சென்னை: மெரினா கடற்கரை காமராஜர் சாலையில், 2006-ம் ஆண்டு, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலை நிறுவப்பட்டது. பின்னர், அந்தச் சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கிறது என அகற்ற தமிழக அரசால் முடிவு செய்யப்பட்டது. சிவாஜி சிலையை அடையாற்றில் புதிதாகக் கட்டப்பட்டுவரும் சிவாஜி மணிமண்டபத்தில் நிறுவப்படும் எனக் கூறியது அரசு தரப்பு. அதை எதிர்த்தும், அகற்றப்படும் சிவாஜி சிலையை, மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் காந்தி – காமராஜர் சிலைகளின் வரிசையில் மாற்றி அமைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ‘நடிகர் திலகம் சிவாஜி சமூகநலப் பேரவை’ சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதற்குத் தடை கோரி தாக்கல்செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், சிலையை அகற்ற தடை இல்லை என உத்தரவு பிறப்பித்தது.

இதையடுத்து, ஆகஸ்ட் 2ஆம் தேதி 2017 புதன் இரவு சென்னை காமராஜர் சாலையிலிருந்து சிவாஜி சிலை அகற்றும் பணி காவலர்கள் புடைசூழத் தொடங்கி, சில மணி நேரத்தில் முழுவதுமாக அங்கிருந்து சிலை பாதுகாப்பாக அகற்றப்பட்டது. அகற்றப்பட்ட சிலை, அதே சாலையில் வேறு இடத்தில் நிறுவப்படுமா அல்லது சிவாஜி மணிமண்டபத்துக்குக் கொண்டு செல்லப்படுமா என்பது விரைவில் தெரியவரும். பல்வேறு அரசியல் கட்சியைச் சார்ந்த தலைவர்களும் சிவாஜி சிலையை மெரினா கடற்கரையிலேயே வேறு இடத்தில் நிறுவ வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துவந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடற்கரை சாலையில் உள்ள நடிகர் சிவாஜி சிலையை அகற்றி, அடையாறு அருகே கட்டப்படும் சிவாஜி மணிமண்டபத்தில் வைக்கப்படும் என்று தமிழக அரசு தற்போது மீண்டும் அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள ‘கப்சா’ அறிக்கையில் காணக்கிடைப்பதாவது: ‘நடிகர் திலகம் என அனைவராலும் அழைக்கப்படும் சிவாஜிகணேசனின் நடிப்பையும் நாடகங்களையும் மிஞ்சும் திகில் காட்சிகள் நிறைந்த கபடக நாடகம் தற்போது தமிழகத்தில் அரங்கேறி வருகிறது. ஜெயலலிதா அப்பல்லோ சிகிச்சையில் ‘சஸ்பென்ஸ் திரில்லரை’ பார்த்தோம். பின்னர் ஜெயலலிதா உடல் நல்லடக்கம் செய்யப்பட்டபோது அதிமுகவினரின் சோக நடிப்பை பிழிந்து ஊற்றினோம். அறுபது நாட்களுக்கு பிறகு திடீர் திருப்பங்களுடன் ஓபிஎஸ் அவர்களின் தர்ம யுத்தம் என்ற சாத்வீக நடிப்பை ரசித்தோம். சின்னம்மா சிறை சென்றபோது சீற்றத்துடன் கூடிய சபத நடிப்பை கண்டு களித்தோம். இரட்டை இலைக்கு அடித்துக் கொண்டு இரண்டு அணிகளாக பிரிந்து கொடூர சண்டையிடும் ‘கேங் வார்’ காட்சிகளைக் கண்டு மயிர்க்கூச்செரிந்தோம்.முதல்வர் எடப்பாடியின் எதற்கும் அஞ்சாத ‘அண்டர்பிளே நடிப்பை நித்தம் நித்தம் ரசிக்கிறோம். தினகரனின் அடாவடித்தனமான வில்லன் நடிப்பை ஆகஸ்ட் 5 முதல் கண்டு களிக்க உள்ளோம். எனவே இந்த அரசியல் நடிகர் திலகங்களின் நடிப்புக்கு முன் சிவாஜி கணேசனின் நடிப்பு தவிடு பொடியாகி விட்டதால், அவமான சின்னமாக கருதப்படும் அவரது சிலையை கடற்கரை சாலையில் இருந்து அகற்றினோம், மேலும் சிவாஜி காங்கிரஸ்காரர் என்பதால் மோடிஜியின் கைங்கர்யமும் உள்ளது.’ என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில் கமல் வழக்கம் போல் ட்விட்டரில் பாரதி கவிதையை இழிவுபடுத்தி இனியொரு சிலை செய்வோம், அதை எந்நாளும் காப்போம் என்று கூறி சர்ச்சையை உண்டாக்கியுள்ளார்.

பகிர்

There are no comments yet