சென்னை: டிடிவி தினகரன் வழங்கிய மாநில மருத்துவர் அணி இணை செயலாளளர் பொறுப்பை ஏற்க விரும்பவில்லை என்று கூறியிருந்த பெரியகுளம் எம்.எல்.ஏ கதிர்காமு, தற்போது கட்சிப் பொறுப்பை ஏற்பதாக அறிவித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவையடுத்து அதிமுக இரண்டாக பிளவுபட்டது. இரு அணிகளும் இணைவேண்டும் பேச்சுவார்த்தை குழுக்கள் அமைக்கபட்ட போதிலும், எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இரு அணிகளும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை சுமத்தியே வந்தனர். இதனிடையே, இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் டிடிவி தினகரனை டெல்லி போலீஸார் கைது செய்தனர். இதனிடையே, தான் ஒதுங்கி இருந்தால் இரு அணிகளும் இணையும் என்றால், ஒதுங்கிக் கொள்கிறேன் என்று டிடிவி தினகரன் அறிவித்தார். மேலும், இரு அணிகளும் இணைவதற்கு 60 நாட்கள் காலக்கெடு விதித்தார்.

இரு அணிகளும் இணைவதற்காக விதித்த கெடு முடிந்த நிலையில், டிடிவி தினகரன் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வர இருப்பதாக அறிவித்திருந்தார். அதோடு, 2019-ம் ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தருலுக்காக கட்சியை பலப்படுத்தும் நோக்கில் கட்சிப் பணியில் ஈடுபடப்போவதாக தெரிவித்தார்.

ஆனால், கட்சியில் இருந்து டிடிவி தினகரன் ஒதுக்கப்பட்டுவிட்டதாகவே எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவிக்கும்போது, கட்சியின் பொதுச்செயலாளர் யார் என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது. அந்த நிலையில், அவர் நியமனம் செய்த பதவிகளும் கேள்விக்குறிதான். எனவே, துணைப்பொதுச்செயலாளர் பதவி என்பதும் கேள்விக் குறிதான். எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் ஆட்சியும், கட்சியும் வழிநடத்தப்பட்டு வருகிறது என்று கூறியிருந்தார்.

ஆனால், டிடிவி தினரகன் தெரிவிக்கும்போது, தற்போது எனக்கு எதிராக பேசிக்கொண்டு இருப்பரவர்கள் எல்லாம் பயத்தின் காரணமாகவே அவ்வாறு பேசிக்கொண்டு இருக்கின்றனர். தற்போதைய நிலையில் ஒன்றை மட்டுமே கூறிக்கொள்ளவே விரும்புகிறேன் என்று, “அரசனை நம்பு புருசனை கைவிட்டது” போல தெரிகிறது என்றார்.

இந்த நிலையில், டிடிவி தினகரன் வழங்கிய மாநில மருத்துவர் அணி இணை செயலாளளர் பொறுப்பை ஏற்க விரும்பவில்லை என்று பெரிய குளம் எம்.எல்.ஏ கதில்காமு கூறியிருந்தார். ஆனால், அவர் திடீரென அந்தர் பல்டி அடித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை மாலை செய்தியாளர்களிடம் பேசிய கதிர்காமு கூறும்போது, டிடிவி தினகரன் எனது மருத்துவ சேவையை பாராட்டும் வகையில் கட்சியில் முக்கியப் பொறுப்பை எனக்கு அறிவித்தார். முன்னதாக உடல் நிலை கருத்தில் கொண்டு ஏற்க முடியாது என்று கூறியிருந்தேன். ஆனால், அற்குள்ளாக தேவையற்ற குழப்பங்களும், சர்ச்சைகளும் ஏற்படுவது போல தெரிந்தது. அதனால், டிடிவி தினகரன் அளித்துள்ள பொறுப்பை ஏற்று செயல்படப் போகிறேன் என்று கூறினார்.

இதே போல் தினகரன் கொடுத்த கட்சிப் பதவி தேவையில்லை என்று அமைச்சர் ஆர்.பி. உதயக்குமாரை அருகில் வைத்துக் கொண்டு பேட்டி கொடுத்த திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ஏ.கே.போஸ் தற்போது தினகரனுக்கு ஆதரவாக பல்டி அடித்திருக்கிறார். அதிமுக அம்மா அணியின் துணைப்பொதுச்செயலாளர் ஏ.கே.போஸுக்கு விவசாயப் பிரிவு இணைச் செயலாளர் பதவியை வழங்கி அறிவித்தார். ஆனால் இந்தப் பதவி தனக்குத் தேவையில்லை என்று பேட்டி அளித்திருந்தார் போஸ். அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் ஏற்பாட்டின் பேரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியபோது இவ்வாறு கூறினார் போஸ். ஆனால் அப்போதே அவர் தட்டுத் தடுமாறி பேசியதைப் பார்த்து பலருக்கும் சந்தேகம். இவர் முழு மனதுடன்தான் பேசுகிறாரா என்று. இப்போது அந்த சந்தேகத்தை போஸே கிளியர் செய்து விட்டார். அதாவது தினகரன் பக்கம் தாவி விட்டார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் போஸ் இன்று பேசுகையில், எனக்கு பதவி கொடுத்திருக்கிறார்கள். அதிமுகவில் பதவி வாங்குவது பெரும் கடினம். அதிலும் என்னை கேட்காமல் பதவி கொடுத்திருக்கிறார்கள். கொடுத்திருக்கும் பதவியை காப்பாற்றுவது எனது கடமை. எனது உடல் நிலை சற்று சரியில்லாத காரணத்தினால் அதற்கு சிகிச்சை பெற்று வருவதால் பதவியை வேண்டாம் என்று சொன்னேன். துணைப்பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தினகரன் கட்சியை விழிநடத்திச் செல்வார். அவர் வழிநடத்தி செல்வதில் எந்த தவறும் இல்லை என்று கூறி ஜகா வாங்கியுள்ளார் போஸ்.

இதனால் உடம்பு சரியில்லாமல் தினகரன் கொடுத்த பதவியை வேண்டாம் என்று சொன்னவர்களை ஒரே நாளில் டிரீட்மென்ட் கொடுத்து தனது வழிக்கு கொண்டுவந்துள்ளார். எதிரிகளுக்கு ஷாக் டிரீட்மென்ட் கொடுப்பதில் அம்மாவையே மிஞ்சி விட்டார். இனி எடப்பாடிக்கும், பன்னீருக்கு சிக்கல் தான் என்று தினகரன் ஆதரவாளர்கள் குஷியாக உள்ளனர்.

பகிர்

There are no comments yet