Reproduced from Dinamani
அதிமுக அணிகள் இணைவதற்கு டிடிவி தினகரன் அளித்த காலக்கெடு வெள்ளிக்கிழமையுடன் (ஆக. 4) முடிவடைகிறது. இதையடுத்து, அவர் எத்தகைய நடவடிக்கைகளை எடுக்கப் போகிறார் என்பதை அதிமுகவின் இரு அணிகளும் உற்று நோக்கி கவனித்து வருகின்றன.
அதிமுக அம்மா அணியும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான புரட்சித்தலைவி அம்மா அணியும் இணைவதற்கு 60 நாள்கள் கால அவகாசம் அளித்திருந்தார், அம்மா அணியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன். இந்த கால அவகாசத்துக்குள் இரு அணிகளும் இணைவதற்கான சாத்தியக் கூறுகள் இதுவரை வெளிப்படையாகத் தென்படவில்லை.
மௌனம் காக்கும் முதல்வர் பழனிசாமி: இரு அணிகள் இணைப்பு குறித்தோ, தினகரனின் வருகை குறித்தோ அதிமுக அம்மா அணியின் தலைமை நிலையச் செயலாளரும், முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் இருந்து வருகிறார்.
முதல்வர் பதவியைச் சிறப்பாகச் செய்து வருகிறேன் என்பதை வெளிப்படுத்துவதற்காக முனைப்புகளில் அவர் தீவிரம் காட்டி வருகிறார். காலக்கெடு முடிவடையும் வெள்ளிக்கிழமையன்று காலை, அவர் தலைமைச் செயலகம் வரத் திட்டமிட்டுள்ளார். கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம், வணிகவரிகள் மற்றும் பதிவுத் துறை, நிதித் துறை ஆகிய துறைகள் தொடர்பான புதிய திட்டங்களையும், கட்டடங்களையும் அவர் திறந்து வைக்கிறார்.
மேலும், தலைமைச் செயலகத்தில் கட்சி நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்களையும் அவர் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசவுள்ளார். இந்த நிகழ்வுகளை முடித்து விட்டு சனிக்கிழமை அவர் பெரம்பலூரில் நடைபெறும் எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவில் பங்கேற்கவுள்ளார்.
தினகரன் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வருவதையோ, கட்சி நடவடிக்கைகளில் பங்கேற்பதையோ அதிமுக அம்மா அணி விரும்பவில்லை. தனது தலைமையில் தமிழக அரசு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது என்பதைக் காட்டவே வரும் இரண்டு நாள்களிலும் பல்வேறு நிகழ்வுகளில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்க இருப்பதாக அதிமுக அம்மா அணி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
வருவாரா-மாட்டாரா?: கால அவகாசம் முடிவடைந்துள்ள நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு டிடிவி தினகரன் வரும் சனிக்கிழமை (ஆக. 5) வருவாரா என்ற கேள்வி பலமாக எழுந்துள்ளது.
இதுகுறித்து கருத்துத் தெரிவித்த அவரது ஆதரவாளர்கள், அதிமுகவின் தொண்டர்களும், கட்சியினரும் தனக்கு ஆதரவாக இருக்கின்றனர் என்பதை அதிமுகவின் இரு அணிகளுக்கும் நிரூபிக்கவே டிடிவி தினகரன் விரும்புகிறார். இதனால், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சென்று கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகளைச் சந்தித்து ஆதரவைத் திரட்ட அவர் முடிவு செய்துள்ளார். தனக்கு மிகப்பெரிய அளவில் ஆதரவு இருப்பதை இரு அணியினருக்கும் உணர்த்திய பிறகே அவர் தலைமை அலுவலகத்துக்கு வர விரும்புகிறார். எனவே, முதலில் சுற்றுப் பயணத்தை முடித்த பிறகே அவர் தலைமை அலுவலகம் வர வாய்ப்புகள் அதிகம் என்றனர்.
நிர்வாகிகள் நியமனம்: அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியில் ஒவ்வொரு மாவட்டத்திலும் நிர்வாகிகள் இதுவரை நியமிக்கப்படவில்லை. எனவே, நிர்வாகிகளை நியமித்து தனது ஆதரவாளர்களை தக்க வைக்க ஓ.பன்னீர்செல்வம் முடிவு செய்துள்ளார்.
டிடிவி தினகரன் சுற்றுப் பயணம் செல்லும் போது, தனது ஆதரவாளர்கள் யாரும் அவரைச் சந்தித்து அவருக்கு ஆதரவைத் தெரிவித்து விடக் கூடாது என்பதற்காகவும், தனது அணியை ஒவ்வொரு மாவட்டத்திலும் பலம் பொருத்தியதாகக் காட்டவும் அனைத்து நிலைகளிலும் நிர்வாகிகளை நியமிக்க ஓ.பி.எஸ்., முடிவு செய்திருக்கிறார். இதற்கான அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தலைமை அலுவலகம் வருவாரா, சுற்றுப் பயணம் செய்யப் போகிறாரா என அதிமுகவின் இரு அணிகளும் அவரது அரசியல் நகர்வுகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றன. மாவட்டந்தோறும் சுற்றுப் பயணம் என்ற திட்டம் வெற்றி அடைவதற்கு முன்பே அணிகளை இணைத்து விட வேண்டும் என்ற ரகசிய பேச்சுவார்த்தைகளும் நடந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
There are no comments yet
Or use one of these social networks