சென்னை: டி.டி.வி.தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல் எம்.எல்.ஏ. அ.தி.மு.க. இரு அணிகள் இணைப்பு குறித்து கூறியதாவது: அ.தி.மு.க.வின் இரு அணிகள் பல பேரங்களால் இணையலாம். இதற்காக நிறைய பேரம் பேசப்பட்டுள்ளது. எடப்பாடி அணி ஓ.பி.எஸ்.சுக்கு துபாயில் ‘செட்டில்மென்ட்’ செய்து விட்டதாக எங்களுக்கு தகவல் வருகிறது. பதவிக்காக எம்.ஜி.ஆருடன் இருந்த தொண்டர்களை நடுரோட்டில் விட்டுவிட்டார்கள். இதே ஓ.பி.எஸ். பதவி கிடைக்கவில்லை என்பதற்காக இரட்டை இலையை முடக்கினார். சட்டசபையில் இந்த அரசு மீது நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பில் தி.மு.க.வுடன் சேர்ந்து எதிர்த்து வாக்களித்தார். இப்போது இரு அணிகளும் இணைவதாக சிரித்தப்படி கூறுகிறார்.

துபாயில் பேரம் படிந்து விட்டதால் அவர் சிரிக்கிறார். இந்த இணைப்பை 98 சதவீதம் பேர் எதிர்க்கும் போது பதவிக்காக பேரம் நடத்தியுள்ளனர். எங்களது சிலிப்பர்செல் மூலம் இந்த தகவல் எங்களுக்கு கிடைத்தது.அ.தி.மு.க.வில் தொண்டர்கள் பலம் டி.டி.வி.தினகரன் பக்கம்தான் உள்ளது. மேலூர் பொதுக் கூட்டத்தில் தொண்டர்கள் இதை நிரூபித்துள்ளனர். 11 பேருடன் இருந்த ஓ.பன்னீர் செல்வம் இரட்டை இலை சின்னத்தை முடக்கும் போது, 41 எம்.எல்.ஏ.க்கள் பலம் கொண்ட நாங்கள் எங்களது நிலைப்பாட்டை உறுதியாக தெரிவிக்கமுடியும். இதை வருங்காலத்தில் பார்ப்பீர்கள். தொகுதி மக்களின் கருத்தை எம்.எல்.ஏ.க்கள் கேட்டார்களா? என்று கேட்ட ஓ.பி.எஸ். இப்போது மக்களின் கருத்தை கேட்டாரா? இவர் தொகுதியிலேயே இவருக்கு எதிர்ப்பு அதிகம் உள்ளது.

கிணறு பிரச்சினையை தீர்க்க முடியாமல் சென்னையில் பதுங்கி இருந்தவர் தான் ஓ.பி.எஸ்.. எடப்பாடி அரசு ஊழல் அரசு என்று ஓ.பி.எஸ்., மைத்ரேயன் எம்.பி. உள்ளிட்ட பலர் கூறி வந்தனர். போராட்டமும் அறிவித்தனர். ஆனால் இப்போது இரு அணிகள் இணையும் போது ஊழல் மறைந்து விடுமா? இந்த ஆட்சியில் அம்மா உணவகத்தில் சாப்பாடு தரமாக இல்லை. தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் அமைச்சரே கமி‌ஷன் கேட்கிறார். முதியோர் உதவி தொகை பெறுவதற்கும் கமி‌ஷன் கேட்கிறார்கள். இப்படி பல துறைகளில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. எனவே ஊழலில் பங்கு போட ஓ.பி.எஸ். இணைக்கிறாரா? இவர்கள் இருவரும் இணையும் போது பெரிய நியாயத்தை எதிர்பார்க்க முடியாது.எங்களுக்கு கட்சிதான் முக்கியம். ஆட்சி இரண்டாம் பட்சம்தான். இந்த ஆட்சியை முதலில் ஓ.பி.எஸ். குத்தினார். இப்போது இ.பி.எஸ். முதுகில் குத்துகிறார். இருவரும் சேர்ந்து அம்மா ஆட்சிக்கு துரோகம் செய்துவிட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில் இணைப்பு நாடகம் தள்ளிப்போனது குறித்து புதிய விபரங்கள் கிடைத்துள்ளன. கட்சியை நடத்த வழிகாட்டு குழு அமைக்கப்பட்டால், அதில் இரண்டு அணிகளுக்கு சமமான வாய்ப்பு வழங்கவேண்டும். அதே போல் அமைச்சரவையில் மூன்று பேருக்கு தங்கள் தரப்பில் இடம் தரவேண்டும் என்ற  நிபந்தனை பன்னீர் தரப்பிலிருந்து சென்றது. பன்னீருக்கும், பாண்டியராஜனுக்கும் அமைச்சர் பதவி தருகின்றோம். முனுசாமிக்கு கட்சியில் முக்கிய பதவியை தருகின்றோம் என்று அவர்கள் சொல்லியுள்ளார்கள். இறுதியாக வெள்ளிக்கிழமை காலை அன்று பன்னீர் தரப்பு பொதுப்பணித் துறை, உள்துறை, நிதித்துறை, உள்ளிட்ட துறைகளை தர ஒப்புக்கொண்டால் இன்று இரவே இணைப்பை அறிவித்துவிடலாம் என்று சொல்லிவிட்டார்கள்.

