர். ஓ.பன்னீர்செல்வம் அணியினருடன் இணைப்பு குறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும்” என்றனர்.

கூட்டத்திலிருந்து வெளியில் வந்த துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், “அ.தி.மு.க. அணிகள் இணைவது தொடர்பாகக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இரு அணிகள் இணைப்பு விரைவில் நடக்கும்” என்றார் சுருக்கமாக.
பன்னீர்செல்வம் தரப்பில் பேசியவர்கள், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியினர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் அணிகள் இணைப்பு குறித்து பேசப்பட்டுள்ளது. ஏற்கெனவே, அணிகள் இணைப்பு குறித்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டபோது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதாகச் சொல்கின்றனர். பேச்சுவார்த்தை நடத்திய பிறகே அடுத்தக்கட்ட முடிவை எடுக்க முடியும். பன்னீர்செல்வத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அவர், பழைய பன்னீர்செல்வமாக வருவார் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறோம்” என்றனர்.

இந்நிலையில் எடப்பாடிக்கும், ஓபிஎஸ்சுக்கும் நெருக்கடி கொடுக்கும் தினகரனை வேறு ஏதாவது வழக்கில் மாட்டி சிறைக்கு அனுப்புமாறு மோடிக்கு இருவரும் கோரிக்கை விடுத்துள்ளதாக நமது கப்ஸா நிருபர் கூறுகிறார்.

பகிர்

There are no comments yet