சென்னை: முரசொலி இரண்டாம் நாள் பொதுக்கூட்டம் கனமழையால் தடைபட்ட போதும், கொட்டும் மழையில் விழா மலரை வெளியிட்ட ஸ்டாலின், இந்த விழா பின்னர் அறிவாலயம் கலைஞர் அரங்கில் அனைத்து கட்சி பிரமுகர்கள் புடைசூழ பிரம்மாண்டமாக நடைபெறும் என்று அறிவித்தார். பின்னர் நடந்த தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பிறகு நிருபர்களிடம் பேசிய மு.க. ஸ்டாலின், (ஆயிரத்து தொள்ளாயிரத்து முன்னூற்றி இருபத்து நாலாவது முறையாக) “முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவோம்” என்று கூறினார்.

அதற்கு பதில் அளித்து அமைச்சர் ஜெயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:- தேர்தலின் போது விஜயகாந்த் என்ற பழம் நழுவி பாலில் விழும் என்று கலைஞர் சொன்னார். அப்போது அது நடக்கவில்லை. வயது முதிர்வால் கலைஞர் என்ற பால் வீட்டில் பிரிட்ஜில் இருக்கிறது. தற்போது மு.க.ஸ்டாலின் எட்டாக் கனிக்கு கொட்டாவி விடுகிறார். அ.தி.மு.க. அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தால் அதை சந்திக்க தயார். ‘கருவாடு மீனாகாது ஸ்டாலின் நினைத்தது எதுவும் நடக்காது’ இவ்வாறு அவர் கூறினார்.

சும்மா கிடந்த கேப்டனை சீண்டியதால், கொதித்து போன கேப்டன், கூல் ஆவதற்காக கோயம்பேடு அலுவலகத்தில் கேப்டன் டிவியில் ‘தில்லானா மோகனாம்பாள்’ திரைப்படத்தில் மனோரமா நடிப்பை ரசித்தபடி கப்சா நிருபரிடம் பேசினார். “மனோரமா என்ற மாபெரும் நடிகை சமீபத்தில் மறைந்தது கூட தெரியாமல் ‘ஆச்சி’ மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவேன் என்ற ஸ்டாலின் மீது நகைப்பு தான் வருகிறது. திமுக ஆட்சிக் காலத்தில் மனோரமாவை பாடாய்ப் படுத்தினார்கள், அதிமுக ஆட்சிக் காலத்தில் வடிவேலுவை பாடாய்ப் படுத்தினார்கள், என்னையும் பேஸ்புக்கில் மீம் போட்டு டம்மி பீசாக உரவகப் படுத்திவிட்டார்கள். ஆனால் எங்கள் எல்லாரையும் விட ஆக பூட்டகேசாக ஸ்டாலின் மாறி வருகிறார்.” என்றார்.

பகிர்

There are no comments yet