சென்னை: அதிமுக அணிகள் இணைப்புக்குப் பிறகு அது குறித்து ஊடகங்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செம்மலை, தமக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்படாதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது என்று கருத்து தெரிவித்துள்ளது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பைக் கூட்டியுள்ளது.

ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு இரண்டு மூன்றாக உடைந்த அதிமுக நேற்று மிகுந்த பரபரப்புக்கு இடையே ஒரே அணியாக இணைந்தது. சென்னையில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த இந்த இணைப்பு விழாவுக்குப்பிறகு ஓபிஎஸ் அணியினருக்கு துணை முதல்வர் உள்ளிட்ட முக்கிய அமைச்சர் பதவிகள் கிடைத்தன.

ஆனால், ஓபிஎஸ் அணி உருவானது முதல் கடந்த 6 மாதங்களாக சசிகலா மற்றும் தினகரன் எதிர்ப்பு நிலைப்பாட்டிலேயே இருப்பவர் முன்னாள் அமைச்சர் செம்மலை. இவருக்கும் அமைச்சர் பதவி கிடைக்கும் என்று அவர் எதிர்பார்த்துக் காத்திருந்தார்.

ஆனால், செம்மலை எம்எல்ஏ அமைச்சராகவில்லை. இதனால் அவரின் சொந்த தொகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சி நிலவுகிறது. இந்த நிலையில், இது குறித்து கருது தெரிவித்த செம்மலை, ‘அமைச்சர் பதவி அளிக்காதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது ‘ என்று கூறியுள்ளார்.

கடந்த 2001-06ம் ஆண்டு அதிமுக ஆட்சியில், ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் சுகாதாரத்துறை மற்றும் கல்வி அமைச்சராக செம்மலை இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓபிஎஸ் அணியின் முக்கிய அமைச்சரும், முதல்வர் எடப்பாடியின் சொந்த மாவட்டமான சேலத்தைச் சேர்ந்தவருமான செம்மலை அதிருப்தி தெரிவித்து பகிரங்கமாக குரல் எழுப்பியிருப்பது அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று அல்லது நாளை செம்மலை தினகரனை சந்திக்க இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பகிர்

There are no comments yet