சென்னை: அதிமுக நிர்வாகிகள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 50 எம்எல்ஏக்கள் பங்கேற்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. மொத்தம் 80 எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் மட்டுமே பங்கேற்றனராம் அதிமுகவின் பொதுக்குழு செயற்குழு கூட்டம் பற்றி முடிவு செய்யவும், தினகரன் நியமனம் செல்லாது என அதிமுக தலைமை நிலையத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஜெயாடிவி, நமது எம்ஜிஆரை மீட்பது, பொதுக்குழு கூட்டம் கூட்டுவது தொடர்பாகவும் இன்றைய கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆலோசனைக்கூட்டம் 2 மணி நேரம் நடைபெற்றது. அதிமுக இணைப்பிற்குப் பிறகு நடைபெற்ற கூட்டம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இந்த கூட்டத்தில் டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 21 பேர் பங்கேற்கவில்லை. அவர்களைத் தவிர மீதுமுள்ள எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் பங்கேற்றிருக்க வேண்டும்.

ஆனால் 50க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் இன்றைய கூட்டத்தை புறக்கணித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கூட்டத்தில் யார் யார் பங்கேற்றார்கள் என்பது பற்றிய பட்டியல் ஊடகத்தினருக்கு தரவில்லையாம்.

ஏற்கனவே தங்களின் ஸ்லீப்பர் செல்கள், எடப்பாடி பழனிச்சாமி அணியில் இருப்பதாக கூறினார் டிடிவி தினகரன். குடியரசுத்தலைவர் சந்திக்க செல்லும் போது 50 எம்எல்ஏக்கள் செல்வோம் என்று தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்க தமிழ் செல்வன் கூறினர்.

இப்போது அது உண்மையாகியுள்ளது. இன்றைய கூட்டத்தில் 80 பேர் மட்டுமே பங்கேற்றுள்ளனர் என்பதால் மொத்தம் 80 எம்எல்ஏக்கள் மட்டுமே எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு ஆதரவா இருக்கிறார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதையடுத்து ஆடிட்டர் குருமூர்த்தி கையை விரித்து விட்டதால் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி இருவருமே மோடியை சந்தித்து ஆலேசனை கேட்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

பகிர்

There are no comments yet