முதல்வர் பழனிசாமிக்கு எதிராக எம்எல்ஏக்கள் போர்க்கொடி, ஆதரவு எம்எல்ஏக்களின் ஆட்சி கலைப்பு கோஷம் என தமிழக அரசில் சிக்கல்கள் உருவாகியுள்ளதால், சட்டப்பேரவையை முடக்கும் முடிவை ஆளுநர் எடுக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

அதிமுகவில் கடந்த பிப்ரவரி மாதம் பிளவு ஏற்பட்டது. பிரிந்திருந்த முதல்வர் பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணிகள் கடந்த 21-ம் தேதி இணைந்தன. அதைத் தொடர்ந்து துணை முதல்வராக ஓபிஎஸ் பொறுப்பேற்றார்.

அணிகள் இணைப்பு முடிந்ததும், சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்க பொதுக்குழு கூட்டி முடிவெடுக்கப்படும் என்று வைத்திலிங்கம் எம்பி அறிவித்தார். இதற்கு டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன்பின், தற்போது வரை பல்வேறு குழப்பங்கள் அரங்கேறி வருகின்றன.

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் முதலில், ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து முதல்வர் பழனிசாமிக்கான ஆதரவை வாபஸ் பெற்றதுடன், புதுச்சேரிக்கு சென்றுவிட்டனர். அவர்களை மீண்டும் தங்கள் பக்கம் கொண்டுவர முதல்வர் பழனிசாமி எடுத்த முயற்சிகள் பலிக்காததால், 19 பேரையும் தகுதிநீக்கம் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

ஒருவேளை, சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், அதை சமாளிக்க இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்பட்டது. தகுதி நீக்க நடவடிக்கையால் தினகரன் அணிக்கு மேலும் எம்எல்ஏக்கள் செல்வதை தடுக்கலாம் என முதல்வர் பழனிசாமி தரப்பு கருதியது. ஆனால், மேலும் 2 எம்எல்ஏக்கள் தற்போது தினகரன் அணிக்கு தாவியுள்ளனர். இது முதல்வர் தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து அடுத்தகட்டமாக என்ன செய்வது என்று முடிவெடுக்க, நாளை 28-ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் கூட்டத்தை முதல்வர் பழனிசாமி கூட்டியுள்ளார். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அவைத் தலைவர் மதுசூதனன் உள்ளிட்ட நிர்வாகிகளும் பங்கேற்கின்றனர். இக்கூட்டத்தில், பொதுக்குழுவை கூட்டி சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்குவது குறித்து முடிவெடுக்கப்பட உள்ளது. பொதுக்குழுவில் சசிகலா நீக்கப்படும் பட்சத்தில் தினகரன் தரப்பு நெருக்கடி அளிக்க வாய்ப்புள்ளதால் அதையும் சமாளிக்க முதல்வர் பழனிசாமி, ஓபிஎஸ் தரப்பினர் தயாராகி வருகின்றனர்.

இதற்கிடையில், முதல்வர் பழனிசாமி ஆதரவு எம்எல்ஏக்களே ஆட்சிக் கலைப்பு கோஷம் எழுப்பி வருகின்றனர். கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த கோவை சூலூர் எம்எல்ஏ கனகராஜ், ‘ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்கலாம்’ என நேற்று முன்தினம் குறிப்பிட்டார். இந்நிலையில், நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த குன்னம் தொகுதி எம்எல்ஏ ராமச்சந்திரன், ‘இந்த ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க வேண்டும்’’ என்று தன் சொந்த கருத்தாக தெரிவித்தார்.

கட்சியைக் காப்பாற்ற அறுவை சிகிச்சை மேற்கொள்வேன் என தினகரன் தெரிவித்திருந்தார். அதன்படி, சிறையில் இருக்கும் சசிகலாவின் ஒப்புதலுடன் நிர்வாகிகளை மாற்றுவதாக கூறி, அமைப்புச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் என ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட பலரையும் தினகரன் மாற்றி வருகிறார். இதுவரை 100-க்கும் மேற்பட்ட தனது ஆதரவாளர்களை புதிய நிர்வாகிகளாக நியமித்துள்ளார்.

முதல்வருக்கு 19 எம்எல்ஏக்கள் ஆதரவை வாபஸ் பெற்றுள்ளதால், பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் அழைப்பு விடுக்க வேண்டும் என்று திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆளுநரை வலியுறுத்தி வருகின்றன. எனவே, தமிழகத்தின் இந்த அரசியல் சிக்கலை பயன்படுத்தி ஆளுநர் சட்டப்பேரவையை முடக்கி வைத்து, அதன்பின் நடவடிக்கை எடுக்கலாம் என கூறப்படுகிறது. தமிழகத்தின் தற்போதைய நிலைமையை மத்திய உளவுத் துறை மூலம் மத்திய அரசும் தமிழக ஆளுநரும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

தமிழக அரசின் செயல்பாடுகளை கவனித்து, முதல்வர் பழனிசாமிக்கு எம்எல்ஏக்கள் ஆதரவு மேலும் குறைந்து, அவரால் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டால் அதுகுறித்த அறிக்கைகளை மத்திய அரசுக்கு அனுப்பி, சட்டப்பேரவையை முடக்கும் முடிவை ஆளுநர் எடுக்க வாய்ப்புள்ளது. இந்த சூழல் அறிந்தே முதல்வர் பழனிசாமி எதிர்ப்பு எம்எல்ஏக்களின் எண்ணிக்கையை குறைக்க அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

இதையடுத்து மோடி உத்திரவின்பேரில் எடப்பாடிக்கு ஆதரவாக உபி, மபி, ராஜஸ்தான் மாநிலங்களிலிருந்து பிஜேபி எம்எல்ஏக்கள் 10 பஸ்களில் சென்னை நோக்கி விரைவு என டெல்லியில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

There are no comments yet