சென்னை: சசிகலா குடும்பத்தினரே தினகரனின் அரசியல் பயணத்துக்கு தடையாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தது. அதனை மேலூர் பொதுக் கூட்டம் தகர்த்தெரிந்தது. கூட்டத்துக்கான ஏற்பாடுகளை சசிகலாவின் தம்பி திவாகரனே முன்னின்று செய்தார்.

இதனை உறுதிபடுத்தும் விதத்தில் அவரது மகன் ஜெயானந்த் மேலூர் பொதுக் கூட்டத்தில் முன் வரிசையில் அமரவைக்கப்பட்டிருந்தார். எடப்பாடி பழனிசாமியும், அமைச்சர்களும், தங்களை ஒதுக்கி வைத்துவிட்டு கட்சியை கைப்பற்ற நினைத்தால் அது நடக்காது என்று திவாகரன் எச்சரித்தார்.

கடந்த சில மாதங்களாகவே பொறுமையாக காய் நகர்த்தி வந்த தினகரன் மேலூர் பொதுக் கூட்டத்தில் பொங்கி எழுந்தார்.

எடப்பாடி பழனிசாமி இன்று முதல்-அமைச்சராக இருப்பதற்கு சசிகலாவே காரணம். இதனை அவரும் அமைச்சர்களும் மறந்து விட வேண்டாம். தொண்டர்களின் நலன் கருதி நீங்கள் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். அமைச்சர்கள் தங்கள் தவறை திருத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் திருத்தப்படுவார்கள். தேவைப்பட்டால் அறுவை சிகிச்சை செய்யவும் நான் தயாராகவே இருக்கிறேன் என்றும் தினகரன் கடுமையாக சாடினார். இது ஆரம்பம்தான் போகப் போக பாருங்கள் என்றும் அவர் எச்சரித்தார்.

தினகரனின் இந்த பேச்சுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், அமைச்சர்களும் பதிலடி கொடுத்து வருகிறார்கள். அமைச்சர் ஜெயக்குமார் ஆட்சியை கவிழ்க்க நினைப்பவர்கள் எட்டப்பர்கள் என்று விமர்சித்தார். அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் திருடன் என்று விமர்சித்தார்.

கடலூரில் நேற்று நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற எடப்பாடி பழனிச்சாமியும் தினகரனை கடுமையாக தாக்கி பேசியுள்ளார். கொல்லைப்புறமாக கட்சியை கைப்பற்ற வேண்டும் என்று நாங்கள் ஏன் நினைக்க வேண்டும். எங்களது உழைப்பாலேயே இந்த பதவிக்கு வந்துள்ளோம் என்று கூறினார்.

அம்மாவின் ஆட்சியை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது என்றும் எடப்பாடி பழனிசாமி தினகரனுக்கு ஆவேசமாக பதில் அளித்தார்.

சசிகலா-தினகரன் இல்லாத அ.தி.மு.க.வை உருவாக்க வேண்டும் என் பதில் எடப்பாடி அணியினர் உறுதியாக உள்ளனர். இந்த உறுதிக்கு விதை போட்டதே டெல்லியில் உள்ள பா.ஜனதா கட்சி மேலிடம்தான் என்று பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

பா.ஜனதா தலைவர்களின் எண்ணப்படியே எடப்பாடி ஓ.பி.எஸ். அணிகள் இணைப்பு முயற்சி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படி சசிகலா குடும்பத்தினரை நிரந்தரமாக நீக்கி வைத்து விட்டு, அவர்கள் இல்லாத அ.தி.மு.க.வுடன் இணைந்து செயல்படவே பா.ஜனதா விரும்புவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் தினகரனின் அரசியல் நடவடிக்கைகள் இதற்கு முட்டுக்கட்டை போடும் வகையிலேயே அமைந்துள்ளன.

தினகரன் தனி அணியாக செயல்பட தொடங்கியபோது அவரது பின்னால் 37 எம்.எல்.ஏ.க்கள் அணி வகுத்தனர். இதனால் கடந்த மாதம் எடப்பாடி அரசுக்கு நெருக்கடியான சூழல் ஏற்பட்டது. பின்னர் அந்த பரபரப்பு அடங்கிபோனது.

இந்த நிலையில் தினகரனுடன் மேலூர் கூட்டத்தில் 22 எம்.எல்.ஏ.க்கள் கைகோர்த்தனர். கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களான கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு ஆகியோரும் தங்களது ஆதரவை தினகரனுக்கு தெரிவித்துள்ளனர். இதன் மூலம் தினகரன் பக்கம் 25 எம்.எல்.ஏ.க்கள் இருப்பது வெளிப்படையாக தெரிகிறது. மேலும் 17 எம்.எல்.ஏ.க்கள் தினகரன் பக்கம் சாய தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் எடப்பாடி அணி அச்சம் அடைந்துள்ளது.

மேலூர் பொதுக் கூட்டத்தில் பங்கேற்க விடாமல் எம்.எல்.ஏ.க்களை கடத்திக் கொண்டு சென்னையில் வைத்துக் கொண்டனர் என்று தினகரன் வெளிப்படையாகவே குற்றம் சாட்டினார். எடப்பாடி அணியின் நிர்ப்பந்தம் காரணமாக மதுரை மாவட்டத்தில் இருந்து 4 எம்.எல்.ஏ.க்கள் தினகரன் கூட்டத்தை புறக்கணித்ததும் வெட்ட வெளிச்சமாகி உள்ளது.

இதே போல காய்களை நகர்த்தி, தினகரன் அணியில் இருந்து மேலும் சில எம்.எல்.ஏ.க்களை இழுக்க எடப்பாடி அணியினர் தீவிரம் காட்டி வருகிறார்கள். அதே போல தினகரன் தரப்பினரும் தங்களது ஆதரவு எம்.எல்.ஏ.க்களை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.

அதே நேரத்தில் எடப்பாடி அணிக்கு செல்வதா? தினகரன் பக்கம் சாய்வதா? என்கிற குழப்பமான மன நிலையில் எம்.எல்.ஏ.க்கள் பலர் உள்ளனர். அவர்களின் மனதை மாற்றி தங்கள் பக்கம் இழுக்க என்ன செய்யலாம் என்று சசிகலாவை கலந்தாலோசிக்க இன்று பெங்களூர் சென்றுள்ளார்.

There are no comments yet