சென்னை: நடிகர் விஜய்யின் திரைப்படங்கள் குறித்தும் அவரது நடிப்பு குறித்தும் டிவிட்டரில் கருத்துத் தெரிவித்த `தி நியூஸ் மினிட்’ பத்திரிகையின் ஆசிரியர் தன்யா ராஜேந்திரன் மீது டிவிட்டரில் ஆபாச சொற்களால் தாக்குதல் நடத்திய விஜய் ரசிகர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதியன்று, ஷாருக்கான் நடித்த ’When Harry met Sejal’ படம் குறித்து தனது கருத்தை தன்யா டிவிட்டரில் தெரிவித்தபோது, “விஜய்யின் ஐம்பதாவது படமான ‘சுறா’ படத்தை இடைவேளை வரை பார்த்தேன்; அதற்குப் பிறகு தான் நான் எழுந்து வெளியில் வந்தேன். ஆனால், #Whenharrymetsejal அந்த சாதனையை முறியடித்துவிட்டது. இடைவேளைவரைகூட பார்க்க முடியவில்லை” என்று குறிப்பிட்டிருந்தார்.

அவரது இந்த டிவீட், ஷாருக்கானின் படம் குறித்ததாக இருந்தாலும் விஜய்யின் படமும் அதில் கேலி செய்யப்பட்டிருப்பதால் ஆத்திரமடைந்த விஜய்யின் ரசிகர்கள் அவரை டிவிட்டரில் வசைபாடத் துவங்கினார்கள். இதற்கு முன்பாக விஜய்யின் ‘பிளாப்’ படங்களான வேலாயுதம், வேட்டைக்காரன் படங்கள் குறித்துத் தன்யா தெரிவித்திருந்த டிவீட்களின் ‘ஸ்க்ரீன் ஷாட்’களையும் எடுத்து வெளியிட்டு தன்யா தொடர்ந்து விஜய்யின் திரைப்படங்கள் குறித்து எதிர்மறையான கருத்துக்களைத் தெரிவித்துவருவதாக கூறி அவரை ஆபாசமாக பேசத் துவங்கினர். ஆகஸ்ட் ஐந்தாம் தேதி காலையிலிருந்து தன்யாவைக் குறிப்பிட்டு மிக ஆபாசமான வாசகங்களையும் கருத்துக்களையும் டிவிட்டரில் தெரிவிக்க ஆரம்பித்தனர். #publicitybeebdhanya என்ற ஹாஷ்டாகை பயன்படுத்தி மீண்டும் வசைமாரி பொழியத் துவங்கினர். அந்த ஹாஷ்டாக் டிவிட்டரில் டிரெண்ட் ஆகத் துவங்கியது. கிட்டத்தட்ட 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிவீட்டுகள் தன்யாவுக்கு எதிராக வந்தன. இரு நாட்களில் ஒட்டுமொத்தமாக 60 ஆயிரத்தைத் தாண்டியது. இந்த நிலையில், தன்யா கடந்த காலங்களில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை கடுமையாக விமர்சித்து கருத்துக்களை வெளியிட்டதாகக் கூறப்படும் டிவீட்களின் ஸ்க்ரீன் ஷாட்டுகளை வெளியிட்ட சிலர், இன்னும் கடுமையாக அவரை விமர்சிக்க ஆரம்பித்தனர்.

முதலில் தன்யாவை ஆதரித்த சிலர், தி.மு.க. தலைவர் குறித்த டிவீட் வெளியானதற்குப் பிறகு அவரைக் கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தனர். இதையடுத்து, சென்னை ஆணையர் அலுவலகத்தில் இதுகுறித்து தன்யா புகார் அளித்திருக்கிறார். இந்தியக் குற்றவியல் சட்டத்தின் பல்வேறு பிரிவுகள், தகவல் தொழில்நுட்பச் சட்டம், தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய சட்டங்களின் கீழ் காவல்துறை வழக்குப் பதிவுசெய்துள்ளது.

இது குறித்து நடிகர் விஜய் வெளியிட்டுள்ள ‘கப்சா’ அறிக்கையில் “சமுதாயத்தில் பெண்களை அதிகம் மதிப்பவன் நான். யாருடைய திரைப்படத்தையும் யாரும் விமர்சிப்பதற்கு கருத்து சுதந்திரம் உண்டு. எனது ரசிகர்கள் எந்த நேரத்திலும், பெண்களை இழிவாகவும் தரக்குறைவாகவும் விமர்சிக்கக் கூடாது. எனது ஆரம்ப கால படங்களில் நடிகை சங்கவியின் ஆபாசா காட்சிகள் நிறைந்திருக்கும், குறிப்பாக ‘ரசிகன்’ என்ற படத்தில் சீனியர் நடிகை ஸ்ரீவித்யாவுக்கே குளியல் அறை காட்சி வைத்து முதுகில் சோப்பு போட்டு நடித்தவன் நான், என் அம்மாவுடன் சேர்ந்து ‘தொட்டபெட்டா ரோட்டுமேல முட்டைபரோட்டா வட்ட வட்ட கல்லு தோசை சுட்டு போடட்டா’ மற்றும் அய்யய்யோ அலமேலு ஆவின் பசும்பாலு’ போன்ற ‘கருத்தாழமிக்க’ பாடல்கள் பாடி பெண்களை பெருமைப்படுத்தி உள்ளேன். எனது படங்களின் ஹீரோயின்களை நானே தெரிவு செய்து விடுவேன். நானும் என் டைரக்டரும் சேர்ந்து ஹீரோயின்களை திரைப்படங்களில் இழிவுபடுத்தும் வேலையை பார்த்துக் கொள்வோம், ரசிகன் வேடிக்கை பார்த்துவிட்டு பாக்ஸ் ஆபீஸ் கல்லாவை நிரப்பும் வேலையை மட்டும் பார்த்தால் போதும். ரொம்ப கஷ்டப்பட வேண்டாம்.” என்று கூறி உள்ளார்.

பகிர்

There are no comments yet