சென்னை: எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் அணிகள் இணைந்து விட்டாலும், அதிமுக பெயர் மற்றும் சின்னத்தை மீட்பதில் சட்டச்சிக்கல் எழுந்துள்ளதால், அதுகுறித்து மத்திய அமைச்சர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் தமிழக அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதேநேரத்தில், தங்களை கேட்காமல் எந்த முடிவும் எடுக்கக் கூடாது என்று தேர்தல் ஆணையத்தில் தினகரன் அணியினர் மனு அளித்துள்ளனர். இதனால் அதிமுகவில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது.ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக இரண்டு அணியாக உடைந்தது. சசிகலா அணி, ஓ.பி.எஸ். அணி என்று இரண்டாக செயல்பட்டது. இந்த நிலையில் ஜெயலலிதா மறைவால் காலியாக இருந்த ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது இரண்டு அணிகள் சார்பில், வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டனர். இரண்டு அணியினரும் இரட்டை இலை சின்னத்தை பெற முயற்சி செய்தனர். இதனால், ஏற்பட்ட சிக்கலை தொடர்ந்து தேர்தல் ஆணையம் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தையும், கட்சியின் பெயரையும் முடக்கியது.

மேலும் சசிகலா அணிக்கு அதிமுக(அம்மா) என்ற பெயரும், ஓ.பி.எஸ். அணிக்கு அதிமுக(புரட்சி தலைவி அம்மா) என்ற பெயரும் ஒதுக்கப்பட்டது. மேலும் சசிகலா அணியினர் தேர்தலில் போட்டியிட தொப்பி சின்னமும், ஓ.பி.எஸ். அணிக்கு இரட்டை விளக்கு மின் கம்பம் சின்னமும் வழங்கப்பட்டது. கடைசியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா காரணமாக இடைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.தொடர்ந்து இரண்டு அணியினரும் சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்தை அணுகினர். போட்டி போட்டு கொண்டு தேர்தல் ஆணையத்தில் ஆவணங்களை தாக்கல் செய்தனர். இதற்கிடையில் இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் அதிமுக அம்மா அணியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஜெயிலில் அடைக்கப்பட்டார். அவர் சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் நிலைமை மாறியது. சசிகலா அணியில் இருந்து பிரிந்து எடப்பாடி அணியாக உருவானது. தொடர்ந்து அவர்கள் சசிகலா குடும்பத்தை ஒதுக்கும் நிலைப்பாட்டை எடுத்தனர். இதனால் எடப்பாடி, டி.டி.வி.தினகரன் அணியினரிடையே ேமாதல் போக்கு உருவானது.

இந்த நிலையில் பிரிந்து சென்ற ஓ.பி.எஸ். அணி, எடப்பாடி அணியுடன் இணைந்தது. இதனால் மீண்டும் இரட்டை இலை சின்னத்தை மீட்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வருகிற 12ம் தேதி சென்னையில் பொதுக்குழுவை கூட்டியுள்ளனர். அதில் சசிகலாவை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்குவது என்று முடிவு செய்துள்ளனர். ஏனெனில் பொதுக்குழுதான் சசிகலாவை பொதுச் செயலாளராக தேர்வு செய்தது. அதே பொதுக்குழுவில் இப்போது சசிகலாவை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்குவது என்று முடிவு செய்துள்ளனர்.இந்தநிலையில், எடப்பாடி அணி தரப்பில் அமைச்சர்கள் பி.தங்கமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், ஓ.பி.எஸ். அணி சார்பில் மைத்ரேயன் எம்பி, மனோஜ் பாண்டியன் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு டெல்லி சென்றனர். அவர்கள் நேற்று காலை 10 மணியளவில் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளைசந்திப்பதாக இருந்தது. இதைத் தொடர்ந்து அமைச்சர்களின் சார்பில் வக்கீல்கள் சிலர் நேற்று தேர்தல் ஆணையத்துக்கு சென்றனர். தலைமை தேர்தல் அதிகாரி ஏ.கே.அச்சல் அங்கு இல்லை.

