சென்னை: இரண்டு அணிகளும் இணைவதற்காக டி.டி.வி.தினகரன் விதித்த கெடு நேற்றுடன் முடிவடைந்தது. இன்று கட்சி அலுவலகம் வந்தால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எடப்பாடி அணியினர் எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து மாவட்டம்தோறும் பொதுக்கூட்டங்கள் நடத்துவதாக நேற்று தினகரன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். எடப்பாடி அணியினரும் – ஓபிஎஸ் அணியினரும் இணைய வேண்டும். அதற்காக இரண்டு மாதம் காத்திருப்பேன். அப்படியும் இணையாவிட்டால், ஆகஸ்டு 5ம் தேதி முதல் (நாளை) சென்னையில் உள்ள அதிமுக கட்சியின் தலைமை அலுவலகம் வந்து தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என்று டி.டி.வி.தினகரன் கூறி இருந்தார். ஆனால், அவரது அறிவிப்பை எடப்பாடி அணியினர் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. காரணம், சசிகலாவால் துணைப்பொதுச்செயலாளர் பதவியில் நியமிக்கப்பட்டவர்தான் தினகரன். பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதே அதிமுக சட்ட விதிகளுக்கு மாறாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று இந்திய தேர்தல் ஆணையத்திடம் ஓபிஎஸ் அணியினர் புகார் கொடுத்துள்ளனர். அதன்படி, சசிகலாவை பொதுச்செயலாளராக தேர்வு செய்தது செல்லாது என்ற உத்தரவை தேர்தல் ஆணையம் வெளியிடும் என்று அதிமுகவினர் உறுதியாக நம்பி வருகிறார்கள். இதனால், சசிகலாவால் நியமிக்கப்பட்ட துணை பொதுச்செயலாளர் தினகரன் பதவியும் செல்லாததாகி விடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், சசிகலா, தினகரன் உள்ளிட்ட அவரது குடும்பத்தை சார்ந்த அனைவரையும் கட்சியில் இருந்து ஒதுக்கி வைத்துள்ளதாக எடப்பாடி அணியினர் கடந்த 3 மாதத்திற்கு முன்பே அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டனர்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், டி.டி.வி.தினகரன், நான் தான் அதிமுகவின் துைண பொதுச்செயலாளர், பொதுச்செயலாளர் சிறையில் உள்ள நிலையில் கட்சியை வழிநடத்தும் பொறுப்பு தனக்குத்தான் உள்ளது என்று சொல்வதை எடப்பாடி அணியினர் ஏற்றுக்கொள்ளவில்லை. அதையும் மீறி, துணை பொதுச்செயலாளர் என்று கூறிக்கொண்டு சென்னை, ராயப்பேட்டைக்கு டி.டி.வி.தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வந்தால் அவர்களை கைது செய்யவும் எடப்பாடி அணியினர் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளனர். இந்த பிரச்னை காரணமாக, கடந்த சில நாட்களாக அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஏராளமான போலீசாரும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணிகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில், டி.டி.வி.தினகரன் விதித்த கெடு நேற்றுடன் முடிந்ததால், அதிமுகவில் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், இரண்டு நாட்களுக்கு முன் பெங்களூர் சிறையில் சசிகலாவை பார்த்துவிட்டு வெளியே வந்த தினகரன், கட்சி அலுவலகம் கண்டிப்பாக செல்வேன். ஆனால் எப்போது செல்வேன் என்பதை பத்திரிகையாளர்களுக்கு தெரிவிப்பேன் என்றார். அதேபோன்று தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பொதுக்கூட்டம் மூலமாக தொண்டர்களை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளேன் என்று கூறினார்.

இதில் இருந்து அவர் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு இன்று வரும் திட்டத்தை கைவிட்டு விட்டதாகவே கூறப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களாக டி.டி.வி.தினகரன் சென்னை, பெசன்ட்நகரில் உள்ள வீட்டிலேயே முடங்கி கிடந்தார். எம்எல்ஏக்கள் தங்கதமிழ்ச்செல்வன், வெற்றிவேல் மற்றும் நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட ஒரு சில ஆதரவாளர்கள் மட்டுமே தினகரனை வீட்டில் சந்தித்து ஆலோசனை நடத்தி வந்தனர். இரண்டு அணிகள் இணைவதற்காக அவர் விடுத்த கெடு நேற்றுடன் முடிந்தநிலையில், இன்று அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு செல்வார் என்று அறிவிப்பார் என்பதால், நேற்று காலை முதலே சென்னை பெசன்ட்நகரில் உள்ள டி.டி.வி.தினகரன் வீட்டில் ஏராளமான பத்திரிகை மற்றும் டிவி நிருபர்கள் காத்துக்கிடந்தனர். இந்நிலையில் நேற்று மாலை அதிமுக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் கூறி இருப்பதாவது: எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை சிறப்பித்திடும் வகையில் ஏழை, எளியோர் பயன்பெறும் வண்ணம் அதிமுக அமைப்பு ரீதியான மாவட்டம் வாரியாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி, பொதுக்கூட்டங்கள் நடைபெறும். அதன்படி முதல்கட்டமாக அதிமுக சார்பில் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் இடங்கள் வருமாறு: வருகிற 14ம் தேதி (திங்கள்) மதுரை மாநகர், புறநகர் மாவட்டங்கள் சார்பில் மேலூரில் பொதுக்கூட்டம் நடைபெறும். 23ம் தேதி வடசென்னை வடக்கு மாவட்டம், 29ம் தேதி தேனி, செப்டம்பர் 5ம் தேதி கரூர், 12ம் தேதி தஞ்சாவூர், 23ம் தேதி திருநெல்வேலி, 26ம் தேதி தர்மபுரி, 30ம் தேதி திருச்சி, அக்டோபர் 5ம் தேதி சிவகங்கை ஆகிய இடங்களில் பொதுக்கூட்டம் நடைபெறும்.

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா சார்பாக, துணை பொதுச்செயலாளர் என்ற முறையில் அனைத்து பொதுக்கூட்டங்களிலும் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்ற உள்ளேன். இந்த பொதுக்கூட்டங்களில் சம்பந்தப்பட்ட மாவட்டங்களை சேர்ந்த தலைமை கழக நிர்வாகிகளும், அமைச்சர்களும், மாவட்ட செயலாளர்களும், மாவட்ட நிர்வாகிகளும், எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் அதிமுக முன்னணியினரும் கலந்து கொள்வர். சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் இணைந்து, பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்தி, அதன் விபரங்களை அதிமுக தலைமை கழகத்திற்கும், அதிகாரப்பூர்வ நாளேடான நமது எம்ஜிஆர் பத்திரிகைக்கும் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

பகிர்

There are no comments yet