அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான டாக்டர் நமது எம்.ஜி.ஆர் இதழில் வெளியாகும் கட்டுரைகள் அதிமுகவில் நடக்கும் கோஷ்டி பூசல்களை பிரதிபலிக்கிறதோ என்று தோன்றும் அளவுக்கு ”சித்திரகுப்தன்” என்ற பெயரில் நேற்று பாஜகவை வறுத்தெடுத்து விமர்சனம் ஒன்று வெளியாகியுள்ளது.

அதிமுக அம்மா அணி, அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியினர் என இரு அணிகளும் மத்திய பாஜக அரசுடன் தொடர்ந்து நெருக்கம் காட்டி வரும் சூழலில், கடந்த வெள்ளியன்று வெளிவந்த டாக்டர் நமது எம்.ஜி.ஆர் இதழில், மத்திய பாஜக அரசை “காவி அடி – கழகத்தை அழி” என கடுமையான விமர்சனங்கள் வெளியாகியுள்ளது. இந்த விமர்சனம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, உண்மையில் டாக்டர் நமது எம்.ஜி.ஆர் இதழ் யாருடைய கட்டுப்பாட்டில் செயல்படுகிறது ? என்ற கேள்வியையும் எழுப்ப தூண்டுகிறது.

உத்திரகண்ட் மாநிலத்தில் முன்னாள் முதலமைச்சர் ஹரீஷ் ராவத்திற்கு எதிராக கடந்த ஆண்டு பாஜக நகர்த்திய அரசியல் சதுரங்க வேட்டைகளை நினைவு கூர்ந்துள்ள டாக்டர் நமது எம்.ஜி.ஆர் இதழ், அருணாச்சல பிரதேசத்தில் நிகழ்ந்த அரசியல் மாற்றங்கள் மற்றும் அங்கு காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட பல அரசியல் தாக்குதல்களையும் எடுத்துக்காட்டியுள்ளது. அதேபோல கோவா மாநிலத்தில் பாஜகவின் ஆட்சி பிடிப்பு முறையையும் கடுமையாக சாடியுள்ளது டாக்டர் நமது எம்.ஜி.ஆர் இதழ்.

பீகார் மாநிலத்தில் சிறப்பாக நடந்து வந்த காங்கிரஸ் – ஐக்கிய ஜனதா தளம் – ராஷ்டிரிய ஜனதா தள கூட்டணி அரசை பாஜக உடைக்க முற்பட்ட விதத்தையும் அதன் மூலம் நிகழ்ந்த அரசியல் மாற்றங்களையும் எடுத்துக்கூறியுள்ள டாக்டர் நமது எம்.ஜி.ஆர் இதழ், தொடர்ந்து பாஜகவை விமர்சித்துக்கொண்டே தான் வருகிறது.

”உத்திரகண்டில் ருத்திர தாண்டவமாடி

அருணாச்சல பிரதேசத்தில் அத்து மீறி அடாவடிகள் நடத்தி,

கோவாவில் காங்கிரஸின் குடி கெடுத்து,

பீகாரில் லாலு – நித்தீஷை பிரித்து

பின் வழியே அதிகார பீடத்தை பிடித்து

அரவிந்த் கெஜ்ரிவாலின் அதிகார செங்கோலை பிடுங்கி

புதுச்சேரி நாராயணசாமிக்கு புதுசு புதுசா தொல்லைகளை அடுக்கி

மணிப்பூரில் மக்கள் தீர்ப்புக்கு எதிராக மகுடத்தை பறித்து

ஆளுநர்களை அரசியல் ஏஜென்டுகளாக்கி அக்கிரமங்கள் நடத்தி

நீதித்துறை, அரசியல் சாசனம், அமலாக்கத்துறை, வருமான வரி, தேர்தல் ஆணையம்

சிபிஐ என்னும் தன்னாட்சி அமைப்புகளை தலைகுனிய வைத்து

அரசியல் அறிப்புக்கு அவற்றை சொறிகின்ற ஆயுதமாக்கி

ஜனநாயக படுகொலையை சகஜங்களாக்கி

சர்வாதிகார பகல் கொள்ளையை சாதனை என பீற்றி

எழுபதாண்டு இந்திய அரசியல் பண்பாட்டுக்கு இழிவுகளை சேர்த்து

அப்பழுக்கற்ற பாரத்த்தின் பன்முகத்தன்மையை ஆழ்குழி தோண்டி புதைத்து

உச்சநீதிமன்றத்திற்கும் அதிகாரம் இல்லையென உக்கிரமான அக்கிரமத்தை நிகழ்த்திய இந்த உத்தமர்கள் தான்

ஆண்டுக்கு 2.5 கோடி பேருக்கு வேலை என ஆசை வலையை வீசியவர்கள்

ஆளுக்கு 15 லட்சம் ரொக்கம் என வாய்ஜாலம் பேசியவர்கள்

அலைமீது வலைகொண்டு வாழும் மீனவர்கள் அமைச்சகமென அள்ளி வீசியவர்கள்

அமெரிக்க டாலர் மதிப்பை 35 ரூபாய்க்கு அடக்குவோம்

பெட்ரோல் – டீசல் விலையை பாதியை குறைப்போம் என்றெல்லாம்

வகை வகையாய் வாயாலேயே வடை சுட்டவர்கள்

வாய்மையால் விடை சொல்ல வழியற்றவர்கள்

விலை நிலங்களை வெடிகுண்டு கிட்டங்கிளாக்கி

விவசாயி வயிற்றில் அடிப்பவர்கள்

வாக்களித்த மக்களை வரிக்குதிரை ஆக்கியவர்கள்

கரன்சியை வெற்று காகிதமாக்கி கருப்பு பணம் ஒழித்தோம் என கதை அளப்பவர்கள்

இவர்கள் முன் நின்று நடத்தியதெல்லாம் கூடவே மோடியா இல்லை லேடியா என

சவால் விட்ட இயக்கத்தை மூன்றாக பிளந்து ஈரிலையை முடக்கி இன்னல்கள் தந்ததும்தானே”