இந்த நிலையில், இரு அணியினரும் இணைந்து விட்டதாக தேர்தல் ஆணையத்தில் மனு கொடுக்க முடியாத சிக்கல் தற்போது எழுந்துள்ளது. ஏனெனில் அதிமுக அம்மா அணிக்கு சசிகலாதான் பொதுச் செயலாளர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நேரத்தில், சின்னத்தை அவர்களுக்கு கொடுக்கக் கூடாது என்றுதான் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் தேர்தல் ஆணையத்தில் மனு கொடுக்கப்பட்டது. மேலும் நாங்கள்தான் உண்மையான அதிமுக என்றும் அந்த மனுவில் தெரிவித்திருந்தனர். அந்த மனுவை வைத்துத்தான் சின்னம் முடக்கப்பட்டது. கட்சியின் பெயரை இருவரும் பயன்படுத்தக் கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. தற்ேபாது அந்த மனுவை வாபஸ் பெற்றால், சசிகலாதான் கட்சியின் பொதுச் செயலாளர் என்று ஆகிவிடும் என்று சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதனால் எடப்பாடி அணியினரும், ஓபிஎஸ் அணியினரும் சேர்ந்ததால் தற்போது இவர்கள் வசம் அதிக எம்பி, எம்எல்ஏக்கள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் உள்ளனர். இதனால் எங்களுக்குத்தான் அதிமுக என்று புதிய மனுதான் தாக்கல் செய்ய முடியும் என்றும் சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்னளர். இதனால், இந்த விவகாரத்தில் என்ன செய்வது, தாங்கள் இணைந்து விட்டோம் என்று எப்படி மனு கொடுப்பது, எப்படி அதிமுகவை மீட்பது என்பதில் சட்டச் சிக்கல் உருவாகியிருப்பது குறித்து தமிழக அமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி, நிர்மலா சீத்தாராமன் ஆகியோரை நேற்று சந்தித்துப் பேசினர். தொடர்ந்து அவர்கள் டெல்லியிலேயே முகாமிட்டுள்ளனர். இதற்கிடையில் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் மட்டும் நேற்று இரவு சென்னை திரும்பினார். தமிழக அட்வகேட் ஜெனரல் ராஜினாமா செய்ததால், புதிய அட்வகேட் ஜெனரல் நியமனம் குறித்து முதல்வருடன் ஆலோசனை நடத்திய பிறகு, இன்று மீண்டும் டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளார். இன்று காலையில் தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்துப் பேச அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் டி.டி.வி.தினகரன் அணியை சேர்ந்த அதிமுக கர்நாடகா மாநில செயலாளர் புகழேந்தி, முன்னாள் எம்பி அன்பழகன் ஆகியோர் தேர்தல் ஆணையத்தில் நேற்று காலையில் மனு ஒன்றை அளித்தனர். பின்னர் புகழேந்தி அளித்த பேட்டி:அதிமுகவை பொறுத்த வரையில் பொதுச்செயலாளர் இல்லாத பட்சத்தில் துணை பொது செயலாளருக்கு தான் அனைத்து அதிகாரமும் உள்ளது. அதன் அடிப்படையில் தான் கட்சி குறித்த அனைத்து பணிகளையும் தினகரன் செய்து வருகிறார். இதைத்தடுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை. முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னம், கட்சியின் பெயரை மீண்டும் பெறுவதற்காக எங்களது அணி சார்பாக லட்சக்கணக்கான பிரமாண பத்திரங்களை ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளோம். ஆனால் ஓ.பி.எஸ், எடப்படி பழனிசாமி இருவரும் ஒன்றிணைந்துக் கொண்டு பிரமாண பத்திரத்தை வாபஸ் வாங்க உள்ளதாக தெரிந்து கொண்டாம். அவ்வாறு எதுவும் நடந்து விடாமல் இருப்பதற்காக தான் தற்போது ஆணையத்தில் புதிய மனு ஒன்றை கொடுத்துள்ளோம். அந்த மனுவில் “எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் அணி சார்பாக தேர்தல் ஆணையத்தில் ஏதேனும் புதியதாக மனு தாக்கல் செய்தாலோ அல்லது தாக்கல் செய்துள்ள மனுக்களை திரும்பப்பெற முயற்சித்தாலோ எங்களிடம் தெரிவித்து அதுகுறித்த கருத்தை கேட்டறிய வேண்டும்” என குறிப்பிட்டுள்ளோம்.

