சென்னை: ஆளுநரைத் தொடர்ந்து சபாநாயகர் தனபாலிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் தர தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் திட்டமிட்டுள்ளனர். ஆளுநரிடம் தினகரன் தரப்பு 19 எம்.எல்.ஏக்கள் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கை இல்லை என கடிதம் கொடுத்தனர். ஆனால் ஆளுநரோ முதல்வரை எம்.எல்.ஏக்கள்தான் தேர்வு செய்ய வேண்டும் என கூறி கையை விரித்துவிட்டார்.

தமிழக சட்டசபையில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தைக் கொண்டுவரும் முன்பு, அந்த தீர்மானத்தைக் கொண்டு வர 24-க்கும் குறையாத எம்.எல்.ஏ-க்கள் தேவை. இந்த அளவுக்கு தினகரன் கோஷ்டியினரிடம் எம்.எல்.ஏ-க்கள் இதுவரை இல்லை. தி.மு.க-வின் ஆதரவு இதற்குத் தேவை. ‘தி.மு.க-வின் உதவியோடு ஜெயலலிதாவின் ஆட்சியைக் கவிழ்ப்பதா’ என்ற தயக்கம் மட்டும் சில எம்.எல்.ஏ-க்களுக்கு இருக்கிறது. இதுவரை 19 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தினகரனுக்கு இருக்கிறது. இன்னும் பத்துப் பேரைச் சேர்த்து மொத்தமாக ராஜினாமா செய்வதும் தினகரனின் திட்டத்தில் இருக்கிறது என்றும் சொல்கிறார்கள்.

இதனால் தனது மணவாடுகள் இருக்கும் காங்கிரசின் உதவியை நாட தினகரன் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. திருநாவுக்கரசுரம், ராமசாமியும் இதற்கு ஒகே சொல்லி விட்டதாகவும், ராகுலின் அனுமதியை பெற்றுவிடலாம் என்றும் கூறப்படுகிறது. செயல் தலைவர் ஸ்டாலின் நாங்கள் எட்டி இருந்து வேடிக்கை மட்டும் பார்க்கிறோம் என்றிருக்கிறார்.

அடுத்த முதல்வராக சபாநாயகர் தனபாலை முன்னிறுத்தும் திவாகரனின் யோசனைக்கு தினகரன் இசைந்துள்ளதாக தெரிகிறது. ஆறு முறை எம்.எல்.ஏ, அமைச்சரவையில் இடம், துணை சபாநாயகர், சபாநாயகர் என்று அ.தி.மு.க ஆட்சிகளில் முக்கிய பங்கு வகித்த தனபால், தற்போது நடந்து வரும் ஆட்சி நீடிக்கவும் பல்வேறு வகைகளில் தனது உதவிகளை அளித்து வருகிறார் என்பது அ.தி.மு.க-வில் உள்ள அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம். நம்பிக்கை வாக்கெடுப்பு முதல் பல்வேறு உதாரணங்கள் அதற்கு உள்ளன.

இந்நிலையில், குறைந்தபட்சம் ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ் இணைந்த உடன் தனக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று தனபால் எதிர்பார்த்தாராம். ஆனால், அதிலும் தனபாலுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால், வேதனையடைந்த தனபால், வெளியூருக்குச் சென்றுவிட்டாராம். பின்னர் அவரது குடும்பத்தினர், சசி குடும்பத்தினரிடம், தனபாலின் வருத்தம் குறித்து சொல்லியுள்ளனர்.

இதைச் சரியாக பயன்படுத்திக் கொண்ட திவாகரன், “அது என்ன அமைச்சர் பதவி… அவரை சி.எம் ஆக்கறோம்… கவலைப்படாதீங்க” என்று ஆறுதல் சொன்னார்களாம். மேலும், தனபாலை முதல்வராக்க வேண்டும் என்ற கருத்தை தாழ்த்தப்பட்ட எம்.எல்.ஏ-க்களும் முன்வைக்கிறார்களாம். கவுண்டர் சமுதாயம், ரெட்டியார் சமுதாயம், முக்குலத்தோர் சமுதாயம் என்று பலரும் முதல்வர் பதவியில் அமர்ந்துவிட்டனர். ஆனால், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் தமிழக முதல்வர் பதவியில் அமரவில்லை என்று அவர்கள் வருத்தம் தெரிவிக்கிறார்களாம்.

அ.தி.மு.க. இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் தனி அணியாக செயல்படுகிறார்கள். நேற்று அவர்கள் கவர்னரை சந்தித்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக கடிதம் அளித்தனர். இதனால் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

சபாநாயகர் தனபாலை முதல்- அமைச்சர் ஆக்க வேண்டும் என்று திவாகரன் தரப்பு கூறி வருகிறது. ஆனால் சில டி.டி.வி. தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர் செங்கோட்டையனை முதல்- அமைச்சர் ஆக்கலாம் என்று யோசனை தெரிவித்துள்ளனர். மூத்த அமைச்சரான செங்கோட்டையன் எந்த அணியையும் சேராதவர். மேலும் அ.தி.மு.க.வில் இரு அணியினரும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி வந்த நிலையில் செங்கோட்டையன் மட்டும் எந்த குற்றச்சாட்டும் கூறாமல் அமைதி காத்தார். எனவே அவரும் சிஎம் ரேஸில் இருப்பதாக தெரிகிறது.

பகிர்

There are no comments yet