என சித்திரகுப்தன் என்ற பகுதியில் குறிப்பிட்டு டாக்டர் நமது எம்.ஜி.ஆர் இதழில் அவற்றை வெளியிட்டுள்ளனர்.

ஏற்கனவே தமிழக அரசியலில் இருக்கும் பல்வேறு குழப்பங்களை தாண்டி, அதிமுகவில் மூன்று அணிகள் இருக்கிறது என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற தினகரனின் கருத்துக்கு அப்பாற்பட்டு, தற்போது அதிமுகவில் மூன்று அணிகள் இருக்கிறது என அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான டாக்டர் நமது எம்.ஜி.ஆர் குறிப்பிட்டுள்ளது.

மறைந்த முதலமைச்சர் செல்வி. ஜெ.ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு தொடர்ந்து மத்தியில் உள்ள அமைச்சர்களின் தலையீடுகளை ஆளும் அதிமுக அரசு சந்தித்து வருவதை வெகுவாக பார்த்து வருகிறோம் என அரசியல் விமர்சகர்கள் எல்லாம் கூறி வரும் நிலையில், டாக்டர் நமது எம்.ஜி.ஆர் இதழின் இந்த சாடல், பாஜகவுக்கு எதிராகவே அமைந்திருக்கிறது.

இந்த கவிதையை நமது எம்.ஜி.ஆர் நாளிதழில் ஆசிரியர் மருது அழகுராஜ் தான், சித்திரகுப்தன் என்ற பெயரில் எழுதியிருந்தார். கடந்த 9 ஆண்டுகளாக நமது எம்.ஜி.ஆர் ஆசிரியர் பதவியில் இருந்து வந்த மருது அழகுராஜ், சித்திர குப்தன் என்ற பெயரில் பல கவிதைகளை எழுதியுள்ளார். பல கவிதைகள் அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இப்போது அவர் எழுதிய கவிதை டிடிவி தினகரன் அணியின் நிலைப்பாட்டை சொல்வதாக அரசியல் அரங்கில் சொல்லப்பட்டது. மத்திய அரசுக்கு எதிராக டிடிவி தினகரன் செயல்பட முடிவெடுத்துவிட்டார் என்று சொல்லப்பட்டது. இந்நிலையில் 14ம் தேதி காலை மதுரையில் பேட்டியளித்த டிடிவி தினகரனிடம் இந்த கவிதை பற்றி கேட்கப்பட்டது. அப்போது, ‘அம்மா அவர்களால் பணிக்கு அமர்த்தப்பட்ட பலர் இன்னமும் நமது எம்.ஜி.ஆரில் பணியாற்றி வருகிறார்கள். சில கருப்பு ஆடுகள் இது போன்ற தவறுகளை செய்துவிடுகிறார்கள். அவர்கள் மீது நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது’ என்று சொன்னார்.

இந்நிலையில் ஆசிரியர் மருது அழகுராஜை சஸ்பெண்ட் செய்து நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது என்ற தகவல் பரவியது.

இதையடுத்து, அக்கவிதையை சித்திரகுப்தன் என்ற பெயரில் எழுதியதாக சொல்லப்படும் அந்நாளேட்டின் ஆசிரியர் மருது. அழகுராஜை தொடர்புகொண்டு கேட்டோம்.

அதற்கு அவர், “கடந்த 9 ஆண்டுகளுக்கு முன், அம்மா (ஜெயலலிதா)வினால் நமது எம்.ஜி.ஆர். ஆசிரியராக நியமிக்கப்பட்டேன். இன்றுவரை அவர் காட்டிய வழியில் நடந்துவருகிறேன்.

கட்சியின் சட்டதிட்டங்கள், அரசியல் சூழல்ஆகியவற்றை உணர்ந்து ஆசிரியர் பணியை செய்துவருகிறேன்.

ஆசிரியர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டேன் என்பது தவறான தகவல். வலைதளங்கள் பலமுறை  வாய்மையை கொலை செய்யும் கொலைக்களங்களாக இருப்பது வேதனைதான். என்னைப் பற்றி இப்படி தவறான தகவலை பரப்பி வருபவர்களுக்கு இதில் ஒரு மகிழ்ச்சி கிடைக்கிறது என்றால் எனக்கும் மகிழ்ச்சிதான். அதே நேரம் அப்படிப்பட்டவர்களுக்கு ஒரு தகவல். நான் கவிஞன், பத்திரிகையாளன். என் பணியை செய்துவருகிறேன். மற்றபடி நான் அ.தி.மு.க. உறுப்பினர் அல்ல” என்று தெரிவித்தார்.

பகிர்

There are no comments yet