சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டார். அதற்குப் பிறகு முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ”ஜெயலலிதா இறப்பு குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும். விசாரணை ஆணையம் ஜெயலலிதா இறப்பு குறித்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்படுகிறது.

ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவிடமாக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பிலும், பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கோரிக்கை எழுந்துள்ளது. வேதா நிலையம் அரசு நினைவிடமாக மாற்றப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படும்” என்று முதல்வர் தெரிவித்தார். அதிமுக அணிகள் இணைப்பு விரைவில் நடைபெறலாம் என்று கூறப்பட்டு வரும் நிலையில் இந்த அறிவிப்பு இணைப்புக்கான அச்சாரமாக அமையலாம் என்ற கணிப்பு உருவாகியுள்ளது.

இந்த அறிவிப்பின் எதிரொலியாக அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியினர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நாளை முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளனர். காலை 10 மணிக்கு ஓபிஎஸ் இல்லத்தில் நடக்கும் இந்த கூட்டத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பலர் பங்கேற்க இருக்கின்றனர். இது குறித்து கப்ஸா நிருபரிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது: குறைந்த பட்சம் ஸ்காட்லாண்ட்யார்ட் அல்லது இன்டர்போல் விசாரணை வேண்டும். மேலும் மெரினாவில் படுத்துக்கிடக்கும் அம்மாவின் பூத உடலை பிரேத பரிசோதனை செய்து விஷம் கொடுக்கப்பதா என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும் என்றார்.

ஒரு நடுநிலை அதிமுக தொண்டர் கூறும்போது: ஜெயலலலிதா மரணம் இயற்கையானது . திமுகவுடன் சேர்ந்து கொண்டு பன்னீர் அணி நீதி விசாரணை வேண்டும் என்கிறார்கள் என்ற ஒரு குற்றச்சாட்டை மார்ச் மாதம் நடந்த ஆர் கே நகர் பொதுகூட்டத்தில் முன்வைத்தார் முதல்வர் எடப்பாடி. தற்போது இவரே நீதி விசரானை ஆணையம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். ஜெயா சிகிச்சை பெறும் போது கூட்டாக கும்மியடித்தவர்கள் … அணியாக அல்லாது அதிமுக என்ற ஒரே கட்சியாக இருக்கும் போது கப்சிப் என்றிருந்தவர்கள் இந்த நீதி விசாரணை என்பதை வெறும் கேடயமாக மட்டுமே பயன்படுத்தி கொண்டிருக்கிறார்கள்.. இவர்களில் யாருக்கேனும் ஒருவருக்காவது உண்மையான விசுவாசம் இருந்திருந்தால் அம்மா இட்லி சாப்பிட்டார் இடியாப்பம் சாப்பிட்டார் என்று திருக்குறளை ஒப்பிப்பதை போல் தினம் வந்து ஒப்புக்கு ஒப்பித்திருக்க மாட்டார்கள். பன்னீருக்கு தன் பதவி பறிபோனதால் மக்கள் செல்வாக்கை குறிப்பாக அதிமுக தொண்டர்கள் செல்வாக்கை பெற நீதி விசாரணை என்ற கேடயத்தை பயன்படுத்தி வந்தார்… இப்போது எடப்பாடி பன்னீருடன் சேர்வதற்காக ஐந்து மாதங்களுக்கு முன் என்ன பேசினோம் என்பதை அறியாமலே அதே கேடயத்தை கையில் எடுத்திருக்கிறார் … ஜெயா அப்பல்லோவில் இருந்த போது கிடைக்காத நீதி இப்போது ஆளாளுக்கு பேசுவதால் கிடைத்துவிடுமா என்ன வெறும் அறிவிப்பும் வெற்று பேச்சும் யாரை ஏமாற்ற? என்று பொரிந்து தள்ளினார்.

Credit: ஆர்.வி சரண்யா

பகிர்

There are no comments yet