சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் வி.கே. சசிகலாவை தினகரன் இன்று சிறையில் சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் “சிறையில் சசிகலாவுக்கு எந்த சலுகையும் வழங்கப்படவில்லை அவர் எப்போதும் போல் வேதா இல்லத்தில் உள்ளது போல் நார்மலாக தான் இருக்கிறார். பழனிசாமி, பண்ணீர்செல்வம் அணிகளுக்கு நான் கொடுத்த 60 நாட்கள் கெடு முடிந்து விட்டது, அவர்களால் கட்சியை ஒன்றிணைக்க முடியவில்லை, பணப் பற்றாக்குறைதான் காரணம். கெடு முடிந்துவிட்டதால் நானே நேரடியாக கட்சிப்பணிகளில் ஈடுபடப் போகிறேன். மாவட்டம் தோறும் கூட்டங்களில் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி குறித்து கழுவி கழுவி ஊற்றுவேன். 122 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருக்கிறது. சிலர் மட்டுமே வெளிப்படையாக ஆதரவைத் தெரிவித்திருக்கிறார்கள்” என்று தினகரன் தெரிவித்தார்.

அதிமுக அம்மா அணியின் நட்சத்திர பேச்சாளார் நாஞ்சில் சம்பத் இன்று சென்னை பெசண்ட் நகர் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் அளித்த பேட்டி: “டி.டி.வி. தினகரனை அவரது இல்லத்தில் சந்தித்தேன். சமீபத்தில் கட்சி நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சமீபத்தில் பதவி அறிவிக்கப்பட்டவர்கள் சிலர் அதனை மறுப்பது அமைச்சர் உதயகுமார் போன்றொரின் நடவடிக்கைகள் தான். பதவி அறிவிக்கப்பட்டவுடன் பாதி நிர்வாகிகள் எங்கள் அணிக்கு திரும்பி விட்டார்கள். மீதமுள்ளவர்களும் பணப்பட்டுவாடா முடிந்ததும் திரும்பி விடுவார்கள். தன்னை வளர்த்து இந்த அளவுக்கு ஆளாக்கிய மன்னார்குடி குடும்பத்திற்கே துரோகம் செய்ய நினைக்கும் ஒருவராகத்தான் முன்னள் முதல்அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இருக்கிறார். சொந்த ஊர் மக்களுக்கு தவித்த வாய்க்கு தண்ணீர் கூட தர மறுக்கிறார்.” என்றார்.

மேலும் கப்சா செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத், “தற்பொழுது தமிழ்நாட்டில் 12 முதல்வர் வேட்பாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் விஜயகாந்த், அன்புமணி, சீமான், குட்டிஅம்மா தீபா, சின்னம்மா, தினகரன், ரஜினிகாந்த், வைகோ, பன்னீர்செல்வம், எடப்பாடி, திருமாவளவன் இறுதியாக ‘இலவுகாத்த கிளியாக’ செயல் தலைவர் ஸ்டாலின் ஆகியோர். இதில் கோவில் குளம் என்று நேரிடையாக சுற்றி சாமி கும்பிட கட்சி கடவுள் மறுப்பு கொள்கை தடுப்பதால், தூர் வாரும் சாக்கில் ஒவ்வொரு கோவிலாக சென்று ரகசிய கடவுள் வழிபாடு செய்கிறார் ஸ்டாலின். அந்தந்த கோவிலின் கல்வெட்டுக்களில் ஸ்டாலின் தன் பெயரை பொறித்து அதன் பக்கத்தில் உட்கார்ந்து கொள்ளாததுதான் பாக்கி. அதிமுக ஆட்சி கவிழும் என்று சட்டையை கிழித்தெல்லாம் சேட்டை செய்தார். ஒன்றும் பலிக்கவில்லை. சமீபத்த்தில் நான் ஒரு பகல் கனவு கண்டேன். அதில் இந்த 12 பேருடன் டிடிவி தினகரன் அவர்கள் மியூசிக்கல் சேர் விளையாடுவது போலவும், முதல் ரவுண்டிலேயே ஸ்டாலின் வெளியேற்றபடுகிறார். கடைசி ரவுண்டில் பழனிசாமி, பன்னீர்சல்வம் ஆகியோருடன் விளையாடி இருவரையும் தள்ளிவிட்டு முதல்வர் நாற்காலியில் அமர்வது போல் கனவு கண்டேன். இது விரைவில் நனவாகும்.

அதிமுகவில் இருந்து மன்னார்குடியை பிரிக்க முடியாது, அது சர்க்கரையில் கலந்துவிட்ட மணலை பிரிப்பது போன்றது. அதிமுகவின் எதிர்காலமே டிடிவி தினகரன் தான். அவர் தலைமை பதவிக்கு வந்தால் எல்லா பிரச்சனைகளும் தீர்ந்து விடும். இல்லை பிரச்சனை பண்ணுகிறவர்களுக்கு வைட்டமின் ப கொடுத்து சர்ஜரி செய்ய தயங்க மாட்டார். நான் கருணாநிதி, ஜெயலலிதா, வைகோ மற்றும் ஸ்டாலின் ஆகிய அனைவருடனும் பணியாற்றி சொம்படித்து இருக்கிறேன். ஆனால் டிடிவி தினகரன் போல் ஒரு அடாவடியையும் அராத்து தனத்தையும் கண்டதில்லை.” இவ்வாறு நாஞ்சில் சம்பத் கூறினார்.

பகிர்

There are no comments yet