With inputs from The Hindu
சென்னை: டி.டி.வி.தினகரனை ஒதுக்கிவைத்துவிட்டு முதல்வர் பழனிசாமி அணியும் ஓ.பன்னீர்செல்வம் அணியும் நேற்று முன்தினம் இணைந்தது. இதனால் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர், முதல்வர் பழனிசாமி அரசுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்தித்து கடிதம் கொடுத்தனர். தினகரனின் இந்த நடவடிக்கை இன்றும் தொடர்ந்தது. அமைச்சர் ஆர்.வி.உதயகுமாரிடம் இருந்த மாவட்டச் செயலாளர் பதவியைப் பறித்தார் தினகரன். அதோடு விட்டுவிடாமல் பல அதிரடி அறிவிப்புகளை அடுத்தடுத்து வெளியிட்டார்.
கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளர் பதவியிலிருந்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை நீக்கிவிட்டு மாவட்டச் செயலாளராக செந்தில் பாலாஜியை நியமித்துள்ளார் தினகரன். திருவாரூர் மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து அமைச்சர் காமராஜ் நீக்கப்பட்டு, புதிய செயலாளராக எஸ்.காமராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து அமைச்சர் கே.சி.வீரமணியை நீக்கிவிட்டு, புதிய செயலாளராக எம்.எல்.ஏ பாலசுப்பிரமணியத்தை நியமித்துள்ளார். திருவள்ளூர் மேற்கு மாவட்டச் செயலாளராக ஏழுமலை எம்.எல்.ஏ-யும், தென்சென்னை தெற்கு மாவட்டச் செயலாளராக எம்.எல்.ஏ செந்தமிழனும், புதுக்கோட்டை மாவட்டச் செயலாளராக இருந்த வைரமுத்து நீக்கப்பட்டு, புதிய செயலாளராக பரணி கார்த்திகேயனும், காஞ்சிபுரம் மத்திய மாவட்டச் செயலாளராக எம்.எல்.ஏ கோதண்டபாணியும், அ.தி.மு.க அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன் நீக்கப்பட்டு, கல்லூர் வேலாயுதத்தையும் நியமித்துள்ளார் தினகரன்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக உடையாமல் இருப்பதற்கு ஆட்சியில் இருப்பது ஒரு காரணம் என்றாலும் , அதையும் தாண்டிய ஒருவித கட்டுக்கோப்பும் காரணம் எனலாம். இந்த கட்டுக்கோப்பின் மூலகர்த்தாக்கள் , ஜெயலலிதா , சசிகலா இருவரிடமும் பவ்யம் காட்டிய கட்சிக்காரர்கள் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதே பவ்யத்தை சசிகலாவிடமும் காட்டினர்.
கட்சியின் அதிகார மையங்கள் ஆட்சியையும் கட்டுப்படுத்த நினைத்தபோது ஓபிஎஸ் வெளியேற்றப்பட்டார். ஓபிஎஸ் தனி அணி அமைத்த பின்னரும் ஓபிஎஸ் பக்கம் கட்சி எம்.எல்.ஏக்கள் செல்லாமல் சசிகலா கை காட்டிய எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்ததிலிருந்து சசிகலாவின் வலிமை தெரிய வரும்.
அதே நேரம் சசிகலாவுக்கு நான்காண்டு சிறை தண்டனை கிடைத்தவுடன் இந்த வலிமை குறையும். அடுத்த கட்ட தலைவர்கள் தலையெடுப்பார்கள் என்று நினைத்த நேரத்தில் தான் தினகரன் கட்சிக்குள் கொண்டுவரப்பட்டு துணை பொதுச் செயலாளர் ஆக்கப்பட்டார். அந்த நேரத்தில் தினகரன் பற்றி அறிந்தவர்கள் கூறியது இனி கட்சியை அவர் பார்த்துக் கொள்வார் என்பதே.
அதன்பின்னர் நடந்த அடுத்தடுத்த நிகழ்வுகளில் தினகரன் தொண்டர்கள் மத்தியிலும் , மக்கள் மத்தியிலும் ஏற்றுக்கொள்ளப்படும் அரசியல் தலைவரானார். திஹார் ஜெயில் வாசத்துக்குப் பின்னர் உறுதி குலையாமல் மேலும் வேகம் காட்டி வருவதாக அவரது கட்சிக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.
தினகரன் பேச்சும் , பேட்டியும் அவர்கள் தரப்பை பொதுமக்கள் , கட்சித்தொண்டர்கள் ஏற்றுக்கொள்ளும்படி இருப்பதும் ஒரு காரணம். மேலூர் கூட்டத்தில் தினகரன் பேச்சு தமிழக அரசியல் தலைவர்களில் தெளிவான ஒருவராக அவர் உருவாகி வருவதை காட்டுவதாக அரசையல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுபோன்ற மாற்றங்களும் அதிவிரைவாக ஓபிஎஸ் எடப்பாடி அணிகள் இணைப்புக்கு காரணம் என்கின்றனர். இந்த நிலையில் தான் தினகரனின் விஸ்வரூபம் அதிமுக அணியை சற்று ஆட்டம் காண வைத்துள்ளது.
மேலூர் கூட்டத்துக்கு சில நாட்களுக்கு முன்னர் தினகரன் திடீரென கட்சிப்பொறுப்புக்கு சிலரை நியமித்தார். அதிமுகவிலிருந்து பிரிந்த ஓபிஎஸ் கூட இதுவரை தனது அணியில் கட்சி பொறுப்பாளர்களை நியமிக்கவில்லை. ஆனால் தினகரன் கட்சிப் பதவிகளுக்கு சிலரை நியமித்தவுடன் வேகம் பெற்ற அவர்கள் மேலூர் கூட்டத்துக்கு அதிக அளவில் ஆட்களைத் திரட்டினர்.
இது ஒரு வகையான யுக்தி என்கின்றனர். இதே யுக்தியை தற்போது மீண்டும் தினகரன் கையிலெடுத்திருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். நேற்று வைத்தியலிங்கத்தை கட்சியிலிருந்து நீக்கியதையும் , இன்று திடீரென எஸ்.பி.உதயகுமார் பதவியைப் பறித்ததும் , ராஜன் செல்லப்பா பதவியை பிடுங்கியதையும் இருவரையும் கட்சியை விட்டு நீக்கியதையும் தொண்டர்கள் அதிர்ச்சியுடன் பார்க்கின்றனர்.
விருதுநகர், தஞ்சை மாவட்டத்தில் நிர்வாகிகளை மாற்றியதும் அதிமுக அணியினர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் செயல் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். மறுபுறம் புதிதாக பதவி பெற்றவர்கள் வேகமாக செயல்படும் போது அது தங்கள் தரப்புக்கு மேலும் உத்வேகத்தை கொடுக்கும் என்கின்றனர் தினகரன் ஆதரவாளர்கள்.
அடுத்தடுத்து தினகரன் ஏற்படுத்தும் அதிர்ச்சி காரணமாக எந்த பதிலும் கூறாமல் அதிமுக அமைச்சர்கள் மவுனமாக இருப்பதும் தினகரன் அணியினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியிருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
There are no comments yet
Or use one of these social networks