சென்னை: அதிமுக அணிகள் இணைப்பு என்பது போலியானது. பதவிக்காகப் போடப்பட்ட வணிக ஒப்பந்தம் என அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். அ.தி.மு.க.வின் எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் தலைமையிலான இரு அணிகளும் நேற்று இணைந்துள்ள நிலையில் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி மீது கடுமையான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். சசிகலா ஆதரவுடன் முதல்வர் பதவி ஏற்ற பழனிசாமி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்த போது அதை முன்மொழிந்தவர் பன்னீர்செல்வம்.

இப்போது சுயலாபத்துக்காகவும் பதவிக்காகவும் இணைப்பு நாடகம் ஆடுகிறார். இந்த உடன்படிக்கை எவ்வளவு நாள் நீடிக்கும் என்பது எல்லாம் வல்ல இறைவனுக்கே வெளிச்சம். 1989ல் தொண்டர்களின் விருப்பத்திற்கு இணங்க, ஜெயலலிதா அவர்களை பொதுச்செயலாளராக ஏற்றுக் கொண்டு, அவர் தலைமையில் ஒன்றிணைந்தார்கள். இன்றோ, இவர்களாலேயே ஏற்று கொள்ளப்பட்ட பொதுச்செயலாளரை நீக்குவோம் என்ற அறிவிப்போடு ஏற்பட்டுள்ள உடன்படிக்கை தொண்டனால் ஜீரணிக்க முடியாத துரோகம் ஜெயலலிதா அவர்களின் மறைவுக்கு பின் பன்னீர் செல்வத்தையும் பின் பழனிச்சாமியையும் முதல்வராக்கிய சசிகலாவுக்கு துரோகம் செய்த நபர்களை கழக தொண்டர்கள் மட்டுமல்லாமல் பொது மக்களும் மன்னிக்க மாட்டார்கள். இரட்டை இலை முடங்குவதற்கு காரணமான பன்னீரோடு கைகோர்க்கும் அளவிற்கு சிலரது பதவி வெறி கண்ணை மறைக்கிறதென்றால் எப்படி தொண்டர்கள் ஏற்று கொள்வார்கள், இந்த துரோகிகளால் எப்படி இரட்டை இலையை மீட்க முடியும்?

நேற்று வரை ஊழல் ஆட்சி நடைபெறுவதாக சொன்ன பன்னீர்செல்வத்தோடு எப்படித்தான் இவர்களால் இன்றைக்கு கைக்கோர்க்க முடிகிறதோ? இந்த துரோகிகளால் ஏற்பட்டுள்ள களங்கத்தை போக்குவதற்காகவே, கோடான கோடி கழக தொண்டர்களின் கோரிக்கையை ஏற்று எனது அரசியல் பயணம் தொடரும். துரோகங்கள் ஒரு போதும் வென்றதாக வரலாறு இல்லை! துரோகத்தை வேரறுப்போம்! கழகத்தை காப்போம்,” என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது மன்னார்குடி வகையறாக்களை ஒதுக்கி விட்டு அதிமுக இணைந்ததால் தினகரனுக்கு மிகுந்த சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஜெயா மறைவுக்கு பிறகு வாரிசு இல்லாத கட்சியாக போய்விடும் என்று கருதப்பட்ட அதிமுகவில் தான் திகில் சினிமாக்களை மிஞ்சும் எத்தனை திருப்பங்கள், தினம் தினம் பிரேக்கிங் நியூஸ்கள். ஜெயா மறைவிற்கு பிறகு தினகரன் விஸ்வரூபம் ஒரு விபத்து தான். ஜெயா மறைவிற்கு பிறகு சசிகலா சின்னம்மாவாகி, கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்ற முயற்சித்ததில் ஆச்சரியமில்லை ஆனால் தினகரன் துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டது எதிர்பாராதது. மன்னார்குடி மாபியாவை மக்கள் விரும்பவில்லை என்பது தினகரனுக்கு தெரியும். அதிமுக ஆட்சியில் நலத்திட்டங்கள் மாற்றங்கள் எதையாவது கொண்டுவந்தால் தான் தினகரனால் அரசியலில் நீடித்திருக்க முடியும்.

தினகரனுக்கு உள்கட்சி பிரமுகர்களிடமும் நன்மதிப்போ ஜெயா போல் ஒரு நட்சத்திர அந்தஸ்தோ கிடையாது. லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் சிறிது காலம் (1999-2010) இருந்தவர் அவ்வளவே. கட்சி பொருளாளர் பதவி வகித்தவர் 2011இல் சசிகலாவுடன் ஜெயாவால் வீட்டை விட்டு துரத்தப்பட்டார். சசிகலா மன்னிப்பு கேட்டு மீண்டும் ஒட்டிக்கொண்டார், ஆனால் தினகரன் ஜெயலலிதா மறையும் வரை காத்திருக்க வேண்டியதாயிற்று. தினகரன் எதிர்கொள்ளும் இன்னொரு சிக்கல் என்னவென்றால், மன்னார்குடி குடும்பத்திற்குள்ளேயே அவரது வளர்ச்சியைக் கண்டு பொறாமை கொள்பவர்கள் உள்ளனர். சசிகலாவுக்கு அடுத்தபடியா அறியப்படுபவர் தினகரன் மட்டுமே, மற்றவர்களுக்கு தனி அடையாளம் கிடையாது. தற்போது மா. நடராசன் பேச்சைக் கேட்டுத்தான் தினகரன் நடக்க வேண்டும். தற்போது நிலைமை கைமீறி போயுள்ளதால், ராணுவத்தில் நடத்தும் கொரில்லா தாக்குதல் போல் தினகரன் தாக்குதல் நடத்துவாரா, அல்லது அவரது ஸ்லீப்பர் செல்களைக் கொண்டு காய் நகர்த்துவாரா, பன்னீர் பழனிசாமி ஆட்சி நடத்துவார்களா தினகரன் சசி கையில் பஞ்சாமிர்தமாவார்களா என்று இரண்டொரு நாட்களில் பிரேக்கிங் நியூசில் தெரியும்.

தினகரனை சமாளிக்க மீண்டும் ரெய்டு நாடகத்தை அரங்கேற்ற மோடி முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது. இதையடுத்து தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களின் மீதும், ஆதரவாளர்கள் மீது வருமான வரி சோதனை நடத்தப்படலாம் என தெரிகிறது.

பகிர்

There are no comments yet