சென்னை: கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ் வீட்டுக்கு அவரது ஆதரவு எம்பி, எம்எல்ஏக்கள், மூத்த நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் நேற்று மாலை 4 மணியில் இருந்து வரத் தொடங்கினர். அறிவித்தபடி ஓபிஎஸ் மாலை 5 மணிக்கு தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையை தொடங்கினார். தனது வீட்டின் முதல் மாடியில், தனது ஆதரவு எம்பி, எம்எல்ஏக்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின்போது, மதுசூதனன், கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், பி.எச்.பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். அப்போது, இரண்டு அணிகள் இணைந்தால் நமது அணிக்கு கிடைக்கும் பதவிகள், நன்மைகள் என்னென்ன என்பது குறித்து ஓபிஎஸ் விளக்கினார். நேற்று இரவு 10 மணிக்கு எம்பி, எம்எல்ஏக்களுடன் ஆலோசனையை ஓபிஎஸ் முடித்தார். அதைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை இரவு நீண்ட நேரம் நடைபெற்றது. முதல்வர் எடப்பாடி மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை, ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்த அதேநேரம், சென்னை மெரினா கடற்கரை பகுதியில் உள்ள ஜெயலலிதா சமாதியை அலங்கரிக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்றது.

மாலை 4 மணிக்கு தொடங்கிய பணி மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. அதனால், எடப்பாடி-ஓபிஎஸ் அணியினர் ஆலோசனை முடிந்து, ஜெயலலிதா சமாதிக்கு வந்து இணைய திட்டமிட்டுள்ளனர் என்று செய்தி பரவியதால், அதிமுக தொண்டர்கள் ஏராளமானோர் சமாதியில் குவிந்தனர். கூடுதல் கமிஷனர் சாரங்கன், இணை கமிஷனர் மனோகரன் தலைமையில் ஏராளமான போலீசாரும் அங்கு குவிக்கப்பட்டனர். அதேபோன்று சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்திலும் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் குவிந்தனர். அங்கும் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர். இரவு 7.30 மணிக்கு எடப்பாடி-ஓபிஎஸ் ஆகியோர் ஜெயலலிதா சமாதிக்கு ஒன்றாக வந்து அஞ்சலி செலுத்துவார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் நேரம் ஆக ஆக இருவரும் வராததால், இணைப்பில் இழுபறி என்ற வதந்திகள் வரத் தொடங்கின. இதனால் சமாதியில் நின்று கொண்டிருந்த தொண்டர்கள் ஏமாற்றத்துடன் கலைந்து செல்லத் தொடங்கினர். அதேநேரத்தில், ஓபிஎஸ் நடத்திய ஆலோசனையில் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், பால் மனோஜ் பாண்டியன், மைத்ரேயன் உள்ளிட்ட சில மூத்த தலைவர்கள் இணைப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஓ.பி.எஸ்சுக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்று சிலர் கூறினர். அப்போது பன்னீர் செல்வம், இன்று என்னை சந்தித்த அமைச்சர்கள், 3 அமைச்சர் பதவி தருவதாக கூறியுள்ளனர். மேலும் முக்கியமான இலாக்காக்களை தருவதாகவும் கூறியுள்ளனர்.

