அதிமுகவின் இரு அணிகளும் திங்கள்கிழமை முறைப்படி ஒன்றாக இணைந்தன. இதற்கான அறிவிப்பை அதிமுக அம்மா அணியின் மூத்த நிர்வாகியும் முதல்வருமான எடப்பாடி கே.பழனிச்சாமியும், அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியின் நிர்வாகியும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வமும் கூட்டாக அறிவித்தனர்.

இரு அணிகளும் இணைவது தொடர்பான புதிய ஏற்பாட்டின்படி தமிழக முதல்வராக எடப்பாடி கே.பழனிச்சாமி நீடிப்பார். துணைமுதல்வராக ஓ. பன்னீர்செல்வம் பதவி வகிப்பார். மேலும் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார் என்றும் ஆளுங்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி கே.பழனிசாமியும் செயல்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இரு அணிகள் இணைப்பு நிகழ்ச்சியையொட்டி முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, திங்கள்கிழமை பிற்பகல் 2 மணி அளவில் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்தார். அதன் பின்னர் 2.45 மணி அளவில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமைக் கழக அலுவலகம் வந்தார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி ஆகியோர் வந்தனர். அவர்கள் அனைவரையும் அமைச்சர் டி.ஜெயகுமார் வரவேற்றார்.

அதிமுக பிளவுபட்ட பின்னர் ஏறக்குறைய 7 மாதங்களுக்குப் பிறகு முதன் முறையாக பன்னீர்செல்வம் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வருகை தந்தது குறிப்பிடத்தக்கது. அவரையும், எடப்பாடி பழனிசாமியையும் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வெளியே கூடியிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.

பன்னீர்செல்வம் வருவதற்கு முன்னதாகவே அவரது ஆதரவாளர்களான மாநிலங்களவை உறுப்பினர் வா.மைத்ரேயன், மூத்த தலைவர் சி.பொன்னையன், முன்னாள் எம்.பி.யான பி.எச்.மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் கட்சித் தலைமையகத்துக்கு வந்திருந்தனர். பின்னர் இரு அணிகள் ஒன்றாக இணையும் நிகழ்ச்சி அதிமுகவின் முன்னாள் அவைத்தலைவரான மதுசூதனன் முன்னிலையில் அரங்கேறியது. இரு அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகளான எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் கைகளைக் குலுக்கி இரு அணிகளும் இணைந்ததை வெளிப்படுத்தினர். இதைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் கட்சி நிர்வாகிகளிடையே உரையாற்றினர்.

முன்னதாக ஜெயலலிதா மறைவை அடுத்து கடந்த பிப்ரவரி மாதம் அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. சசிகலாவுக்கு எதிராக பன்னீர் செல்வம் போர்க்கொடி எழுப்பினார். தாம் முதல்வர் பதவியிலிருந்து வலுக்கட்டாயமாக விலக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாகவும், மக்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் விரும்பும் ஒருவரே ஆட்சியிலும் கட்சியிலும் முக்கிய பங்குவகிக்க வேண்டும் என்றும் கூறினார்.
இதைத் தொடர்ந்து கட்சிப் பொருளாளர் பதவியிருந்து பன்னீர் செல்வம் அதிரடியாக நீக்கப்பட்டார். இதன் எ திரொலியாக அதிமுக அதிருப்தி கோஷ்டியினர் பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியை உருவாக்கினர்.
இதனிடையே சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு சிறைசெல்ல வேண்டியிருந்ததால் சசிகலா, எடப்பாடி கே.பழனிசாமியைக் கட்சியின் சட்டப் பேரவைத் தலைவராக அறிவித்ததைத் தொடர்ந்து அவர் முதல்வராக பதவியேற்றார்.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் அதிமுக அரசியலில் புதிய திருப்பம் ஏற்பட்டது. சசிகலாவையும், தினகரனையும் கட்சியிலிருந்து ஒதுக்கிவைப்பதற்கான அறிகுறிகள் வெளிப்பட்டன. ஆட்சியிலும் கட்சியிலும் தினகரனின் தலையீட்டை விரும்பாத எடப்பாடி கே.பழனிசாமி, கடந்த 10–ஆம் தேதி தினகரன் கட்சியின் துணை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டது செல்லாது என்று பகிரங்கமாக அறிவித்தார். இதையடுத்து எடப்பாடி கே.பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவர் தலைமையிலான அணிகளும் மீண்டும் ஒன்று சேருவதற்கான சூழ்நிலை உருவானது.
இதைத்தொடர்ந்து ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தப்படும் என்றும் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லம் நினைவு இல்லமாக உருவாக்கப்படும் என்றும் முதல்வர் கே.பழனிச்சாமி அறிவித்தார்.