இதைத்தவிர அதிமுக கட்சிக்கு உரிய லெட்டர் பேர்டை பயன்படுத்தும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கு மட்டுமே உள்ளது. ஆனால் எடப்பாடி பழனிசாமி முதல்வர் என்ற போர்வையில் அதனை தவறாக பயன்படுத்தி வருகிறார். மேலும் ஆணையத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ள விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியை கணக்கில் வைத்துக் கொள்ள முடியாது. ஏனெனில் அதற்கு முழு உரிமையும் தினகரன், சசிகலாவிற்கு மட்டும் தான் உள்ளது. தேர்தல் ஆணையத்தை பொருத்தவரையில் நாம் அனைவரும் சமமானவர்கள். அதனால் அதற்கு தலை வணங்கி தான் செல்ல வேண்டும். அதனால் பிரமாண பத்திரங்களின் வாபஸ் குறித்து தேர்தல் ஆணையம் தான் ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும்.

அம்மா அணி, புரட்சி தலைவி அம்மா அணி என பிரித்து வைத்துக்கொண்டு ஓபிஎஸ், மற்றும் எடப்பாடியும் தமிழக மக்களை ஏமாற்றி வருகின்றனர். இவர்கள் தான் சசிகலாவை பற்றி பேசி வருகிறார்களே தவிர, அவர் இவர்களை பற்றி ஒரு வார்த்தைக்கூட பேசியதில்லை. மேலும் அதிமுக இந்த நிலைமைக்கு வரை ஒபிஎஸ் தான் காரணம். ஆனால் அவரை அழைத்து துணை முதல்வர் பதவியை கொடுத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. இது மிகவும் துரோகத்தனமான செயலாகும். இந்நிலையில் அடுத்த மாதம் 12ம் தேதி அதிமுகவின் பொதுக்குழுவை கூட்டப்போவதாக தற்போது தெரிவித்துள்ளனர். இந்த கூட்டத்தை கூட்டும் முழு அதிகாரம் சசிகலா, தினகரனுக்கு தான் உள்ளது. அதனால் அவர்கள் கூட்டுவது உண்மையான பொதுக்குழு கூட்டம் கிடையாது.

எடப்பாடி பழனிசாமி மற்றும் அவருடன் இருப்பவர்கள் அனைவரும் எந்த அணியில் இருக்கிறார்கள் என்பது அவர்களுக்கே தெரியாத ஒன்றாகும். எங்களை பொறுத்த வரையில் ஆட்சியை கவிழ்க்க நாங்கள் எதையும் செய்யமாட்டோம். ஏனெனில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நாற்காலி தற்போது ஆட்டம் கண்டுள்ளது. அது தானாகவே கவிழ்ந்து விடும். அதனால் அவர் தான் ஆட்சியை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். மேலும் ஏற்கனவே சூழ்ச்சி செய்து ஒருமுறை தினகரனை கைது செய்து விட்டனர். ஆனால் மறுமுறை அவர் கைது செய்ய நேரிட்டால் கண்டிப்பாக தினகரன் முதல்வர் பதவியில் அமர்வது உறுதி. விரைவில் தினகரன் உட்பட நாங்கள் அனைவரும் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்வோம். ஏனெனில் அதிமுகவின் கட்சி, ஆட்சி, அதிகாரம் எல்லாம் தினகரனிடம் தான் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

There are no comments yet