இன்றைய அ.தி.மு.க-வில் யார் எந்த அணியில் இருக்கிறார்கள் என்ற தகவல் தெரியவில்லை. கட்சி தாவும் படலத்தைவிட, அ.தி.மு.க-வில் அணி தாவும் படலம் அதிகரித்துள்ளது. ஓ.பன்னீர்செல்வம் அணியிலிருந்த ஆறுக்குட்டி எம்.எல்.ஏ., முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணிக்கு மாறியிருக்கிறார். அடுத்து, யார் மாறப்போகிறார்கள் என்ற கேள்வி ஓ.பன்னீர்செல்வம் அணியில் எழுந்துள்ளது. இந்தச் சூழ்நிலையில், ஆகஸ்ட் 5-ம் தேதி, கட்சித் தலைமை அலுவலகத்துக்கு டி.டி.வி.தினகரன் வர உள்ளதாக வந்த தகவல், அ.தி.மு.க-வில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக விவாதிக்க, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று மாலை கட்சித் தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், ஓ.பன்னீர்செல்வம் அணியினருடன் இணைவதுகுறித்து விவாதம் நடந்துள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி சில நிமிடங்கள் பேசியுள்ளார். அவரது பேச்சில் உற்சாகமில்லை. அம்மாவின் கனவை நிறைவேற்ற வேண்டும். எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவைச் சிறப்பாக நடத்த வேண்டும் என்று பேசியிருக்கிறார். ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசத் திட்டமிட்டிருந்ததற்கு, தலைமைச் செயலகத்துக்குச் சென்ற தினகரனின் ஆதரவாளர்கள் முட்டுக்கட்டை போட்டுவிட்டதாக உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன.

தலைமைச் செயலகத்துக்குச் சென்ற டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்களிடம் பேசினோம். “சசிகலா குடும்பத்தினரைக் கட்சியிலிருந்து யாராலும் ஓரங்கட்ட முடியாது. ஏனெனில், அவரால்தான் நாம் இந்தப் பதவியிலிருக்கிறோம் என்பதை நீங்களும் மறந்துவிடக்கூடாது. ஓ.பன்னீர்செல்வம் அணியினருடன் இணைவதற்காக சசிகலா குடும்பத்தினரைக் கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவிப்பு வெளிவந்தால், அது சிக்கலை ஏற்படுத்தும். தற்போதுள்ள சூழ்நிலையைக் கருத்தில்கொண்டுதான் தினகரன் அமைதியாக இருக்கிறார். நாங்கள் பேசிய பிறகு, ‘யோசித்துவிட்டு முடிவு எடுக்கிறேன்’ என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். இந்தத் தகவலை தினகரனிடம் சொல்லியிருக்கிறோம். பெங்களூரு சிறையில் சசிகலாவைச் சந்தித்த பிறகு, இன்று தினகரன் அதிரடி அறிவிப்பை வெளியிடுவார்” என்றனர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் பேசியவர்கள், “தலைமைச் செயலகத்தில் எட்டு அமைச்சர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தும்போது உற்சாகமாகவே இருந்தார். அந்தக் கூட்டத்தில் சில முடிவுகள் எடுக்கப்பட்டன. அதைத்தான் அமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேச முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டிருந்தார். ஆனால், தினகரனின் ஆதரவாளர்கள் சந்தித்த பிறகு, அந்த முடிவு உடனடியாக மாற்றப்பட்டுள்ளது. அ.தி.மு.க-வில் உள்ள அனைவரையும் அரவணைத்துச் செல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் அணி, தினகரன் ஆதரவாளர்கள் என யாரைப் பகைத்துக்கொண்டாலும் அ.தி.மு.க-வுக்குத்தான் சிக்கல் ஏற்படுத்தும். இதனால், ஒவ்வொரு முடிவையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நீண்ட யோசனைக்குப் பிறகே எடுத்துவருகிறார்” என்றனர்.

இந்தச் சூழ்நிலையில் அமைச்சர் ஜெயக்குமார், ‘கட்சியும் ஆட்சியும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சிறப்பாகச் செயல்பட்டுவருகின்றன’ என்று கூறியுள்ளார். துணைச் சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அணிகள் இணைப்பு விரைவில் நடைபெறும் என்று தெரிவித்தார். அதே கருத்தை அமைச்சர் வேலுமணியும் தெரிவித்தார். ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவருக்கு நெருக்கமான அமைச்சர்கள் மட்டும் வாயைத் திறக்காமல் அமைதியாக இருக்கின்றனர்.

இதற்கிடையில், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அவரின் ஆதரவாளர்கள் ஆலோசனை நடத்தினர். அந்தக் கூட்டத்தில், அணிகள் இணைப்புகுறித்துப் பேசப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவை ஆவலுடன் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால், வழக்கம்போல அணிகள் இணைப்புகுறித்து விவாதிக்கப்பட்டதாக மட்டுமே தகவல் வெளியானது. இதை, நாடகம் என்று சொல்லத் தொடங்கியுள்ளனர் ஓ.பன்னீர்செல்வம் அணியினர்.

இந்த நிலையில் டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல் தெரிவித்துள்ளதாவது: துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நினைத்தால், அமைச்சர் ஜெயக்குமார் அவரது பதவியை இழக்க நேரிடும் என எச்சரிக்கை விடுக்கிறேன்.

ஆட்சிக்கு தலைமை தாங்குபவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆனால் எடப்பாடி பழனிசாமிக்கே பொதுச்செயலாளர் சசிகலா தான். இந்த அடிப்படை கூட தெரியாமல், படிச்சு என்ன பிரயோஜனம். ஜெயகுமார் இப்படியே பேசிக் கொண்டிருந்தால் அவரது பதவியை இழப்பார் என்பது உறுதி.

அதிமுக தலைமைக் கழகமானது எங்கள் கட்சியின் அலுவலகம். எங்கள் கட்சி அலுவகலத்திற்கு நாங்கள் செல்ல யாருடைய அனுமதியும் தேவையில்லை. வரும் 5-ம் தேதி துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கட்சியின் வளர்ச்சி குறித்து ஊடகங்களுக்கு தகவல் தெரிவிப்பார் என்று கூறினார்.

வெற்றிவேல் தினகரனின் வலதுகரமாக உள்ளவர். எனவே தினகரனே ஜெய்குமாருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக கருதப்படுகிறது. ஆகஸ்ட் 5 க்கு பிறகும் தினகரனின் முதல் டார்கெட் ஜெயக்குமார் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

.

பகிர்

There are no comments yet