சென்னை: அதிமுக துணைப் பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் செயல்பட முடியாது என்றும், நமது எம்ஜிஆர், ஜெயாடிவியை கைப்பற்றுவோம் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தினகரனை தாக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மொத்தம் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சசிகலாவை நீக்கியோ, திட்டியோ எந்த தீர்மானமும் நிறைவேற்றவில்லை. அதிமுக துணை பொது செயலாளராக டிடிவி தினகரன் செல்பட முடியாது. ஆகஸ்ட் 10ஆம் தேதியன்று டிடிவி தினகரன் நீக்கப்பட்டு விட்டார். தேர்தல் ஆணையம் டிடிவி தினகரனை துணைப் பொதுச்செயலாளராக ஏற்க முடியது என்று கூறியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டதையே தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை. இதுவரை அங்கீகரிக்கப்படாத ஒருவர் துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்படுவதும், அப்படி நியமிக்கப்பட்டவர் பணிகளில் ஈடுபடுவதும் திட்ட விதிகளுக்கு புறம்பானது. ஜெயலலிதா நியமித்த நிர்வாகிகளை நீக்கவோ, புதிதாக நிர்வாகிகளை நியமிக்கவோ தினகரனுக்கு எந்த வித தகுதியும் கிடையாது. ஜெயலலிதா நியமித்த நிர்வாகிகள் அந்தந்த பணிகளில் தொடர்கின்றனர். லட்சக்கணக்கான தொண்டர்களின் பங்களிப்பில் உருவான ஜெயா டி.வி மற்றும் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது எம்.ஜி.ஆர் ஆகியவற்றை சட்ட ரீதியாக மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக ஜெயா டிவியின் தலைமை செயல் அதிகாரி விவேக் ஜெயராமன் கூறியிருப்பதாவது: மறைந்த முதல்வர் ஜெயலலிதா அதிமுகவை துணிந்து வழிநடத்தவும், தொண்டர்களை அரசியல் தெளிவுடன் நடைபோட வைக்கவும் தீவிரமாக செயல்பட்டபோது ஜெயா டிவியும் உற்ற துணையாக உடன் வந்தது. சமீபகாலமாக ஜெயா டிவிக்கு மறைமுகமாக விடுக்கப்படும் சவால்கள் அதிகம்.

முதல்வர் கே.பழனிசாமி தலைமையில் கூடிய சிலர் ஜெயா டிவியையும், நமது எம்ஜிஆர் நாளிதழையும் மீட்க சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தீர்மானம் இயற்றியுள்ளனர். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இவை இரண்டும் தனியார் நிறுவனங்கள். யாரும் சர்வசாதாரணமாக உள்ளே புகுந்து கைவசமாக்கக்கூடிய நிலையில் இரு நிறுவனங்களும் இல்லை.இந்த விவரங்கள் தெரிந்தும், அதிகாரம் தங்கள் கையில் இருக்கிறது என்பதற்காக ஜெயா டிவியை மீட்கப்போவதாக தீர்மானம் இயற்றியிருப்பது, மக்கள் அபிமானம் பெற்ற ஓர் ஊடகத்துக்கு விடப்பட்டுள்ள பகிரங்க மிரட்டலாகத் தெரிகிறது.

மக்களின் பேரபிமானம் பெற்ற ஒரு நடுநிலை தொலைக்காட்சியை அரசு நிர்வாகமோ, அரசியல் கட்சியினரோ எப்படி கையகப்படுத்த முடியும்? அடுத்தடுத்த நெருக்கடிகள் மூலம் ஒரு நிறுவனத்தை அடிபணிய வைத்துவிட முடியும் என யாரும் கனவுகாண வேண்டாம். ரெய்டு, வழக்கு என எங்களுக்கு மறைமுக மிரட்டல்கள் விடுக்கப்படுகிறது. பொய் வழக்குகளை ஜோடித்து எங்களை வீழ்த்த நினைத்தால் அதை சட்டரீதியாக சந்திப்போம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

பகிர்

There are no comments yet