சென்னை : அமைச்சர் கருப்பண்ணன் நேரில் தினகரனை சந்தித்து பேசியதும், மேலும் 16 எம்எல்ஏக்கள் தினகரனுக்கு ஆதரவாக இருப்பதும் தெரியவந்துள்ளது. இதனால் முதல்வர் எடப்பாடி அதிர்ச்சியடைந்து சிலரை நேரில் அழைத்து சத்தம்போட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக இரண்டாக உடைந்து, தற்போது ஒரே அணியாக செயல்படத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், டிடிவி தினகரன் தனியாக செயல்பட ஆரம்பித்தார். அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என்று கூறி, கவர்னர் வித்யாசாகர் ராவிடம் மனுக் கொடுத்தனர். பின்னர் அவர்கள் புதுவை அருகில் உள்ள ஒரு ரிசார்ட்டில் தங்கியுள்ளனர். அதன்பின் அவருக்கு மேலும் 2 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்ததோடு, ரிசார்ட்டிலும் தங்கியுள்ளனர். இதனால் ஆதரவு எண்ணிக்கை 21 ஆக அதிகரித்தது. மேலும், திருப்பரங்குன்றம் எம்எல்ஏ போஸ், தினகரனை சந்தித்தார். மாலையில் அமைச்சர் உதயகுமாருடன் நிருபர்களைச் சந்தித்து எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்தார். நேற்று ராயப்பேட்டையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்திலும் அவர் கலந்து கொண்டார். வெளியில் வந்தபோது சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தால் எதிர்ப்பேன். ஆனால் எடப்பாடி அரசு நீடிக்க வேண்டும் என்று மாறி, மாறி பேசி குழப்பி விட்டுச் சென்றார்.

இதற்கிடையில், எடப்பாடி அணியில் தங்களுடைய ஆதரவு எம்எல்ஏக்கள் ஸ்லீப்பர் செல்களாக இருப்பதாக தினகரன் குறிப்பிட்டிருந்தார். இது குறித்து மத்திய, மாநில உளவுத்துறை போலீசார் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அதில் அமைச்சர்களும் கண்காணிக்கப்பட்டனர். ஏற்கனவே தினகரன் ஆதரவு நிலையில் இருந்த உடுமலை ராதாகிருஷ்ணன், ஓ.எஸ்.மணியன், செல்லூர் ராஜூ, பாலகிருஷ்ணாரெட்டி ஆகிய அமைச்சர்கள் நேரடியாக ஆதரவு தெரிவித்து வந்தனர். ஆனால் இவர்கள் எடப்பாடி அரசுக்கு எதிராக பேசாமல் கடந்த சில நாட்களாக அமைதி காத்துவருகின்றனர்.
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளராக இருந்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன், கடந்த சில நாட்களாக தினகரனுடன் தொடர்பில் இருந்தார். அவருடன் செல்போனிலும் பேசி வந்தார். இதை மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போதுதான் தினகரன், திவாகரன், நடராஜன் ஆகியோரை கொடி கட்டாத காரில் சென்று சந்தித்துப் பேசியுள்ளது தெரியவந்தது. இதை செல்போன் உரையாடலிலும் கண்டுபிடித்தனர். அதன்பின்னர் அவர் தினகரனை 2வது முறையாகவும் சென்னையில் சந்தித்துப் பேசியுள்ளார். இது குறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கருப்பண்ணனை அழைத்து சத்தம் போட்டுள்ளார். நம்பிக்கையாக இருந்த நீங்களே இப்படி செய்யலாமா என்றும் கேட்டுள்ளார். அப்போது ஆட்சிக்கு கெட்ட பெயர் வராது என்று உறுதியளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் எடப்பாடி அணியில் அவருக்கு நெருக்கமாக இருந்த கருப்பண்ணனே எதிர்முகாமில் தொடர்பில் இருப்பதுபோல மேலும் 15 பேர் இதுபோல தொடர்பில் இருக்கும் தகவல்கள் தெரியவந்துள்ளது. இதனால் அந்த 16 பேரையும் கண்காணிக்கும் பணியில் மத்திய, மாநில உளவுப் பிரிவு போலீசார் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இவர்கள், இப்போது அமைதியாக இருந்தாலும், கவர்னர், சட்டப்பேரவையில் மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிட்ட பிறகு நேரடியாக தினகரனுக்கு ஆதரவு அளிப்பார்கள் என்று கூறப்படுகிறது. இது தமிழக அரசியலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.

பகிர்

There are no comments yet