சென்னை: “கடவுளைத் தவிர யாராலும் எங்களை மிரட்ட முடியாது. எனது ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் கட்சியைக் காப்பாற்ற வேண்டும் என்ற தியாக உணர்வோடு புதுச்சேரி சென்றுள்ளனரே தவிர, யாருக்கும் பயந்து ஓடவில்லை” என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
அதிமுக அணிகள் இணைப்புக்குப் பின்னர் ஆளுநரைச் சந்தித்த டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் முதல்வர் பழனிசாமியை மாற்றக் கோரி கடிதம் கொடுத்தனர்.

பின்னர், புதுச்சேரி சென்றனர். கடந்த சில நாட்களாக புதுச்சேரியில் தங்கியுள்ள டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் அவ்வப்போது ஊடகங்களுக்கு பேட்டியளித்துவருகின்றனர். தனது ஆதரவு நிர்வாகிகள் மற்றும் எம்எல்ஏக்களை முதல்வர் பழனிசாமிக்கு எதிராக பேசவிட்டு, தொடர்ந்து தினகரன் மவுனம் காத்து வருவதாக விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 26-ம் தேதி) சென்னை அடையாறில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், “கடவுளைத் தவிர யாரும் எங்களை மிரட்ட முடியாது. எனது ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் கட்சியைக் காப்பாற்ற வேண்டும் என்ற தியாக உணர்வோடு புதுச்சேரி சென்றுள்ளனரே தவிர யாருக்கும் பயந்து ஓடவில்லை. என்னுடன் துணை நிற்பவர்கள்தான் உண்மையில் தர்மத்தின் பக்கம் நிற்கிறார்கள். தமிழக அரசின் சூழலை இந்தியாவே கவனித்து வருகிறது. அதிமுகவின் பொதுச் செயலாளரை நீக்குவேன் என்று கூறியவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும். அதற்காகவே ஆளுநரிடம் எனது ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் கடிதம் கொடுத்துள்ளனர். நியாயம் நிச்சயம் வெல்லும்; ஆளுநர் நல்ல நடவடிக்கை எடுப்பார்” எனக் கூறினார்.

இது குறித்து அங்கிருந்த ஆதரவாளர் ஒருவர் கப்ஸா நிருபரிடம் கூறும்போது, கட்சியினரை மறைந்த எங்கள் அம்மா ஜெயலலிதாதான் மிரட்டு கட்டுக்குள் வைத்திருந்தார். இப்போது மேலுலகத்தில் எமனும், சித்ரகுப்தனும்என்ன பாடு படுகிறார்கள் என்று தெரியவில்லை. அதன் பின்னர் சின்னம்மா மிரட்டினார், அவரும் பெங்களூர் சிறையில் இருக்கிறார். அதனால் தான் அண்ணன் இப்போது கடவுளைத் தவிர யாராலும் எங்களை மிரட்ட முடியாது என்று கூறியுள்ளார் என்று விளக்கம் கொடுத்தார்.

பகிர்

There are no comments yet