சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு நிச்சயமாக வருவார் என்று கூறிய தமிழருவி மணியன், அவரது அரசியல் கொள்கைகள் குறித்து பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் நிச்சயமாக அரசியலுக்கு வருவார். நிச்சயம் ஆட்சியைப் பிடிப்பார் என்று ஆங்கில செய்தித் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் காந்திய மக்கள் இயக்க நிறுவனர் தமிழருவி மணியன் கூறியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா என்பது குறித்து பல்வேறு தரப்பில் இருந்தும் கருத்துகள் வந்து கொண்டிருக்கின்றன. சிலர் அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று வலியுறுத்தி வரும் நிலையில், சிலர் எதிர்க்கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த தமிழருவி மணியன், ஆமாம், ரஜினிகாந்த் நிச்சயம் அரசியலுக்கு வருவார். சந்தேகத்துக்கு இடமின்றி, ரஜினி அரசியல் கட்சி தொடங்குவார்.

அதேப்போல, எந்த சந்தேகமும் இல்லாமல் ரஜினி காந்த் ஆட்சியைக் கைப்பற்றுவார். அவருடன் அரசியல் மற்றும் சமூக பிரச்னைகள் குறித்து ஆலோசித்தேன். அப்போது, அவர் அரசியல் கட்சி தொடங்குவது குறித்து உறுதி செய்துள்ளார் என்று கூறினார்.

அவரது அரசியல் கட்சியின் கொள்கைகள் குறித்து  விளக்கம் அளித்த தமிழருவி மணியன், அரசியலில் நுழையும் எண்ணத்தில் இருக்கும் ரஜினிகாந்த் 3 கொள்கைகளை வைத்துள்ளார்.

1. தென்னிந்திய நதிகளை இணைப்பது. மகாநதி முதல் காவேரி வரை அனைத்து நதிகளையும் இணைப்பதே முதல் லட்சியம். இந்த திட்டத்தின் மூலம் காவேரி பிரச்னை முற்றிலும் முடிவுக்கு வரும் என்று அவர் நம்புகிறார்.

விவசாயிகளின் பிரச்னையும், குடிநீர் பிரச்னையும் இருக்கவே இருக்காது என்பதால், நதிகள் இணைப்புக்கு ரஜினிகாந்த் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்.

2. இரண்டாவது கொள்கை…  ஊழல் இல்லாத ஆட்சி. தமிழகத்தில் ஊழல் இல்லாத ஆட்சியை ஏற்படுத்துவதே தனது இரண்டாவது லட்சியமாகக் கொண்டுள்ளார்.

3. மூன்றாவது… வெளிப்படைத்தன்மை. ஆட்சியில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவந்துவிட்டால் பல பிரச்னைகள் முடிவுக்கு வந்து விடும். ஊழலையும் ஒட்டுமொத்தமாக ஒழித்துவிடலாம் என்பதே ரஜினியின் 3வது கொள்கை.

அதே சமயம், அவர் அரசியலில் நுழைவது மக்களுக்கு சேவையாற்றவே தானே தவிர, ஊழல் செய்து பணம் சம்பாதிக்க அல்ல என்றும் தமிழருவி மணியன் கூறியுள்ளார்.

அவர் அரசியல் கட்சி தொடங்குவாரா அல்லது ஏற்கனவே இருக்கும் அரசியல் கட்சியில் இணைந்து செயல்படுவாரா என்று கேள்விக்கு, ரஜினிகாந்த் நிச்சயமாக எந்த அரசியல் கட்சியிலும் சேர மாட்டார். சொந்த கட்சிதான் தொடங்குவார்.  ஆனால், மற்றவர்கள் ரஜினியை, அவரவர் கட்சியில் இணைய வைக்க முயற்சித்து வருகிறார்கள். ஆனால் அவர் எந்தக் கட்சியிலும் சேர மாட்டார். நான் உறுதி அளிக்கிறேன் அவர், பாஜக உட்பட எந்த கட்சியுடனும் இணைய மாட்டார்.

அவருக்கு பின்னால் பாஜக இருப்பதாகக் கூறுகிறார்கள். ஆனால் எனக்குத் தெரிந்தவரையில் தற்போது வரை, அவருக்கு பின்னால் பாஜக இல்லவே இல்லை என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்துக் கூறிய கமல் ரசிகர், ஆண்டவர் கமல் ஹாசனின் அதிரடி அரசியல் பிரவேசத்தால், என்ன செய்வதென்று தெரியாமல் ஆண்டவனை விட்டுவிட்டு இப்போது புரோக்கர் தமிழருவி மணியன் மூலமாக ஆழம் ஆழம் பார்க்கிறார். பாஜக இவரை தனிக்கட்சி ஆரம்பிக்க விடாது. கடைசியில் பாஜகவில் சேர்ந்து காவிகளுடன் பாவியாகி விடுவார் என்றார்.

There are no comments yet