Reproduced from Dinamalar
சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இடியாப்ப சிக்கலில் இருப்பதாகவும், அதனால், அவர் கடும் மன உளைச்சலில் இருப்பதாகவும், அ.தி.மு.க., வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிகின்றன.
இது குறித்து, அ.தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:
முதல்வரான பிறகு எடப்பாடி பழனிசாமி, தினகரனை சார்ந்தவர்களை செயல்பாடுகளில் இருந்தும் முடக்கினார் பழனிச்சாமி.
இதனால், எடப்பாடி பழனிச்சாமி மீது அதிகபட்சக் கோபத்தில் சசிகலா தரப்பினர் உள்ளனர். அவருக்கு கடுமையான நெருக்கடி கொடுத்து, எப்படியாவது பதவி இறங்க வைத்து, தங்களுக்கு இணக்கமான அமைச்சர் ஓ.எஸ்.மணியனை, முதல்வர் பதவியில் அமர்த்தி விட வேண்டும் என்று திட்டமிட்டு காய் நகர்த்தி வருகின்றனர்.
இதற்காக, அ.தி.மு.க., அம்மா அணியில் இருக்கும் எம்.எல்.ஏ.,க்கள் பலரையும் வளைக்கும் தீவிரத்தில் இறங்கி உள்ளனர்.
இந்நிலையில், அ.தி.மு.க.,வின் பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் அணியினர் இணைய வேண்டும் என்ற கோரிக்கையை கெடுவாக வைத்து, இரண்டு மாதங்கள் காத்திருந்த தினகரனை, கட்சியின் தலைமை அலுவலகம் வந்து தீவிர அரசியல் பணியாற்ற வேண்டும் என்று, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களும், ஆதரவு தலைவர்களும், முடுக்கிவிட, அவர் தலைமைக அலுவலகம் வரப் போவதாக அறிவித்திருக்கிறார்.
இதனால், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மன உளைச்சலில் ஆழ்ந்திருக்கிறார். ஒருவேளை, தினகரன், அறிவித்தபடியே தலைமைக் கழகம் வந்து, அங்கு, தன்னுடைய ஆதரவாளர்கள் மற்றும் தினகரன் ஆதரவாளர்களுக்கிடையே மோதல் வெடித்து, சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படுமானால், தினகரனை கைது செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் தமிழக அரசுக்கு ஏற்படும்.
அப்படிப்பட்ட சூழலில், ஒரே கட்சிக்குள்ளேயே அதிகார யுத்தம் நடப்பது அப்பட்டமாக பொதுமக்களுக்கு தெரிந்து, கட்சிக்கும்,ஆட்சிக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்தும் என்றும் நினைக்கிறார் பழனிச்சாமி.
இதற்கிடையில், தினகரன் சொல்படி கேட்டு, ஆட்சியை செலுத்தவில்லை என்றால், ஆட்சியை கவிழ்ப்போம் என்று தினகரன் தரப்பில் இருந்து முதல்வருக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வர, கடந்த வாரம் இப்படி மிரட்டல் தூதராக வந்த டில்லி பிரதிநிதி ஒருவரை, கடுமையாக திட்டி அனுப்பி இருக்கிறார் முதல்வர்.
ஆட்சியை கவிழ்த்தால், தினகரனின் அரசியல் எதிர்காலமே போய் விடும். ஏற்கனவே கடும் சிக்கலில் இருக்கும் சசிகலாவுக்கு மேற்கொண்டும் சிக்கல் ஏற்பட்டு விடும். ஆட்சி-அதிகாரத்துக்காக காத்துக் கொண்டிருக்கும் தி.மு.க., ஆட்சிக்கு வந்துவிடும். ஸ்டாலின் முதல்வர் ஆகி விடுவார். மக்களிடம் செல்வாக்கு இழந்து நிற்கும் தினகரனையும், சசிகலா குடும்பத்தினரையும், அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஸ்டாலின் நிர்மூலம் ஆக்கி விடுவார்.
