Credit: IETAMIL

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஓபிஎஸ் தலைமையில் ஒரு அணியும். சசிகலா தலைமையில் ஒரு அணியும் என இரண்டாக பிளவுப்பட்டது. சசிகலா தலைமையில் 122 எம்.எல்.ஏ.க்கள் திரண்டதால், ஈபிஎஸ் முதல் அமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். சசிகலா சிறைக்குச் செல்ல, டிடிவி தினகரன் ஆலோசனையைக் கேட்டு ஆட்சியை நடத்தி வந்தார், ஈபிஎஸ்.

ஜெயலலிதா மரணம் அடைந்ததால் காலியான ஆர்.கே.நகர் தொகுதியில் டிடிவி.தினகரன் போட்டியிட்டார். வாக்களர்களுக்கு பணம் கொடுத்ததால் தேர்தல் ரத்தானது. அதன் பின்னர் டிடிவி.தினகரன் – ஈபிஎஸ் இடையே மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் டிடிவி.தினகரன் இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு பணம் கொடுக்க முயன்றதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையில் இருந்து அவர் வெளியே வந்ததும், இரு அணிகளும் இணைய 60 நாட்கள் அவகாசம் கொடுத்தார். ஆகஸ்டு ஐந்தாம் தேதியோடு அவர் கொடுத்த கெடு முடிவுக்கு வந்தது. ஈபிஎஸிடம் ஆலோசிக்காமல், கட்சிக்கு புதிய நிர்வாகிகளை அறிவித்தார். இதையடுத்து, கடந்த 10ம் தேதி ஈபிஎஸ் தலைமையில் கூடிய அதிமுக தலைமை கழக நிர்வாகிகள், தினகரனை துணை பொது செயலாளராக நியமித்தது செல்லாது என தீர்மானம் போட்டனர். இதையடுத்து அதிமுக மூன்று அணிகளாக பிளவுபட்டது.

 

இந்நிலையில் ஈபிஎஸ் அணியுடன் இணைவது குறித்து ஆலோசனை நடத்த, ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களை நேற்று அழைத்திருந்தார். க்ரின்வேஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ் வீட்டில் நேற்று (18ம் தேதி) மாலை கூட்டம் நடந்தது. எம்.எல்.ஏ.க்கள், எம்.பிகள், கட்சி நிர்வாகிகள் ஆகியோருடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார், ஓபிஎஸ்.

சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோர், இரு அணிகளும் இணைவதில் எந்த பிரச்னையும் இல்லை என்று சொல்லிவிட்டனர். நாங்கள் எம்.எல்.ஏ., எம்.பி.களாக இருந்தாலும், ஆட்சியில் இல்லாததால் தொண்டர்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லை. அவர்களோடி இணைந்துவிட்டால், தொண்டர்களுக்கு ஏதாவது செய்ய முடியும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

மாஃபா பாண்டியராஜன் பேசும் போது, ‘நம்முடைய கோரிக்கையை ஏற்றுக் கொண்டுள்ளார்கள். இதுதான் இணைப்புக்கான தருணம். இதை விட்டுவிட்டால், இப்படியொரு சந்தர்ப்பம் வராது’ என்று சொல்லியிருக்கிறார். அப்போது அங்கிருந்த மூத்த தலைவர் பி.எச்.பாண்டியன், ‘நீ எப்போது கட்சிக்கு வந்தாய். உனக்கு கட்சியைப் பற்றி என்ன தெரியும். மீண்டும் சசிகலா குடும்பத்தின் பிடிக்கும் கட்சி போவதை ஏற்றுக் கொள்ள முடியாது’ என்று கோபமாக பதில் அளித்துள்ளார்.

ஈபிஎஸ் தரப்பில், ஓபிஎஸ்க்கு துணை முதல் அமைச்சர் பதவியும், அவர்கள் அணியைச் சேர்ந்த இருவருக்கு அமைச்சர் பதவி தருவதாகவும் உறுதி கொடுத்துள்ளனர். இதை அனைவரும் ஒப்புக் கொண்டுவிட்டனர். கட்சி பதவிகள் நமது ஆதரவாளர்களுக்கு கிடைக்குமா என்பதை தான் அனைவரும் கேட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்ட செயலாளராக இருக்கும் லட்சுமணன் எம்பி, மாவட்ட செயலாளர் பதவியை விட்டுவிட்டு வந்தார். அவருக்கு மீண்டும் அந்த பதவியை கொடுப்பார்களா? என்று ஒரு மாவட்ட நிர்வாகி கேட்டுள்ளார்.

இன்னொரு நிர்வாகியோ, ‘பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் ஈபிஎஸ் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள். நாளைக்கு நம்ம அணியில் இருந்து போனவர்களை அவர்கள் நினைத்தால் ஓரம் கட்ட முடியும். போஸ்டர்களில் பெயர் போடாமல் புறக்கணிப்பார்கள். இதற்கு இடமளிக்காத வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். அதன் பின்னரே இணைய வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த தகவலை ஈபிஎஸ் அணியினரிடம் போனில் தெரிவித்துள்ளனர். அவர்கள் தரப்பில் இருந்து, ஜெயலலிதா நியமித்த மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் அப்படியே தொடருவார்கள். உங்கள் அணிக்கு வந்தவர்களுக்கு பதவி கொடுப்பதில் பிரச்னை இல்லை என்று சொல்லியுள்ளனர். அதே நேரத்தில், மாநில அளவில் கட்சியை நடத்த குழு அமைப்பது போல, மாவட்ட அளவிலும் குழு அமைக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஈபிஎஸ் தரப்பு ஏற்கவில்லை. இதுதான் இரு தலைவர்களும் சந்திப்பதற்கு முட்டுக்கட்டையாக இருந்ததாக தெரிகிறது.

ஓபிஎஸ் தரப்பைச் சேர்ந்த மூத்த நிர்வாகி ஒருவர் பேசும் போது, ‘கட்சியின் ஒருங்கிணைப்பு குழு தலைவராக ஓபிஎஸ் இருப்பதில் இரு அணியினரும் ஒப்புக் கொண்டுவிட்டனர். தேர்தல் வரும் போது கட்சி சின்னம் ஒதுக்கும் படிவத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் கையெழுத்துப் போடும் வகையில் சட்டத்திருந்த்தம் கொண்டு வர வேண்டும் என முதல்வர் தரப்பில் இருந்து சொல்கிறார்கள். ஆனால், ஓபிஎஸ் தரப்பு ஒப்புக் கொள்ள மறுக்கிறார்கள். இதுதான் இணைப்புக்கு முக்கிய தடங்கலாக இருக்கிறது’ என்றார்.

பகிர்

There are no comments yet