சென்னை: அதிமுக பிளவு அடுத்தகட்டத்தை எட்டிவிட்டது. நீறு பூத்த நெருப்பாக இருந்த தினகரன் – எடப்பாடி  மோதல் பட்டவர்த்தனமாக இன்று வெடித்துவிட்டது. இரண்டாவது கட்டமாக தினகரன் தன் ஆதரவு நிர்வாகிகளுக்கு பதவிகளை வாரிவழங்கியதில் கொதித்துப்போன எடப்பாடி தரப்பு அவசர கதியில் கட்சியின் தலைமைக்ககழக நிர்வாகிகளின் கூட்டத்தைக் கூட்டி கட்சியில் தினகரனின் துணைப்பொதுச்செயலாளர் நியமனம்  செல்லாது என அதிரடியாக தீர்மானம் இயற்றியிருக்கிறது.

இது ஒருபுறமிருக்க இந்த களேபரங்களுக்கு முன் திருவண்ணாமலை வந்த தினகரன் அங்கு மூக்குப்பொடி சித்தர் என பிரபலமாகியுள்ள சாமியார் ஒருவரை சந்தித்தார். தினகரன் அவரைச் சந்தித்த படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது. அதைவிட வேகமாக மூக்குப்பொடி சித்தர் அவரிடம் வெற்றியுடன் திரும்பிவா என தெரிவித்ததாக தகவல் பரப்பி வருகிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

எடப்பாடி அணிக்கு எதிராக மோதல் முற்றிய நிலையில் மேலூரில் இன்று முதலாவது பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார் டிடிவி தினகரன். இதனால் அரசுக்கு எதிராக என்ன அறிவிப்பை வெளியிடுவாரோ என்ற பரபரப்பு தொற்றியது. அவர் பேசுகையில் கூறியதாவது: பதவியில் இருக்கும் மமதை அவர்கள் கண்களை மறைக்கிறது. கட்சியை பலப்படுத்த அவர்கள் தலைக்கனத்தை அகற்றும் பொறுப்பு நமக்கு உள்ளது. தினகரன் கோபத்தில் பேசுவதாக நினைக்க வேண்டாம்.

மக்கள் நலனின் அக்கறை வைத்து திட்டங்களை தீட்டினால்தான் தேர்தலில் வெற்றி பெற முடியும். தலைமை கழகத்தில் கதவை பூட்டிக்கொண்டு போர்ஜரி வேலை பார்த்து கட்சியை கைப்பற்ற நீங்கள் தீர்மானம் போட முடியாது. கட்சியை அபகரிக்க நினைப்பவர்களை அதிமுக தொண்டர்கள் மன்னிக்க மாட்டார்கள். எங்களுக்கு இயக்கம்தான், தொண்டர்கள்தான் பெரிது. தொண்டர்கள் விரும்பினால் எதையும் செய்ய தயாராக உள்ளோம்,. சட்டசபை உறுப்பினர்கள் மட்டுமே கட்சியில்லை. எஜமானவர்கள் தொண்டர்கள்தான். அவர்கள் கூறுவது படி செயல்படுங்கள். நீங்கள் உங்களை எஜமானர்கள் என நினைத்துக்கொள்ள வேண்டாம். எம்எல்ஏக்களை ஒளித்து வைக்கும் வேலைகளில் ஈடுபட்ட கூடாது. தொகுதி மக்களுக்கு நல்லது செய்ய பாருங்கள்.

மத்திய அரசிடமுள்ள இணக்கத்தை பயன்படுத்தி நீங்கள் மக்களுக்கு நன்றி தெரிவியுங்கள். நீங்கள் எங்களுக்கு விரோதிகளா, புரட்சி தலைவர் எம்ஜியாருக்கு விரோதிகளா என்பதை நினைத்து பாருங்கள். அல்லது, கழக தொண்டர்களும், காலமும் உங்களை மன்னிக்காது எனக் கூறிக்கொள்கிறேன். நாடாளுமன்ற தேர்தலை நோக்கி, ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். ஒரு சிலர் செய்யும் குழப்பங்களை கண்டு நீங்கள் கலங்க வேண்டாம். நமது இயக்கம் ஒன்றரை கோடி தொண்டர்களை கொண்ட இயக்கம். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவை வெற்றிபெறச் செய்யும் நோக்கத்தோடு பயணிப்போம். அதிமுக தொண்டர்கள் விரும்பினால் எதையும் செய்யும் தளபதிகள் நாங்கள். அட்டைக் கத்தி யுத்தத்தை கைவிட்டுவிடுங்கள். ஆட்சியை வைத்து கட்சியை கைப்பற்றலாம் என்பதை மறந்துவிடுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

There are no comments yet