மதுரை மாவட்டம் மேலூரில், டி.டி.வி. தினகரன் தலைமையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா எற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அ.தி.மு.க மூன்றாகப் பிரிந்த பிறகு, ஒ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி அணியின் சார்பாக பல்வேறு இடங்களில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடத்தப்பட்டுவருகிறது. இந்நிலையில், இன்று மதுரை மாவட்டம் மேலூரில், டி.டி.வி. தினகரன் தலைமையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் மொத்தம் 14 எம்.எம்.ஏ-க்கள் மற்றும் 5 எம்.பி-க்கள் பங்கேற்றனர்.
விழாவில் கூடியிருந்த மக்களிடம் தினகரன் பேசியது:
“எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவது ஆட்சியைக் கவிழ்க்கும் செயலா? நான் வேகமாக பேசினாலும் உணர்ச்சிவசப்பட்டுப் பேசுபவன் அல்ல. எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு எங்களால் ஆபத்தில்லை; மடியில் கனம் உள்ளதால் அப்படி நினைக்கிறார்கள். 420 என்ற சட்டப்பிரிவுகுறித்து பேசினால், ஏன் கோபம் வருகிறது. சென்னையில் உட்கார்ந்துகொண்டு கட்சியை நடத்தலாம் என நினைத்தால், அது பூனை கண்ணை மூடிக்கொண்டு இருண்டுவிட்டது என்பதற்குச் சமம்.
அரசியல் பற்றி 23 வயதிலிருந்து ஜெயலலிதா பாசறையில் பயிற்சிபெற்றவன் நான். சசிகலா நினைத்திருந்தால் எங்கள் குடும்பத்தில் யாரையாவது முதல்வராக்கி இருக்கலாம்.
பொதுக் கூட்டத்தில் பங்கேற்க வந்தவர்கள் அடைந்த சிரமத்தை தமிழகம் அறியும். கூட்டத்துக்கு வர வேண்டிய மூன்று எம்.எல்.ஏ-க்களைக் கடத்தி வைத்துள்ளனர். எம்.எல்.ஏ.க்களை ஒளித்துவைத்தவர்கள் விரைவில் ஒழிக்கப்படுவார்கள்.
பதவிக்கு ஆசைப்படுபவர்கள் நாங்கள் இல்லை. நினைத்திருந்தால் டிசம்பர் 5 அன்றே பதவிக்கு வந்திருக்க முடியும்.
2,000-ல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, தமிழக அரசியல் நிலவரம்குறித்து ஆய்வுசெய்து அறிக்கை தரச் சொன்னார் ஜெயலலிதா.
அமைச்சர்கள் அனைவரும் கலந்துகொண்ட பிறகும், அங்கு கூட்டம் கூடாதது ஏன்? இங்கு ஒரு அமைச்சர்கூட வரவில்லை. ஆனால், இத்தனை மக்கள் வந்துள்ளீர்கள். ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை வேண்டும் என்கிறார்கள். நீதி விசாரணை நடக்கட்டும். அப்படி நடந்தால், முதலில் அவர்கள் தான் விசாரிக்கப்படுவார்கள். ஜெயலலிதா மரணத்தின்போது உடன் இருந்தவர்கள் அவர்கள்தான். தர்மத்துடன் போராட்டம் நடத்துபவர்கள் தர்மயுத்தம் நடத்துவதாகச் சொல்கிறார்கள்.
மத்திய அரசிடம் இணக்கமாக இருந்து, தமிழகத்திற்கு பல நல்ல திட்டங்களைப் பெற்றுத் தாருங்கள்” என்றார்
There are no comments yet
Or use one of these social networks