ஆனால், பழனிசாமி தரப்பில் ‘பொதுப்பணித்துறையை விட்டு தரமுடியாது. நெடுஞ்சாலைத் துறையை தருகின்றோம். நிதித்துறையும், வீட்டுவசதித் துறையும் எடுத்துக்கொள்ளுங்கள்’ என்று சொல்லியுள்ளார்கள். பழனிசாமி சொன்ன தகவலை வைத்து பன்னீர் வீட்டில்  வெள்ளிக்கிழமை மதியம் வரை ஆலோசனை செய்துள்ளார்கள். உள்துறையை விட்டுக்கொடுக்க வேண்டாம், என்று பன்னீர் செல்வத்திடம் வலியுறுத்தியுள்ளார்கள். ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை அவர்கள் கைக்குள் இருப்பதுபோல, காவல்துறை நம்கைக்குள் இருக்க வேண்டும் அப்போது தான் நமக்கு பலம் என்று பன்னீரிடம் சொல்லியுள்ளார்கள். வழிகாட்டுதல் குழுவில் முக்கிய பொறுப்பு முனுசாமிக்கு வேண்டும், மனோஜ் பாண்டியன், பொன்னையன் உள்ளிட்ட பதினோரு நபர்களுக்கும் பதவிகள் வேண்டும் என்பதையும் பழனிசாமி தரப்பிடம் சொல்லியுள்ளார்கள். சனிக்கிழமை காலை பன்னீர் செல்வம் “ இணைப்புக்கு நமது அணியிலே ஒருமித்த கருத்து இல்லை. ஆனால், டெல்லியில் இருந்து பிரஸர் வந்துகொண்டே இருக்கிறது. நாமும் கொஞ்சம் இறங்கி போவோம்” என்ற தனது ஆதரவாளர்களிடம் சொல்லியுள்ளார். அருகில் இருந்த மைத்ரேயன் “ பிரதமரிடம் நான் பேசுகின்றேன். நீங்கள் அவசரப்பட்டு இறங்கி செல்ல வேண்டாம்” என்று சொல்லியுள்ளார். “உள்துறையை வாங்காமல் நாம் இணைப்புக்கு உத்தரவாதம் கொடுக்க வேண்டாம். செம்மலைக்கும் மந்திரி பதவியை பெற்றுவிடவேண்டும்” என்ற முடிவில் பன்னீர் அணியில் சொல்லியுள்ளார்கள்.உள்துறையை விட்டுகொடுக்க பன்னீர் மறுப்பது ஏன் என்று எடப்பாடி அணிக்கு எச்சரிக்கை உணர்வு எட்டிபார்த்துள்ளது. இதனால் மீண்டும் இரு அணிக்குள் அடுத்த சுற்றுபேச்சுவார்த்தைகயில் இரண்டு முக்கிய நபர்கள் இறங்கியுள்ளார்கள். துறை மாற்றம் ஓ.கே.வானால் இணைப்பு அறிவிப்பு நாளை மறுதினமே வந்துவிடும் என்கிறார்கள்.

பகிர்

There are no comments yet