ஏற்கனவே மக்கள் செல்வாக்கு இழந்து நிற்கும் சசிகலா குடும்பம், கடும் சோதனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். என்னைப் பொறுத்த வரையில், ஆட்சியில் இருந்துதான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை. காலத்தின் கட்டாயம் ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறேன். தினகரனை கவனமாக செயல்படச் சொல்லுங்கள். இல்லையென்றால், அவர் எடுக்கும் நடவடிக்கைகளால் ஏற்படும் விளைவுகளை அவர்தான் சந்திக்க வேண்டியிருக்கும் என்று கடுமையாக எச்சரிக்கை விடுத்திருக்கிறார் முதல்வர் பழனிச்சாமி.
இதனால் ஆடிப் போன தினகரன், உடனடியாக பெங்களூரு சென்று, சித்தி சசிகலாவை சந்தித்துப் பேசி இருக்கிறார். அப்போது, முதல்வர் பழனிச்சாமியுடன் மோதி, எதிர்காலத்தை சிதைக்க வேண்டாம்; அதற்காக, முழுமையாக அரசியல் நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கிக் கொண்டு விட்டால், பழனிச்சாமியின் வளர்ச்சி, நம்முடைய அரசியல் எதிர்காலத்தையே பாதித்து விடும்.
அதனால், கவனமாக அரசியல் செய். ஜெயலலிதாவால் ஏற்படுத்தப்பட்ட ஆட்சியை கலைக்க காரணமாகி விட்டோம் என்று, தகவல் பரவினால், அது கடும் சிக்கலை மக்கள் மத்தியில் நம் குடும்பத்துக்கு ஏற்படுத்தி விடும். ஏற்கனவே நம் குடும்பத்தின் மீது கடும் ஆத்திரத்தில் இருக்கும் தொண்டர்கள், நம்மை விட்டு முழுமையாக விலகிச் சென்று விடுவர்.
எக்காரணம் கொண்டும் நாம் ஆட்சியை கவிழ்த்துவிடக் கூடாது. மாற்று அரசு அமைய வாய்ப்பில்லாமல் போய் விட்டால், நமக்குத்தான் பெரும் சிக்கல் என்று, அறிவுரை சொல்லி அனுப்பி இருக்கிறார்.
இதனால், தலைமைக் கழகம் சென்று, கட்சி நிர்வாகிகளை சந்திக்கும் முடிவில் இருந்து தினகரன் பின் வாங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. இருந்தாலும், இந்த பணியை அவர் வெளியில் வைத்து செய்யக் கூடும். அப்போதும் கூட, முதல்வருக்கு நெருக்கடிதான். இருந்தாலும், இப்போதைக்கு உள்ள சூழலில், தினகரன் தலைமைக் கழகம் வராமல் இருந்தால் போதும் என்ற மனநிலையில்தான், முதல்வர் பழனிச்சாமி இருக்கிறார்.
இப்படி தினகரன் மிரட்டல் ஒரு பக்கம் இருப்பதை சமாளிக்க, மறுபக்கம் ஓ.பன்னீர்செலவம் அணியினரை கட்சியில் இணைத்து விடலாம் என்று, முதல்வர் பழனிச்சாமி யோசித்து செயல்பட்டால், அவர்கள், நிபந்தனைகளில் இருந்து சற்றும் பின்வாங்காததால், கடும் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறார் முதல்வர்.
இருந்த போதும், இரு அணிகள் இணைப்பு தொடர்பாக, இரண்டு தரப்பிலும் ரகசிய பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதோடு, இணைப்பு தொடர்பாக, நல்ல தகவல்கள் வந்து கொண்டிருப்பதால், அதில் மட்டும் சற்றே நிம்மதியாக இருக்கிறார் முதல்வர்.
இதனால், வரும் வாரங்களில், தமிழகத்தின் அ.தி.மு.க., அரசியல் கொஞ்சம் பரபரப்பாகவே இருக்கும்.இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் கூறின.
There are no comments yet
Or use one of these social networks