அ.தி.மு.க.,வின் இரு அணிகளும் இணைவதில் கடைசி நேரத்தில் இழுபறி ஏற்பட்டுள்ளதால், ஆர்.எஸ்.எஸ்., சிந்தனையாளரும், ஆடிட்டருமான குருமூர்த்தியுடன் இரண்டு தரப்பினரும் ஆலோசனை நடத்தினர்.
சசிகலாவை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கிய அறிவிப்பை வெளியிட்ட பிறகே, அ.தி.மு.க.,வின் தலைமை அலுவலகத்திற்கு வர முடியும் என ஓ.பன்னீர்செல்வம் அணியினர் பிடிவாதம் பிடித்து வருகின்றனர். எனவே, ஆடிட்டர் குருமூர்த்தியுடன் பழனிசாமி தரப்பில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணியும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மாபா.பாண்டியராஜன், மைத்ரேயன், செம்மலை ஆகியோரும் ஆலோசனை நடத்தினர்

ஓ.பன்னீர்செல்வம் அணியினரின் முக்கிய கோரிக்கைகள் ஏற்கப்பட்டதை அடுத்து இரு அணிகளின் இணைப்பு திங்கள்கிழமை சுமுகமாக நடைபெற்றது.
11 பேர் கொண்ட வழிகாட்டும் குழு அமைப்பு
அதிமுகவின் இரு அணிகள் இணைந்ததைத் தொடர்ந்து கட்சிக்கு வலுசேர்க்கும் வகையில் 11 பேர் கொண்ட வழிகாட்டும் குழு அமைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
கட்சிகள் இணைப்புக்குப் பின்னர் அவர் கூறியதாவது:
ஒட்டுமொத்த அதிமுகவினரின் ஆதரவுடன் இந்தக் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளோம். அதன்படி, கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் செயல்படுவார். இணை ஒருங்கிணைப்பாளராக நான் (எடப்பாடி பழனிசாமி) இருப்பேன். துணை ஒருங்கிணைப்பாளர்களாக கே.பி.முனுசாமி, ஆர்..வைத்திலிங்கம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வழிகாட்டும் குழு: கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் இதற்கு ஒத்துழைத்து சிறப்பான முறையில் பணியாற்ற வேண்டும். மேலும், கட்சிக்கு வலுசேர்க்கும் வகையில் வழிகாட்டும் குழு அமைக்கப்படும். இந்தக் குழுவில் 11 பேர் இடம்பெறுவர் என்றார் முதல்வர்.

எதிர்ப்பில் தொடங்கி இணைப்பு வரை…
பிப்ரவரி 5: முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் ஓ.பன்னீர்செல்வம்.
பிப்ரவரி 7: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் சென்று அஞ்சலி செலுத்தி விட்டு, சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார்.
பிப்ரவரி 8: அதிமுக எம்.எல்.ஏ.-க்கள் கூவத்தூரில் தங்கினர்.
பிப்ரவரி 16: தமிழக முதல்வராக எடப்பாடி கே.பழனிசாமி பதவியேற்பு.
பிப்ரவரி 18: நம்பிக்கை கோரும் தீர்மானத்துக்கு எதிராக ஓ.பி.எஸ். அணி எம்.எல்.ஏ.-க்கள் 11 பேர் வாக்களிப்பு.
மார்ச் 9: ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் அறிவிப்பு.
மார்ச் 23: அதிமுகவை அம்மா அணி, புரட்சித் தலைவி அம்மா அணி என இரு அணிகளாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இரட்டை இலை சின்னம் முடக்கம்.
ஏப்ரல் 26: இரட்டை இலை சின்னத்தை மீட்க லஞ்சம் தர முயன்றதாக டிடிவி தினகரன் கைது.
ஜூன் 1: தினகரன் ஜாமீனில் வெளியே வந்தார்.
ஜூன் 4: அதிமுக அணிகள் இணைய 60 நாள்கள் அவகாசம் அளித்தார்.
ஆகஸ்ட் 4: அதிமுக அம்மா அணி கட்சிப் பொறுப்புகளை ஏற்ற தினகரன், புதிய நிர்வாகிகளை நியமித்தார்.
ஆகஸ்ட் 14: மதுரை மேலூரில் பொதுக்கூட்டத்தை தினகரன் நடத்தினார்.
ஆகஸ்ட் 18: அதிமுக அணிகள் இணைய தீவிர பேச்சுவார்த்தை நடைபெறுவதாகத் தகவல்.
ஆகஸ்ட் 20: அணிகள் ஓரிரு நாள்களில் இணையும் என ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் அறிவிப்பு.
ஆகஸ்ட் 21: அதிமுக அணிகள் இணைந்தன. ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வராகவும், கே.பாண்டியராஜன் அமைச்சராகவும் பொறுப்பேற்றனர்.
ஆகஸ்ட் 21: ஆளுநர் வித்யாசாகர் ராவ் தங்களைச் சந்திக்க செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 22) காலை 10 மணிக்கு நேரம் ஒதுக்கியிருப்பதாக டிடிவி தினகரன் எம்.எல்.ஏ.-க்கள் அறிவிப்பு.

பகிர்

There are no comments yet