அதில், நான், செம்மலை, பாண்டியராஜன் ஆகியோர் அமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். உங்கள் கருத்துக்களை கூறுங்கள் என்று பன்னீர்செல்வம் கூறியுள்ளார். அப்போது, வைகுண்டம் எம்எல்ஏ சண்முகநாதன், தனக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார். அதேபோல, கோவையைச் சேர்ந்த 2 எம்எல்ஏக்களில் ஒருவருக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்று கேட்டுள்ளனர். அதேநேரத்தில், கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், பால்மனோஜ் பாண்டியன் ஆகியோரும் தங்களுக்கு அமைச்சர் பதவி அல்லது கட்சியில் முக்கிய பதவி வேண்டும். நாங்கள் எம்எல்ஏவாக இல்லாவிட்டாலும், எங்களுக்காக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய தயாராக உள்ளனர். இல்லாவிட்டால் எங்களுக்கு ராஜ்யசபாவில் எம்பி பதவி வழங்க வேண்டும். இதை எல்லாம் எழுத்துப்பூர்வமாக வாங்க வேண்டும். அப்போதுதான் இணைப்பு நடத்த வேண்டும். 3 அமைச்சர் பதவிக்காக நம் அணியை இணைக்கக் கூடாது என்று கூறியுள்ளனர். அப்போது கட்சிப் பதவியும் நமக்கு கிடைக்கும். இரு அணிகள் இணைந்தால், இரு அணி நிர்வாகிகளும் சேர்ந்து, தேர்தல் ஆணையத்தில் நாங்கள்தான் உண்மையான அதிமுக என்று தெரிவிப்போம். தேர்தல் ஆணையம் நம்மை அங்கீகரிக்கும். சசிகலா நியமனம் செல்லாது என்று அறிவிக்கும்.

அப்படிப்பார்த்தால் பொதுச் செயலாளர் பதவிக்கு அடுத்தபடியாக அவைத் தலைவர், பொருளாளர் பதவி நம்மிடம்தான் உள்ளது. மேலும், வழிகாட்டு குழுவில் நம் அணிக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கும் என்று பன்னீர்செல்வம் கூறினார். ஆனால் அதை மூத்த தலைவர்கள் ஏற்கவில்லை. இப்போதே அதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். எழுத்துப்பூர்வமாக தரவேண்டும் அப்போதுதான் இணைப்பு நடத்த வேண்டும் என்று தெரிவித்தனர். அப்போது ஓ.பி.எஸ் அணியில் உள்ள சில எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பேசும்போது, நம்மிடம் இருப்பது முன்னாள் நிர்வாகிகள்தான். அவர்களுக்கு பதவி கேட்க முடியாது. இணைப்பு நடத்த வேண்டும் என்று தொண்டர்கள் விரும்புகிறார்கள். அதனால் இணைப்பு நடத்த வேண்டும் என்றனர். அப்போது மூத்த நிர்வாகிகள், பல நிர்வாகிகள் நம்மை நம்பி வந்துள்ளனர். அவர்களை நட்டாற்றில் விட்டுச் செல்லக்கூடாது. அதனால் அவர்களுக்கான பதவி குறித்து முதல்வர் உட்பட பலரிடம் எழுத்துப்பூர்வமாக எழுதி வாங்க வேண்டும் என்றும் வற்புறுத்தியுள்ளனர். இதனால், எதிர்ப்பு குரல் எழுப்பியவர்களுக்கு பதில் கூற முடியாமல் ஓ.பன்னீர்செல்வம் தவித்தார்.

மூத்த தலைவர்கள் மற்றும் எம்பி, எம்எல்ஏக்கள் இரு விதமாக கருத்து தெரிவித்துள்ளதால் நள்ளிரவு வரை ஆலோசனை நீடித்தது. இதனால் பன்னீர்செல்வம் வீட்டில் இருந்த தொண்டர்கள் கலைந்து செல்லத் தொடங்கினர். இந்த ஆலோசனை குறித்து மூத்த தலைவர் ஒருவர் கூறும்போது, இணைப்பு குறித்து நாங்கள் ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளோம். இன்னும் பல கட்டம் பேச வேண்டியுள்ளது. விரைவில் இணைப்பு குறித்து முறைப்படி அறிவிப்போம். ஆலோசனையில் பல கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. நல்ல முடிவை எடுப்போம் என்றார். இதனால் பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்தவர்கள் அமைச்சர் பதவி, கட்சிப் பதவி கேட்டு நெருக்கடி கொடுத்ததால், இணைப்பு இன்று நடைபெறாமல் இழுபறியில் முடிந்தது. இதனால் எம்எல்ஏக்கள், தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர்

பகிர்

There are no comments yet